For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவின் உள்ளும் புறமும் சவால்களை வெல்வேன்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் உருக்கமான கடிதம்!

திமுகவின் உள்ளும் புறமும் உள்ள சவால்களை வெல்வேன், எந்த சலசலப்புகளுக்கும் அஞ்சமாட்டேன் என்று தொண்டர்களுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: திமுகவின் உள்ளும் புறமும் உள்ள சவால்களை வெல்வேன், எந்த சலசலப்புகளுக்கும் அஞ்சமாட்டேன் என்று தொண்டர்களுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின், நேற்றுதான் முதல்முறையாக திமுகவின் செயற்குழு நடந்தது. பொதுவாக திமுக செயற்குழு நடந்த பின் அதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு எதாவது கடிதம் எழுதுவது வழக்கம். இந்த முறை செயல்தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

MK Stalin sends emotional letter to DMK cadres

நம் உயிருடன் கலந்துவிட்ட தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் பாச மடல் என்று அந்த கடிதம் உருக்கமாக தொடங்கியுள்ளது.

சூரியன் இல்லாத வானமாக, சொற்கள் தொலைத்த மொழியாக, மாலுமி இல்லாத கப்பலாக, தாயை இழந்த பிள்ளையாகத் தலைவர் கலைஞரை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் கழகத்தின் கோடி உடன்பிறப்புகளில் யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்றே தெரியாமல் இன்னமும் வேதனைக் கடலில் எல்லோரது மனதும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

கடலில் தவிக்கும் கலன்களுக்கு கரை காட்டும் பணியைச் செய்வது கலங்கரை விளக்கம். நம் கழகக் கப்பலுக்கு கடற்கரையிலே பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் என இரண்டு கலங்கரை விளக்கங்கள் ஒரே திசையில் ஒளி வீசி வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. அந்த ஒளியின் வழியில் பயணித்தால், அவர்கள் வழியிலேயே கழகத்தின் லட்சியக் கரையினைத் தொட்டுவிட முடியும்.

அந்த நம்பிக்கையுடன்தான் ஆகஸ்ட் 14ஆம் நாள் கழகத்தின் தலைமைச் செயற்குழு அந்த இருபெரும் தலைவர்களின் பெயரில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கத்தில் கூடியது.அந்த மாபெரும் தலைவர்களின் கொள்கைச் சகோதரனாக விளங்கும் கழகப் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்கள் முன்னின்று நடத்திய செயற்குழு கூட்டத்தில்தான் எத்தனையெத்தனை உணர்ச்சியலைகள். இரங்கல் தீர்மானத்தை வாசித்த செய்தித் தொடர்பு செயலர் டி.கே.எஸ் இளங்கோவன் தொடங்கி, கழகத்தின் முதன்மைச் செயலாளர் அண்ணன் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சகோதரி சுப்புலட்சுமி ஜெகதீசன், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் நண்பர் டி.ஆர்.பாலு, அண்ணன் சுப.தங்கவேலன் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் பொன்முடி, கே.என்.நேரு, ஜெ.அன்பழகன், ஆர்.காந்தி என உரையாற்றியோரின் உதடுகள் வார்த்தைகளாலும், விழிகள் கண்ணீராலும் பேசின. உயிரனைய தலைவருடன், உள்ளம் நிறைந்த தந்தையையும் சேர்த்தே இழந்துள்ள உங்களில் ஒருவனான நான் என்ன பேசமுடியும்?

அதனால்தான் தந்தைக்கு மகனாக, தலைவருக்குத் தொண்டனாக நின்று, அண்ணா நினைவிடத்தில் தலைவரை நல்லடக்கம் செய்ய எடுத்த முயற்சிகளையும் அதற்கேற்பட்ட தடைகளை சட்டரீதியாக வென்றதையும், அதற்குத் துணையாக இருந்த கழக வழக்கறிஞர்களையும் உள்ளத்தின் வார்த்தைகளால் எடுத்துரைத்து, தலைவர் கலைஞரின் லட்சியத்தைக் காக்க அனைவர் முன்பும் உறுதியேற்றேன்.தலைமைச் செயற்குழுவில் தலைவர் கலைஞருக்காக நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மான உறுதிமொழி இந்துமகா சமுத்திரத்தை இரு கையால் அள்ளுவதுபோல நீண்ட ஒரு சகாப்தத்தின் ரத்தினச் சுருக்கமான வரலாற்றுக் கையேடு.

பன்முகத் திறமையும் அவற்றில் முழுமையான வெற்றியும் பெற்ற தலைவர் கலைஞர் அவர்கள் அரசியல்,கலை,இலக்கியம், பத்திரிகை ஆகிய துறைகளில் பெற்ற வெற்றிச் சாதனைகளையும் 5 முறை ஆட்சிப் பொறுப்பேற்று அடிமைச் சங்கிலியை அறுத்தெறிந்து சமூக நீதிப் பாதையில் சாதித்தவைகளையும், இந்திய அளவில் அவர் ஏற்படுத்திய அரசியல் திருப்பங்களையும் உள்ளடக்கிய அந்த இரங்கல் தீர்மானம் என்பது அவரது பெருவாழ்வை நினைவில் ஏந்திப் போற்றுவதுடன், அவர் வழியில் கழகத்தைக் காக்கவேண்டும் என்பதற்கான உறுதியேற்பும் ஆகும்.

