முக்கிய நிர்வாகிகளுக்கு வலைவீசும் அழகிரி.. மதுரையில் ஆலோசனை.. திமுகவில் பரபரப்பு
மு.க அழகிரியின் மதுரை வீட்டில் தற்போது முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.
சென்னை: மு.க அழகிரியின் மதுரை வீட்டில் தற்போது முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. சில முக்கிய நிர்வாகிகள் இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். இதில் என்ன மாதிரியான விஷயங்களை பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் சமாதி நோக்கி, அவரது மகன் மு.க அழகிரி அடுத்த மாதம் 5ம் தேதி அமைதிப் பேரணி செல்ல உள்ளார். கருணாநிதியின் சமாதியில், எனக்கு ஆதங்கம் இருக்கிறது, திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள் என்று அழகிரி ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து தற்போது பெரிய திட்டம் ஒன்றை மனதில் வைத்து இந்த பேரணியை நடத்த உள்ளார். இதை முன்னிட்டு இப்போது அவசர கூட்டம் ஒன்றை நடத்தி வருகிறார்.

அதிகமாக்கியுள்ளனர்
முதலில் இந்த பேரணியில் 10 ஆயிரம் பேர் வரை திரட்டப்படுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த எண்ணிக்கை இப்போது 1 லட்சத்தை தொட்டு இருக்கிறது. சென்னையில் 1 லட்சம் பேரை அழகிரி திரட்டி பேரணி நடத்த போகிறார் என்பதே, திமுக தரப்பிற்கு பெரிய கலக்கத்தை உண்டாக்கி உள்ளது. இதில் எல்லோரும் கருப்பு உடையில் வர வேண்டும் என்றும் உத்தரவு சென்றுள்ளது.

நடைபயணம் பற்றி விவாதம்
இதுகுறித்து தற்போது மு.க. அழகிரி மதுரை சத்தியசாய் நகரில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நடை பேரணியில் எத்தனை பேர் வருவார்கள், பேரணிக்கு பின் என்ன பேசலாம் என்று இதில் விவாதிக்க இருப்பதாக கூறியுள்ளனர். இப்போது அங்கு மிக முக்கியமான சில நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

என்ன திட்டம்
முன்னாள் திமுக முன்னாள் துணை மேயர் மன்னன், எம்.எல்.ஏ. கவுஸ்பாட்ஷா, கோபிநாதன், சின்னான், முபாரக் மந்திரி, உதயகுமார் ஆகியோர் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அதேபோல், சில முக்கிய முன்னாள் உறுப்பினர்களும் கலந்து கொண்டு உள்ளனர். மேலும் ஸ்டாலினால் கட்சியில் இருந்து ஓரம்கட்டப்பட்ட சிலரும் இதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

பரபரப்பு
இதனால் திமுகவில் தற்போது பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. அழகிரி இவ்வளவு துரிதமாக செயல்படுவார் என்று ஸ்டாலின் தரப்பு எதிர்பார்க்கவில்லை என்று கூறுகிறார்கள். இதனால் ஸ்டாலின் விரைவில் சில முக்கிய நிர்வாகிகளை சந்திப்பார், என்றும் கூறப்பட்டுள்ளது. திமுக உறுப்பினர்கள் செப்டம்பர் 5ம் தேதி என்ன நடக்க போகிறது என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்












Click it and Unblock the Notifications