அமிதாப்பச்சானுடன் அரசியல் ஆலோசனை- தி.மு.க.வில் இருந்து கே.பி. ராமலிங்கம் எம்.பி. விலகல்?
சென்னை: தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. கே.பி. ராமலிங்கம் விரைவில் அக்கட்சியில் இருந்து விலகக் கூடும் என்று தெரிகிறது. அழகிரி மற்றும் கனிமொழியின் ஆதரவாளராகக் கருதப்படும் கே.பி. ராமலிங்கம் மும்பையில் நடிகர் அமிதாப் பச்சனை நேற்று சந்தித்துப் பேசியுள்ளது இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.
தி.மு.க.வில் தலைமைப் பதவி கருத்து வேறுபாடு விவகாரத்தில் கட்சியின் முக்கியத் தலைவர்களை மு.க. அழகிரி வெளிப்படையாக விமர்சித்து வந்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு ஜனவரியில் அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக திமுக மேலிடம் நீக்கியது.

இதைத் தொடர்ந்து அழகிரி ஆதரவாளரான ஜே.கே. ரித்தீஷ் கடந்த ஏப்ரலில் அ.தி.மு.க.வில் இணைந்தார். மற்றொரு ஆதரவாளரான முன்னாள் மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் கடந்த டிசம்பர் 21-ந் தேதி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
இந்நிலையில் மு.க. அழகிரி மற்றும் கனிமொழியின் ஆதரவாளரான கே.பி. ராமலிங்கம் திடீரென நேற்று மும்பையில் நடிகர் அமிதாப்பச்சனை சந்தித்து பேசினார். காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைமைகளுக்கு நெருக்கமானவர் அமிதாப் என்பதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இது குறித்து கே.பி. ராமலிங்கம் கூறுகையில், அமிதாப் பச்சன் எங்களின் நீண்ட கால நண்பர். அரசியல் ரீதியாக சில ஆலோசனைகளைப் பெறுவதற்காக அவரைச் சந்தித்தேன் என்றார். இந்த சந்திப்பால் கே.பி. ராமலிங்கம் விரைவில் பாரதிய ஜனதா அல்லது காங்கிரஸில் இணையக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications