ஆளுதாங்க பார்க்க மிரட்டலானவர்.. மனசு குழந்தையை போல்.. மனம் தாங்காமல் அழுத அமைச்சர் காந்தி!
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சர்வந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், உடல் உறுப்புகள் தானத்தால் 5 பேருக்கு வாழ்வளித்துவிட்டு சென்ற நிகழ்வு அமைச்சர் காந்தியை கண் கலங்க வைத்துவிட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் சர்வந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த அருள் -பரிமளா தம்பதியின் மகன் ராகவேந்திரா கடந்த 18ஆம் தேதி இரவு சாலை விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்ததால் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 10 நாட்களுக்கு மேலாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சிறுவன் ராகவேந்திரா மூளைச் சாவு அடைந்திருக்கிறார்.

இதையடுத்து மூளைச்சாவு என்றால் என்ன உடல் உறுப்புகள் தானத்தின் அவசியம் குறித்தெல்லாம் சிறுவனின் பெற்றோருக்கு மருத்துவர்கள் கவுன்சிலிங் கொடுத்துள்ளனர். இதையடுத்து தங்கள் மகன் மரணித்தாலும் கூட அதனால் 5 பேருக்கு வாழ்வு கிடைக்கிறதே என்ற நல்லெண்ணத்தில் உடல் உறுப்புகள் தானத்திற்கு ஒப்புக்கொண்டனர். இதையடுத்து மின்னல் வேகத்தில் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு இதயமும், நுரையீரலும் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் 5 பேர் புதுவாழ்வு பெறுகிறார்கள். இந்நிலையில் உடல் உறுப்புகள் தானம் செய்த சிறுவன் ராகவேந்திரா உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தச் சென்ற அமைச்சர் காந்தி, சிறுவனின் பெற்றோரை பார்த்து ஆறுதல் சொன்னார். அப்போது அவர்கள் கதறி அழுததை பார்த்ததும் அமைச்சர் காந்தியால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
பெற்றொரின் காலில் விழுந்து நன்றி சொல்கிறேன் என உணர்ச்சிவசப்பட்டார். அமைச்சர் காந்தியை பொறுத்தவரை பார்க்க மிரட்டலான தோற்றம் கொண்டவர். அதேபோல் அவர் பேசினாலும் மிரட்சியாக பேசுவார். ஆனால் அப்பேற்பட்ட நபரே அந்த ஏழை பெற்றோரின் பெருந்தன்மையான மனதை பார்த்து கைக்கூப்பி வணங்கி அங்கிருந்து சென்றார். இதனிடையே சிறுவன் ராகவேந்திரன் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications