புதிய வேன் தயார்.. கருணாநிதி முதற்கட்ட பிரசாரம் ஏப்ரல் 5ல் கோவையில் தொடக்கம்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி, தன்னுடைய முதல் கட்ட தேர்தல் பிரசார பயணத்தை கோவையில் ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்கி ஏப்.7-ஆம் தேதி முடிக்கிறார்.
90 வயதாகும் கருணாநிதி கடந்த வாரம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய சென்னை, தென்சென்னை, வடசென்னை தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
இந்தநிலையில் நாளை மறுதினம் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய தொகுதிகளில் தனது முதல் கட்ட தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
கருணாநிதியின் பிரசார பயணத்திட்டம் குறித்து தி.மு.க. தலைமை கழகம் சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கு மண்டலத்தில் 3 நாட்கள்
ஏப்ரல் 5ம் தேதி காலை 9.20 மணியளவில் கோபாலபுரம் இல்லத்தில் புறப்பட்டு, விமானம் மூலம் கோவை செல்கிறார். பிறகு, இரவு 7 மணியளவில் கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இரவு ரெசிடென்சி ஹோட்டலில் தங்குகிறார்.

வேனில் பிரசாரம்
வேன் மூலம் ஏப்ரல் 6ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் வேன் மூலம் தன் பிரசாரப் பயணத்தை தொடங்குகிறார். தெக்களூர், அவினாசி வழியாகச் சென்று திருப்பூரில் மாலை 6 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

ஈரோட்டில் பொதுக்கூட்டம்
பிறகு அங்கிருந்து பெருமாநல்லூர், பெருந்துறை வழியாக வேனில் பிரசாரம் செய்யும் கருணாநிதி, இரவு 8 மணியளவில் ஈரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இரவு, லீ ஜார்டின் ஹோட்டலில் தங்குகிறார்.

சேலத்தில் பொதுக்கூட்டம்
ஏப்ரல் 7ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் வேன் மூலம் தன் பிரசாரப் பயணத்தை துவக்குகிறார். பள்ளிபாளையம், சங்ககிரி வழியாக செல்லும் கருணாநிதி, சேலம் போஸ் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அன்றைய தினம் இரவு சேலத்திலிருந்து ரயில் மூலம் சென்னை திரும்புகிறார்.

குடும்ப டாக்டர் ஆலோசனை
தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு கிளம்ப தயாராகிவிட்ட கருணாநிதி, தன் உடல் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், குடும்ப டாக்டரின் ஆலோசனையையும் கேட்டு வருகிறார்.

மனைவி மகளுடன்
சுற்றுப்பயணத்தில், அவரது துணைவியார் ராஜாத்தி மற்றும் மகள் செல்வி ஆகியோர் உடன் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. கோபாலபுரம் வீட்டில் உள்ள தன் தாயார் தயாளுவின் உடல் நலத்தையும் பார்க்க வேண்டி உள்ளதால், செல்வி, அவ்வப்போது சென்னைக்கும், வெளியூருக்கும் சென்று வருவார் என, கூறப்படுகிறது.

வசதியான பிரசார வேன்
இதற்கிடையில், கருணாநிதி உட்காருவதற்கும், படுத்து, ஓய்வு எடுப்பதற்கும் வசதியாக பிரசார வேன் தயாராகி வருகிறது. அந்த வேன், இன்று அறிவாலயத்திற்கு வரவுள்ளது. அதை கருணாநிதி பார்வையிட்டதும், கோவை புறப்பட்டுச் செல்கிறது.

கோவைக்கு விமான பயணம்
கோவைக்கு, கருணாநிதி, ரயில் மூலம் செல்வதற்கும், விமானம் மூலம் செல்வதற்கும் வசதியாக, டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

கருணாநிதியின் வேன் கனிமொழிக்கு
அத்துடன், தி.மு.க., கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர், கனிமொழி எம்.பி.,யும், 18 நாட்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். வரும், 5ம் தேதி, தென் சென்னையில், அவர் பிரசாரத்தை துவக்கி, கன்னியாகுமரியில் முடிக்கிறார். கருணாநிதி ஏற்கனவே பயன்படுத்தி வந்த பிரசார வேன், கனிமொழிக்கு வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications