குற்றாலத்தில் கதிகலங்கிய டூரிஸ்ட்.. மெயினருவி தடாகத்தில் விழுந்த நபர்.. மக்களே கவனம்
தென்காசி: குற்றாலம் பழைய அருவியில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்தான். இந்நிலையில் தான் தற்போது குற்றாலம் மெயினருவி தடாகத்தில் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில் அருவிகள் உள்ளன. ஆனாலும் அருவிக்கு பெயர் பெற்ற இடம் என்றால் அது குற்றாலம் தான். இந்த குற்றாலம், தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு மெயினருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி என பல அருவிகள் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை காலமான ஜுன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் குற்றாலத்தில் சீசன் தொடங்கும். இந்த சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
குற்றாலத்தில் பெய்யும் சாரல் மழைக்கு நடுவே அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் மூலிகை தண்ணீரில் குளித்து மனம் மகிழ பலரும் விரும்புவதால் தான் ஒவ்வொரு ஆண்டும் சீசனில் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் தற்போது குற்றால சீசன் தொடங்கி உள்ளது. வழக்கத்தை விட தற்போது சாரல் மழை குறைந்து இருந்தாலும் கூட மலையில் பெய்த கனமழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து உள்ளது.
இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர். அந்த வகையில் நேற்று குற்றாலம் மெயினருவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து குளித்து கொண்டிருந்தனர். இந்த வேளையில் குற்றால அருவியின் தண்ணீர் விழும் தடாகத்தில் ஆண் ஒருவர் தவறி விழுந்து தத்தளித்தார். தடாகத்தில் யாரும் விழாத வகையில் இரும்பு தடுப்பு வேலி இருந்தாலும் அதனை தாண்டி அவர் விழுந்து தத்தளித்தார்.
இதையடுத்து அங்கிருந்த போலீசார் ஓடிச்சென்று தடாகத்தில் விழுந்த நபரை பத்திரமாக மீட்டனர். இதனால் அவர் லேசான காயத்துடன் உயிர் பிழைத்தார். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக கடந்த மே மாதம் குற்றாலம் பழைய அருவியில் பொதுமக்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெள்ளத்தில் மக்கள் சிக்கினர்.
அருவியில் குளித்து கொண்டிருந்த மக்களை வெள்ளம் அடித்து சென்ற நிலையில் பலரும் தடுப்பு கம்பிகளை பிடித்து உயிர் தப்பினர். துரதிர்ஷ்டவசமாக 17 வயது சிறுவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்த அடுத்த ஒரு மாதம் கழித்து நேற்று குற்றாலம் மெயினருவி தடாகத்தில் ஒருவர் தவறி விழுந்துள்ளார். வரும் நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகும்போது இன்னும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் குற்றால அருவிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications