நீலகிரி: பாஜக- அதிமுகவினரிடையே தள்ளு முள்ளு- விரட்டியடித்த போலீஸ்- மறியலில் அண்ணாமலை, எல். முருகன்!
ஊட்டி: நீலகிரி லோக்சபா தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள் ஒரே நேரத்தில் பெரும் எண்ணிக்கையில் ஒன்று திரண்டனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட, போலீசார் இரு கட்சியினரையும் அப்பகுதியில் இருந்து விரட்டியடித்தனர். அப்போது போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதேநேரத்தில் போலீசார் தடியடி நடத்தியதாக பாஜகவினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திர திருநாள் என்பதால் இன்று தமிழ்நாட்டில் பெரும்பாலான தொகுதிகளில் நல்ல நேரத்தில் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். நல்ல நேரம் முடிவதற்குள் வேட்பு மனுத் தாக்கல் செய்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பல இடங்களில் அரசியல் கட்சியினரிடையே தள்ளு முள்ளு, மோதல்கள் என பதற்றம் நிலவியது.

வடசென்னை லோக்சபா தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் இன்று ஒரே நேரத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அப்போது யார் முதலில் டோக்கன் பெற்றது? யார் முதலில் வேட்பு மனுத் தாக்கல் செய்வது என்பது குறித்து இரு கட்சி நிர்வாகிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சர் சேகர் பாபு மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இருவர் முன்னிலையில்தான் இந்த களேபர சூழல் ஏற்பட்டது.
இதேபோல நீலகிரி தொகுதியில் பாஜக, அதிமுகவினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. நீலகிரி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச் செல்வன் போட்டியிடுகிறார். நீலகிரியில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான சிட்டிங் எம்பி ஆ.ராசா மீண்டும் போட்டியிடுகிறார்.

நீலகிரியில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக பெரும் எண்ணிக்கையிலான பாஜகவினருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, வேட்பாளர் எல்.முருகன் உள்ளிட்டோர் வருகை தந்தனர். அதே நேரத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுகவினரும் ஒன்று திரண்டனர். பாஜகவினரால் தாங்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்ய முடியவில்லை; தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடியப் போகிறது என்கிற கோபத்தை அதிமுகவினர் வெளிப்படுத்தினர். இதனால் அதிமுக- பாஜகவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாஜகவினர் மோடி, மோடி, மோடி என உரத்து முழக்கம் எழுப்ப அசம்பாவிதம் மற்றும் மோதல் உருவாகும் நிலைமை உருவானது. இதனால் இரு கட்சியினரையும் அப்பகுதியில் இருந்து போலீசார் விரட்டியடித்தனர்.

அதேநேரத்தில் பாஜகவினரோ, தங்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்துவிட்டனர். அதனால் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஓயமாட்டோம் என எல்.முருகன், அண்ணாமலை ஆகியோர் மறியல் போராட்டம் நடத்தினர். சமூக வலைதளங்களிலும் நீலகிரியில் போலீசார் தங்கள் மீது தடியடி நடத்திவிட்டதாக பாஜகவினர் பதிவிட்டும் வருகின்றனர்.












Click it and Unblock the Notifications