"ஏபிசிடி சொல்லுங்க.." எல்கேஜி குழந்தை கொடுத்த பதில்.. வெடித்து சிரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்! கலகல
தென்காசி: தொடக்கப் பள்ளி ஒன்றில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கே எல்கேஜி குழந்தையிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் ஏபிசிடி சொல்லுங்க எனக் கேட்டார். அதற்கு மழலை மொழி மாறாமல் அந்த குழந்தை அளித்த பதில் அனைவருக்கும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தமிழக அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்து தொடர்ச்சியாக ஆய்வுகளைச் செய்து வருகிறார்கள். அதன்படி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவ்வப்போது பள்ளிகளில் ஆய்வு செய்து வருகிறார்.

அவர் நேற்றைய தினம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார். அப்போது அவர் சங்கரன்கோவிலில் உள்ள அரசுப் பள்ளிகளில் திடீர் ஆய்வு செய்தார்.
அமைச்சர் அன்பில் மகேஷ்: அங்கே மழலையர்களுக்கான எல்கேஜி, யுகேஜி மாதிரி பள்ளிகள் இருந்த நிலையில், அங்கும் பார்வையிட்டு குழந்தைகளுடன் கொஞ்சி பேசினார்.. அப்போது அங்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சுவாரசிய சம்பவம் நடந்தது.

ஏபிசிடி: அதாவது எல்கேஜி வகுப்பிற்குச் சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ், அங்கே ஆசிரியரிடம் முக்கிய விஷயங்களைக் கேட்டறிந்தார். தொடர்ந்து அங்கே ஒரு குழந்தையிடம் ஏபிசிடி சொல்லுங்க என்று கேட்டார். அப்போது சில நொடிகள் அந்த குழந்தை எதுவும் சொல்லவில்லை.
ஆடிப்போன அமைச்சர்: தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ், ஏபிசிடி சொல்லக் கேட்ட போது, டக்கென அந்த குழந்தை, "ஏபிசிடியா அது நோட்டில் இருக்கு" என்று மழலை மொழி மாறாமல் கூற அதைக் கேட்டவுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெடித்துச் சிரித்தார். பிறகு அங்கிருந்தபடியே சிரித்துக் கொண்டே கிளம்பினார். அவரது இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ், சிவகங்கை அடுத்துள்ள கீழடியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் ஆய்வு செய்தார். அங்கே குழந்தைகளின் வாசிப்புத் திறன் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு கட்டத்தில் மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் ஆங்கில பாடமும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications