“ஏங்க.. மன அழுத்தமா.. என்ன பிரச்சனைனாலும் கூமாபட்டி போங்க”.. இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் கிராமம்!
சென்னை: இணையவாசிகளால் கூமாபட்டி இப்போது ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டி கிராமத்தின் சிறப்புகள் பற்றி ஒருவர் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களால் அந்த கிராமம் பற்றி சமூக வலைதளங்களில் பலரும் பேசி வருகின்றனர். இதனால் இணையத்தில் கூமாபட்டி ட்ரெண்ட் ஆகி வருகிறது.
"ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் போக வேண்டாம்.. நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க.. சொர்க்க பூமிங்க.. தண்ணிய பாருங்க.. ஏங்க சர்பத் மாதிரி, பவண்டோ, செவன்-அப் மாதிரி இருக்குங்க.. தென் மாவட்டத்தில் கூமாபட்டி தனி ஐலேண்டு" என ஒருவர் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.

கூமாபட்டி தனி ஐலேண்டு
"தமிழ்நாட்டிலேயே ஏன்.. உலகத்துலயே இந்த மாதிரி ஊர் இல்லைங்க.. உங்களுக்கு லவ் ஃபெயிலியரா? 4 குழந்தை பெற்றும் வாழ்க்கை சந்தோஷமா இல்லையா? கவலைப்படாதீங்க.. கூமாபட்டிக்கு வாங்க.. இந்த தண்ணில குளிச்சு பாருங்க.. எந்த வியாதியும் வராது. சொர்க்க பூமிங்க இது" என இஷ்டத்துக்கு பேசி வீடியோக்களை வெளியிட்டு வந்தார் ஒருவர்.
இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. இந்த வீடியோக்களை நகைச்சுவையாக கருத்துப் பதிவிட்டு பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதையடுத்து, இன்ஸ்டா வ்ளாகர்களும் (Vloggers) கூமாபட்டிக்கு படையெடுக்கத் தொடங்கி உள்ளனர்.
கூமாபட்டி எங்கே இருக்கிறது?
தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் தான் கூமாபட்டி. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கூமாபட்டி சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த ஊருக்கு அருகில் பிளவக்கல் அணை உள்ளது. அழகான, இயற்கை சூழல் நிறைந்த கிராமம் தான் கூமாபட்டி.
கூமாபட்டி முத்தாலம்மன் கோவில் தேரோட்ட விழா பிரசித்தி பெற்றது. கூமாபட்டி சுற்று வட்டார கிராம மக்கள், முத்தாலம்மனை வணங்கியே விவசாயப் பணிகளைத் தொடங்குகின்றனர்.
கூமாபட்டிக்கு வந்த சோதனை
இந்த சிறு கிராமம் தான் இன்ஸ்டா ரீல்ஸ்களால் தற்போது பேமஸ் ஆகியுள்ளது. கூமாபட்டி உலக லெவல் ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில், அண்மையில் கூமாபட்டியில் வெறி நாய் கடித்து 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கூமாபட்டியில் வெறி நாய் ஒன்று அப்பகுதியில் நடந்து சென்ற மக்களை விரட்டி விரட்டிக் கடித்துக் குதறியுள்ளது. அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 40க்கும் மேற்பட்டோரை கடித்து ஊருக்கே மரண பயம் காட்டிய அந்த வெறி நாய் உள்ளாட்சி நிர்வாகத்தால் பிடிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications