மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு.. ஆளுநரிடம் ஸ்டாலின் அளித்த மனுவின் முழு விவரம் இதோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக எம்எல்ஏக்களே குதிரை பேரம் குறித்து தெரிவித்துள்ள வீடியோ விவகாரத்தை முன்வைத்து ஆட்சியை கலைக்க உத்தரவிடுமாறு பொறுப்பு ஆளுனரிடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து மனு அளித்துள்ளார்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சியினருடன் பொறுப்பு ஆளுனர் வித்யாசாகரிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

 M.K.Stalin submits CD proves to Governor for seeking dismissal of tn government

கடந்த பிப்ரவரி 18ம் தேதி முதல்வர் பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் தன் அரசின் மீதான நம்பிக்கை பெறும் தீர்மான வாக்கெடுப்பில் நடந்த ஜனநாயக விரோத செயல்களை ஏற்கனவே உங்களின் கவனத்திற்கு எடுத்து வந்துள்ளேன். ஓ.பன்னீர்செல்வம் கட்டாயப் படுத்தி ராஜினாமா செய்ய வைக்கிறார்கள் என்று கூறி தனது முதலமைச்சர் பதவியை பிப்ரவரி 5, 2017 அன்று ராஜினாமா செய்ததையடுத்து, அ.இ.அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஒரு அணி உடனடியாக பிப்ரவரி 6, 2017 அன்று திருமதி வி.கே.சசிகலாவை சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்தது.

அப்போது அவர் நிலுவையில் இருந்த சொத்துக்குவிப்பு வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்காக காத்திருந்தார். அவர் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, அவரை ஆதரிக்கும் அ.இ.அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சென்னையிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கூவத்தூர் கடற்கரையோர நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் சசிகலாவுக்கு ஆதரவாக வாக்களிக்க கட்டாயப்படுத்தப்பட்டு சட்டவிரோதமாக சிறைவைக்கப்பட்டனர். பின்னர், பிப்ரவரி 14, 2017 அன்று வி.கே.சசிகலா உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு கால சிறைவாசமும், 10 கோடி அபராதமும் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன் காரணமாக முதல்வராகும் தகுதியை அவர் இழந்தார்.

அவர், கிரிமினல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட அந்தக் கணம், ரிசார்ட்டில் சட்டவிரோதமாக, சுய விருப்பம் இல்லாமல் ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கவைக்கப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர்கள், சசிகலாவின் வற்புறுத்தலால் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை அதிமுகவின் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். அதனை அடிப்படையாகக் கொண்டு தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியமைக்க உரிமை கோரினார் .

சட்டமன்ற உறுப்பினர்களை சட்டவிரோதமாக வெகு நாள் காவலில் வைத்திருக்க இயலாது என்பதாலும், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட "ஆள்கொணர்வு மனுக்களினாலும்", மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மக்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை விடுதலை செய்யுங்கள் என்று எழுந்த குரலினாலும் கலக்கமடைந்த சட்டப்பேரவை தலைவர், அவசர அவசரமாக புதிதாக நியமனம் செய்யப்பட்ட முதலமைச்சர் அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க ஏதுவாக இரண்டே நாட்களில் , அதாவது 18.02.2017 அன்று தமிழக சட்டமன்றத்தைக் கூட்டினார்.

சட்டமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிசெய்பவரும் உத்தரவாதமளிப்பவருமான திகழ வேண்டிய பேரவைத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் சுய விருப்பதோடும் ஒப்புதலோடும் தான் அறைக்கு வந்திருக்கிறார்களா என்று கூட யோசிக்காமல், சட்டப்பேரவையை அவசர அவசரமாக கூட்டினார். மக்களின் குரலுக்கு மதிப்பளித்து, முன்னாள் டிஜிபியும் சட்டமன்ற உறுப்பினரான ஒருவரும், சுய விருப்பமில்லாமல் அடைத்து வைக்கப்பட்டமைக்கு எதிராக முழக்கமிட்டு சொந்த ஊரான கோவைக்கு திரும்பிச்சென்ற இன்னொரு சட்டமன்ற உறுப்பினரும், பெரும்பான்மை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதது ஏன், வந்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் சுய விருப்பத்தோடுதான் வந்திருக்கிறார்களா என்பதை சபாநாயகர் ஆராயவில்லை. கூவத்தூரில் சட்டவிரோதமாக சட்டமன்ற உறுப்பினர்கள் அடைத்து வைக்கப்பட்டு, வாக்கெடுப்பிற்கு அழைத்து வரப்படுகிறார்கள் என்ற புகார்களையும் பேரவைத் தலைவர் துச்சமென மதித்து புறந்தள்ளினார்.

இத்தகைய சூழலில், பெரும்பான்மை வாக்கெடுப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் பேரவைத் தலைவரிடம் ஒரு கோரிக்கை வைத்தது. அது, சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்பந்தத்தின் பேரில் கிட்டத்தட்ட 14 நாட்கள் மேற்கூறப்பட்ட ரிசார்ட்டில் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டிருந்ததால், அவர்களின் மனநிலை சுதந்திரமாக யோசிக்க முடியாத நிலையில் உள்ளது என்றும், அவர்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, உண்மையான ஜனநாயகத்தை காப்பாற்றும் நோக்கோடு, ரகசிய வாக்கெடுப்பு நடத்துங்கள் என்று பேரவைத் தலைவரிடம் முறையிட்டது. அதற்கு முன்வரவில்லையென்றால் குறைந்தது ஒரு வாரம் வாக்கெடுப்பை ஒத்திவையுங்கள் என்றும் கூறியது. ஆனால், தி.மு.க. வின் நேர்மையான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல், கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணராமல் தன்னிச்சையாக பேரவைத் தலைவர் எங்களின் கோரிக்கையினை நிராகரித்தார். அதோடு மட்டுமல்லாமல் சட்டவிரோதமாக, ஒருதலைபட்சமாக அவையினில் பெரும்பான்மை வாக்கெடுப்பை நடத்தி பேரவைக்கும் ஜனநாயகத்திற்கும் தீராத களங்கத்தை ஏற்படுத்தி விட்டார்.

