தமிழக அரசு மீதான விமர்சனத்துக்காக கமல்ஹாசனை அமைச்சர்கள் மிரட்டுவதா? ஸ்டாலின் கடும் கண்டனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு மீதான நடிகர் கமல்ஹாசனின் விமர்சனத்துக்காக அமைச்சர்கள் மிரட்டல் விடுப்பதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆட்சி செய்பவர்கள் தங்கள் மீதான விமர்சன கருத்துகளில் உள்ள உண்மைகளை உணர்ந்து அவற்றுக்கு விளக்கமளிப்பதும், தவறுகளைத் திருத்திக்கொள்வதும்தான் ஜனநாயக ஆட்சி முறைக்கு அழகு. ஆனால், தமிழகத்தில் நடைபெறும் குற்றவாளியின் பினாமி-குதிரை பேர ஆட்சியோ உண்மையை எடுத்துரைப்பவர்களை மிரட்டுவதையே வழக்கமாக வைத்துள்ளது.

mkstalin

கலைஞானி கமலஹாசன் அவர்கள், தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் ஊழல் மலிந்திருப்பதையும், பீகாரை விட தமிழகம் லஞ்சம் ஊழலில் மோசமாக இருக்கிறது என்பதையும் தெரிவித்திருந்தார். மக்களின் உணர்வைத்தான் கமலஹாசன் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதற்காக அவரைப் பாய்ந்து பிறாண்டும் வகையில் தமிழக அமைச்சர்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். சட்டத்தைக் காட்டி மிரட்டிப் பார்க்கிறார்கள்.

கமலஹாசன் பங்கேற்கும் தனியார் தொலைக்காட்சி குறித்த விவாதங்களுக்கும், அரசாங்கம் பற்றிய அவருடைய கருத்துக்கும் வேறுபாடு உள்ளது. தமிழகத்தை ஆளும் பினாமி-குதிரை பேர ஆட்சியின் அவலட்சணத்தை வெளிப்படுத்தும் உரிமை கமல் உள்ளிட்ட வாக்களித்த அனைவருக்கும் உண்டு.

தமிழகம் ஊழலில் மிதக்கிறது என்பதை வருவாய் புலனாய்வுத்துறை, சி.பி.ஐ, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என அனைத்து அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன. ஆர்.கே.நகரில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பொறுப்பில் பணப்பட்டுவாடா நடைபெற்றதும், கூவத்தூர் முகாமில் எம்.எல்.ஏக்கள் விலை பேசப்பட்டு குதிரை பேரம் நடந்ததும், குட்கா ஊழலில் காவல்துறை உயரதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை சம்பந்தப்பட்டிருந்ததும் உரிய ஆவணங்கள் மூலம் அம்பலப்பட்டிருப்பதுடன், நீதிமன்றங்களாலும் இந்த அரசாங்கம் பல முறை கண்டிக்கப்பட்டிருக்கிறது.

உரிய விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அத்தனை அமைச்சர்ககளும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அரசை ஊழல் அரசு என்று பொதுமக்கள் சொல்வதைத்தான், குடிமக்களில் ஒருவரான கமலஹாசனும் தெரிவித்திருக்கிறார்.

அதற்காக அவர் மீது வன்மம் கொண்டு குதிரைபேர-பினாமி அரசின் அமைச்சர்கள் கருத்து தெரிவிப்பதும்-மிரட்டுவதும் ஜனநாயகத்தின அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயலாகும். இப்படி பேசும் அமைச்சர்களை முதலமைச்சர் வேடிக்கை பார்ப்பது அதை விட அடாவடி செயலாகும்.

தமிழக அரசின் ஊழல் குறித்த கமலஹாசனின் கருத்து, தமிழ்நாட்டு மக்களின் குரலாகும். அதை அடக்க முயற்சிக்கும் அமைச்சர்கள், இந்த ஆட்சி இன்னும் எத்தனை காலம் என்பதை உணர்ந்து, தங்களைத் திருத்திக்கொள்ளட்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK Working President MK Stalin has condemned the State Minister Who threatened Actor KamalHaasan.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற