தனியாரிடம் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரமா? கருணாநிதி புகாரை அடியோடு மறுக்கும் அமைச்சர் 'நத்தம்'

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனியாரிடம் தமிழக அரசு கூடுதல் விலைக்கு மின்சாரத்தை வாங்குவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்த குற்றச்சாட்டை மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு மின்சார வாரியத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டும் மற்றும் தண்டிக்கப்பட்டவருமான சி.செல்வராஜ், தன்னை வளர்த்த மின் வாரியம் நசிய வேண்டும் என்ற கெட்ட எண்ணத்திலும், அத்தியாவசிய தேவையான மின்சாரம் மக்களுக்கு முழு பயன்பாட்டில் இருக்கக்கூடாது என்ற நோக்கிலும் அவர் வெளியிட்ட செய்திகளையும் புகார்களையும், நம்பகமற்ற நாளிதழ் செய்திகள் வெளியிட்டிருந்தன.

அவரின் கற்பனை அடிப்படையில், காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய, ஒரு பொது நல மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். மாண்புமிகு உயர்நீதி மன்றம் தீர விசாரிப்பதற்கு ஏற்ற மனுதானா என கண்டறிய முதல்கட்ட விசாரணையில் மட்டுமே அம்மனுவை வைத்திருக்கிறது.

கண்டிக்கத்தக்கது

கண்டிக்கத்தக்கது

மேற்கண்ட மனு மீது முதல் கட்ட விசாரணையே நிலுவையில் இருக்கும் நிலையில், அதில் கண்டுள்ள செய்திகள் முற்றிலும் நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டு தவறு நடந்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டது போல் சித்தரித்து, உண்மை எது, பொய் எது எனக் கூட அறியாமல் சொந்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கிலும், வியாபார நோக்கிலும், உள்நோக்கத்தின் அடிப்படையிலும் அவதுhறாக எழுதும் சில பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளின் அடிப்படையிலும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அளித்துள்ள அறிக்கை உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, வன்மையாக கண்டிக்கத் தக்கதாகும்.

மகத்தான சாதனை

மகத்தான சாதனை

மொத்தம் 5346.50 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு நான்கு ஆண்டு காலத்திலும் இத்தகைய அளவிற்கு நிறுவுதிறன் அதிகரிப்பு தமிழக வரலாற்றிலேயே நடந்திராத ஒன்று. இது ஒரு மகத்தான சாதனை ஆகும்.

புதிய மின் திட்டங்கள்

புதிய மின் திட்டங்கள்

மேலும், எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு எண்ணூர் சிறப்புப் பொருளாதார மின் திட்டம் டெண்டர் விதிமுறையை பின்பற்றி பாரத மிகு மின் நிறுவனத்திற்கு பணியாணை அளிக்கப்பட்டு அதற்கான பணியும் தொடங்கப்பட்டுள்ளது. அது போலவே, எண்ணூர் விரிவாக்கதிட்டத்துக்கும் பணியாணை வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. உப்பூர்அனல் மின் திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, 09.09.2015 அன்று திறக்கப்பட உள்ளது. மேலும், வடசென்னை அனல் மின் திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகளும் விரைவில் கோரப்பட உள்ளது.

உண்மைக்கு புறம்பானது

உண்மைக்கு புறம்பானது

எனவே, தனியார் மின்உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து, நீண்ட காலத்திற்கு, மின்சாரம் வாங்குவதற்காக மாநில அரசுக்கு சொந்தமான மூன்று மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தியை நிறுத்தி மின் பற்றாக்குறையை செயற்கையாக உருவாக்குகிறார்கள் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.

தனியாரிடம் 3%தான்..

தனியாரிடம் 3%தான்..

ஆண்டுக்காண்டு, அதிகரித்து வரும் தமிழகத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய, மின்வாரியத்தின் சொந்த மின் உற்பத்தி மூலமாகவும் மேலும் மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாகவும், மரபுசாரா எரிசக்தி மூலமாகவும், மின் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக பெறப்படும் மின்சாரம், மின் தேவையில் சுமார் 77 சதவீதம் ஆகும். மீதமுள்ள மின் தேவையில் சுமார் 17 சதவீதம், மத்திய அரசின் மின் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி ஒப்பந்தப் புள்ளி மூலமாக நீண்டகால, நடுத்தர கால மற்றும் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுடன் மின் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர, குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாக 3 சதவீதம் அளவுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட விலை ஏறுமுக வரிசை விதியைப் பின்பற்றி குறைந்த விலையில் மின்சாரத்தை முதலில் பெற்று, படிப்படியாக ஏறுமுக வரிசையில் தேவை நிறைவடையும் வரை உயர்ந்த விலை மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.

மின் அளவி கொள்முதல் முறைகேடா?

மின் அளவி கொள்முதல் முறைகேடா?

இந்த அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம், வாரியத்தின் வருவாய் மாதம் ஒன்றுக்கு 20 சதவிகிதம் அளவு அதிகரித்துள்ளது. இதன் மூலம் மீட்டர் கொள்முதலுக்கான தொகை மின்கட்டண வசூலின் மூலம் ஆறு மாதங்களுக்குள்ளாகவே ஈடு செய்யப்பட்டுள்ளது. புதிய மின் அளவிகளை ஒளிவுமறைவற்ற திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளிகள் மூலமாகவே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. எனவே, பழைய மின் அளவிகளை விடுவித்து புதிய மின் அளவிகள் கொள்முதல் செய்ததில் சுமார் ரூ.6000/- கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ள தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவலாகும்.

மீண்டும் அம்மா...

மீண்டும் அம்மா...

முதல்வர் ஜெயலலிதா மின்சாரத் துறையில் செய்திருக்கும் அளப்பரிய சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாத கருணாநிதி மற்றும் சில லெட்டர் பேடு அரசியல்வாதிகள் முற்றிலும் பொய்யான செய்திகளை தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட வெகு ஜன விரோதிகளுக்கு 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை கற்பிப்பதோடு, மீண்டும் ஜெயலலிதாவை இமாலய வெற்றி பெற செய்து, தமிழக முதல்வராக அரியணையில் அமர வைப்பது உறுதி.

இவ்வாறு நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+