திமுக, காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அவைக்குள் ஜனநாயக முறையில் வேண்டுகோள் விடுத்து, அமைதியான வழியில் போராட்டம் நடத்தியதெல்லாம் அர்த்தமற்றதாகி விட்டன. அதிமுக எம்.எல்.ஏ க்களான திரு. செம்மலை, திரு. நட்ராஜ் மற்றும் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை. ஒருகட்டத்தில், மதியம் 1.28 மணியளவில் சபாநாயகர் அவர்கள் சென்னை காவல்துறை ஆணையருக்கு ஒரு கடிதத்தை எழுதி, சட்டசபைக்குள் காவல்துறையினரை வரவழைத்து, சட்டமன்ற உறுப்பினர்களிடத்தில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டார்.

அந்தக் காவல்துறை அதிகாரிகளில் சிலர் சென்னை மாநகர எல்லைக்கு வெளியில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த சூழல் சந்தேகத்திற்குரியதாக இருந்தது. இறுதியாக, ஒன்பது காவல்துறை அதிகாரிகள் அவைக்குள் நுழைந்து, தங்கள் அடையாளங்களை மறைக்கும் விதமாக, சட்டசபைக் காவலர்களின் உடைகளை அணிந்தபடி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளும், தமிழக சட்டமன்ற விதிகள் 120 மற்றும் 121 ஆகியவற்றை மீறி நடைபெற்றது. முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, தீய முறையில் வடிவமைக்கப்பட்ட வகையில், இந்திய காவல் பணி (சீருடை) விதிகளை மீறி, சட்டசபைக் காவலர்களின் உடைகளை அணிந்து கொண்டு, ஒரு குழுவாக அவைக்குள் வந்த துணை/இணை/கூடுதல் ஆணையர் பதவிகளில் உள்ள ஐ.பி.எஸ்., அதிகாரிகள் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை பலவந்தமாக வெளியேற்றினர்.

அப்போது நடந்த குழப்பங்களுக்கு இடையில், அதற்காகவே காத்திருந்தது போல, சட்டப்படி அங்கீகரிக்கப்படாத, அரசியலமைப்பின் இறையாண்மையை பாதிக்கும் வகையிலான மற்றும் அரசியல் சட்டத்திற்கு எதிரான முறையில், பேரவைத் தலைவர் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நடத்தினார். சட்டமன்ற உறுப்பினர்கள் சுயமாக வாக்களிக்கிக்கிறார்களா என்பது பற்றி எவ்வித விசாரணையும் பேரவைத் தலைவர் மேற்கொள்ளவில்லை என்பதோடு, அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டவிரோதமாக அடைக்கப் பட்டிருந்தனர் என்ற பிரச்சனையை எழுப்பிய நேரத்தில் அது பற்றியும் கண்டுகொள்ள தவறி விட்டார்.

சட்டசபையில் பெரும்பான்மை வாக்கெடுப்பின் மிக அடிப்படையான நோக்கங்கள் கூட இரக்கமின்றியும், பொறுப்பற்ற முறையிலும் தோற்கடிக்கப்பட்டன. அவையில் சட்டப்படியான பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்துவதில் பேரவைத் தலைவர் அவர்கள் தோல்வியடைந்து, அதனையடுத்து ஏற்பட்ட அமளிக்கு இடையில், புதியதாக நியமிக்கப்பட்ட முதலமைச்சர் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நிறைவேறியதாகவும், அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் என்றும் அறிவித்தார். சட்டவிரோதமாக நடைபெற்ற இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 18.2.2017 அன்றே ஆளுநரிடம் முறையிட்டுள்ளோம்.

மேலும், 18-02-2017 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில், பேரவைத் தலைவர் உள்நோக்கத்துடனும், சட்டவிரோதமாகவும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் இந்த அரசு நீடிப்பது குறித்து ரிட் மனு (WP No 4390/2017) ஒன்றை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் தாக்கல் செய்திருப்பதை தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். அதில் அரசியல் சட்டப்படியும், விதிமுறைகளின் படியும் மீண்டும் புதிதாக நம்பிக்கை வாக்கெடுப்பினை நடத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் 12-06-2017 அன்று, "டைம்ஸ் நவ்" மற்றும் "மூன் டிவி" ஆகிய ஆங்கில தொலைக்காட்சிகள் தொடர்ந்து வெளியிட்ட 'ஸ்டிங் ஆபரேஷன்' வீடியோக்களில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன் மற்றும் கனகராஜ் ஆகியோர், 18-02-2017 அன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நடைபெற்ற குதிரை பேரங்கள் பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் பேட்டிகளை அளித்துள்ளனர் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
M.K.Stalin submitted a petition seeking tn government's dismissal and highlighted the MLAs for sale issue to him v
Please Wait while comments are loading...