For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை ம.தி.மு.க.வும் புறக்கணித்தது!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.

ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அண்ணா தி.மு.க. வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார்.

MDMK to boycott RK Nagar by-poll

ஆனால் இடைத்தேர்தலை குறுகிய காலத்தில் அறிவித்ததற்கும் தேர்தல் ஆணையத்தின் மீது அதிருப்தி தெரிவித்தும் தி.மு.க. பா.ம.க, விடுதலை சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

தற்போது இத்தேர்தலை புறக்கணிப்பதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் அறிவித்துள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற மதிமுகவின் உயர்நிலைக் குழுவின் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புறக்கணிப்பு ஏன்?

தீர்மான விவரம்:

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்ற மணிவாசக அடித்தளத்தின் மீதுதான் ஜனநாயகம் எழுந்து நிற்கிறது. உலகில் சிறந்த ஜனநாயக நாடுகளுள் ஒன்றாக இந்தியா கருதப்படுகிறது. அதற்குச் சான்றாக, உரைகல்லாக பொதுத் தேர்தல்கள்தான் அமைகின்றன.

மக்கள் ஆட்சியின் மாண்பினைத் தமிழகத்தில் ஏழை எளியோருக்கும், படித்தவர் முதல் பாமரர் வரை அனைத்துத் தரப்பினருக்கும் தனது பரந்து விரிந்த அறிவாற்றலாலும், நிகரற்ற எழுத்தாற்றல், சொல்லாற்றலாலும் உணர்த்திய பெருமை பேரறிஞர் அண்ணா அவர்களையே சாரும். துணைக்கண்டத்திலேயே ஜனநாயக தென்திசைச் சுடரொளியாகத் தமிழகம் பிரகாசிக்க தமிழ்நாட்டின் புகழ்மிக்க தலைவர்கள் பலர் செயற்கரிய சேவை செய்தனர்.

எனினும், அறிஞர் அண்ணா கலங்கரை விளக்கமாய் உயர்கிறார். அண்மைக்காலமாக, தேர்தல் என்பது போட்டியிடும் கட்சிகளின் இலட்சியங்களையும், செயல்பாட்டினையும் மக்கள் துலாக்கோல் நிலையில் ஆய்வதற்குப் பதிலாக, பணத்தை வாக்காளர்கள் எடை போட்டுப் பார்க்கும் நிகழ்வாகி விட்டது.

அதிலும் இடைத்தேர்தலில் அரசு அதிகாரம் ஆளுங்கட்சியின் எடுபிடியாக்கப்பட்டு, வாக்காளர்களுக்கு ரூபாய் 1000 முதல் 5000 வரை பணம் கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்கும் இலஞ்ச பேரமாக மாறிவிட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை ஆகும். இதைத் தமிழக மக்கள் அனைவரும் அறிவார்கள்.

எதேச்சாதிகாரமும் சர்வாதிகாரமும் ஜனநாயகத்தை அழிக்க முனைவதும், அதனை எதிர்த்து மக்கள் புரட்சி வெடிப்பதும் நடைபெற்றாலும், அதைவிடப் பேராபத்தாக ஊழல் பணத்தால் ஓட்டுகளை விலைக்கு வாங்குகின்ற அக்கிரமம் தற்போது தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடுகிறது. இந்த நச்சுச் சுழலில் இருந்து தமிழகம் மீட்கப்பட வேண்டும்.

தற்போதைய ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்யப்படுகிறது.

இவ்வாறு அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
MDMK also announced to boycott the RK Nagar by-poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X