ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றியபோது மயக்க நிலையில் இருந்த ஜெ!
சென்னை : மருத்துவமனையில் ஜெயலலிதா அம்மையார் அனுமதிக்கப்பட்டு ஏறத்தாழ 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த போதே தமிழகத்தின் புலனாய்வு இதழ்கள் அவரது உடல்நிலை குறித்த பல செய்திகளையும் மருத்துவ ஆவணங்களையும் வெளியிட்டு வந்தன. நக்கீரன், ஆனந்தவிகடன், ஜூனியர் விகடன் உள்ளிட்ட ஏடுகளில் இந்த செய்திகள் இடம்பெற்றன. தற்போது புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊடகத்தில் ஜெயலலிதா போயஸ் கார்டனிலிருந்து அப்பல்லோ மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்ட போது என்ன நிலையில் இருந்தார் என்பதற்கான நோயாளி நலன் அறிக்கை (பேஷன்ட் கேர் ரிப்போர்ட்) வெளியாகியுள்ளது.
இந்த அறிக்கையில் உள்ள விவரங்கள் ஏற்கெனவே ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு கடந்த மார்ச் மாதத்தில் தமிழக அரசிடம் அப்பல்லோ மருத்துவமனை அளித்த அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளன. அதன்படி, செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு 10.06 மணிக்கு போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை மருத்துவர்கள் குழு பரிசோதித்த போது அவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

ரத்த அழுத்த அளவு உயர்ந்து140/100 என்ற அளவில் இருந்துள்ளது. சர்க்கரை அளவு கடுமையாக உயர்ந்து 508 எம்.ஜி. என்ற அளவில் இருந்துள்ளது, இதயத்துடிப்பும் சீராக இல்லாமல் 88 பல்ஸ் என்ற நிலையில் இருந்துள்ளது. 100 சதவீதம் அளவு இருக்க வேண்டிய ஆக்ஸிஜன் அளவும் 48% என்ற மிக மோசமான நிலையில் இருந்துள்ளது என்பதை நோயாளி நலன் அறிக்கையும், மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அதே மருத்துவமனையின் அறிக்கையும் தெரிவிக்கின்றன. இதைத் தான் அவர் சிகிச்சை பெற்று வந்தபோதே புலனாய்வு இதழ்களும் குறிப்பிட்டு எழுதி வந்தன.
இதனடிப்படையில் பொதுமக்களுக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் எழக்கூடிய கேள்விகள் ஏராளமானவை. அதே கேள்விகள்தான் தமிழகத்தின் முதன்மையான எதிர்க்கட்சி என்ற முறையிலும், வாக்குரிமை கொண்ட குடிமகன் என்ற முறையிலும் நமக்கும் ஏற்படுகிறது.

மத்திய அரசின் உயர் பாதுகாப்பான இசட் ப்ளஸ் பாதுகாப்பு பிரிவில் இருந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாகன வரிசையில் (கான்வாய்) ஆம்புலன்ஸ் இல்லையா? தனது இல்லத்தில் மயங்கிக் கிடந்தவரை அந்த ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லாமல், தனியார் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸை வரவழைத்து அழைத்துச் சென்றது ஏன்? சர்க்கரை அளவு கடுமையாக உயர்ந்து, இதயத்துடிப்பு அதிகரித்து, ஆக்ஸிஜன் அளவு சரிபாதிக்கும் கீழே குறைந்து மயங்கிய நிலையில் முதலமைச்சரை அனுமதித்த நிலையில், அவருக்கு காய்ச்சலும் நீர்ச்சத்து குறைபாடும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனையிலிருந்து அறிக்கை வெளியாக என்ன காரணம்? யாருடைய நிர்பந்தம்?

மயங்கிய நிலையில் அனுமதிக்கப்பட்டு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைகள் பெற்று வந்த முதலமைச்சர், காவிரி பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினார் என்று அரசின் சார்பில் அறிக்கை வெளியிட்டது எப்படி? நுரையீரல் நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைச்சர்களும் அதிகாரிகளும் புடைசூழ ஆலோசனை நடத்துவது முதலமைச்சரின் உடல்நலனில் அக்கறை காட்டும் சிகிச்சை முறைதானா? முதல்வர் ஆலோசனை நடத்தினார் என அரசு சார்பில் அறிக்கை வெளியிட துணைபோன உயரதிகாரிகள் யார், யார்?












Click it and Unblock the Notifications