கழகத்தின் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மான உறுதிமொழியினைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் 5 மாநகரங்களில் தலைவர் கலைஞரின் புகழுக்கு வணக்கம் செலுத்தும் நினைவேந்தல் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன என்பதை உடன்பிறப்புகளான உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் ஆறுதலடைகிறேன்.முதல் நிகழ்வாக, ஆகஸ்ட் 17 அன்று கலைஞரின் அரசியல் வாழ்வில் தியாகத் தழும்பாக அமைந்த கல்லக்குடி போராட்டம் காரணமாக அவர் சிறை வைக்கப்பட்ட மலைக்கோட்டை மாநகரம் திருச்சியில் கருத்துரிமை காத்தவர் கலைஞர் என்ற தலைப்பில் ஊடக வல்லுநர்கள் பங்கேற்கும் நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது

இரண்டாம் நிகழ்வாக, ஆகஸ்ட் 19 அன்று சங்கம் வளர்த்த மாமதுரையில் சங்கத்தமிழ், குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா என பழந்தமிழ் இலக்கியங்களுக்குத் புதுத்தமிழில் நயம்பட உரை தந்த தலைவர் கலைஞர் அவர்களுக்கு, என்ற தலைப்பில் இலக்கியகர்த்தாக்கள் உரையாற்றுகிறார்கள். மூன்றாம் நிகழ்வு, ஆகஸ்ட் 25 அன்று கலைஞரின் கலைத்துறை வளர்ச்சியிலும் வெற்றியிலும் முக்கிய பங்காற்றிய கோவை மாநகரத்தில் மறக்க முடியுமா கலைஞரை என்ற தலைப்பில் திரைத்துறை -நாடகத்துறை - சின்னத்திரை உள்ளிட்ட கலைத்துறையினர் பங்கேற்கும் நினைவேந்தல் போற்றப்படுகிறது.

தமிழ்மொழி காத்து - இந்தி ஆதிக்கம் எதிர்க்கும் போரில் தனிமைச் சிறையில் தலைவர் கலைஞர் வதைபட்டபோது, என் தம்பி கருணாநிதி இருக்கும் இடமே எனக்கு புண்ணியத் தலம் என்று பேரறிஞர் அண்ணா சொன்னாரே, அந்த பாளையங்கோட்டை சிறை அமைந்துள்ள திருநெல்வேலியில் ஆகஸ்ட் 26 அன்று, அரசியல் ஆளுமை கலைஞர் என்ற தலைப்பில் தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைந்து பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

முத்தாய்ப்பாக, இந்தியாவின் வடதிசை அரசியலை தென் திசை நோக்கித் திருப்பி, சமூக நீதிக் கொள்கையை நாடெங்கும் பரப்பி பயன் விளைவித்த தலைவர் கலைஞர் அவர்களுக்குத் தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் ஆகஸ்ட் 30 அன்று தெற்கில் உதித்தெழுந்த சூரியன் என்ற தலைப்பில் அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்கும் ஐந்தாம் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் தலைவரின் புகழைப் போற்றுபவை. அந்தப் போற்றுதலை ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் கண்ணீருடன் மேற்கொண்டு வருவதைக் காண்கிறேன். தமிழ்நாட்டின் பட்டணங்கள் தொடங்கி பட்டிதொட்டி வரை அமைதிப்பேரணிகள் - மெழுகுவத்தி ஏந்துதல் என அஞ்சலி நிகழ்ச்சிகளை அனைத்துத் தரப்பினரும் நாள்தோறும் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் கண்ணீரும் கடல் கடந்து வந்து நம்மை நனைக்கின்றது. தமிழினத் தலைவர் என்ற பட்டத்திற்கேற்ப வாழ்வையே உலகெங்கும் வாழும் தமிழர்களுக்காக அர்ப்பணித்த மாபெரும் தலைவர் கலைஞர். தலைவருக்கு இரங்கல் என்பதும் நினைவேந்தல் என்பதும் வெறும் சடங்கல்ல, சம்பிரதாயமல்ல. இலட்சியம் காப்பதற்கான சூளுரை. அவர் முன்னெடுத்த போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு, வெற்றி நோக்கி ஒருங்கிணைந்து பயணிப்போம் என்பதற்கான உறுதியேற்பு. அந்த மன உறுதியைத் தலைவரிடமிருந்தே பெறுகிறோம்.

மறைந்துவிட்ட தலைவரிடமிருந்து மன உறுதியைப் பெற முடியுமா? இதுதான் பகுத்தறிவா? என சிலர் எண்ணிடக் கூடும். அவர்களுக்கெல்லாம் உங்களில் ஒருவனான நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், மனதிடத்துடன் போராடிய வீரர்கள் பலர் உண்டு. மரணத்தின் விளிம்பில் நின்றபோதும் மண்டியிடாமல் போரிட்ட மாவீரர்கள் சிலர் உண்டு. ஆனால், மரணத்திற்குப் பிறகும் தனது போராட்ட உறுதி குலையாமல், கொள்கை எனும் ஆயுதத்தைக் கைவிடாமல் களத்தில் நின்று வெற்றி பெற்ற வீரத்தலைவர் என்ற புது வரலாறு படைத்தவர் நம் ஆருயிர்த் தலைவர் கலைஞர் அவர்கள்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவிடம் தலைவர் கலைஞர் இரவலாகப் பெற்ற இதயத்தை, அந்த அண்ணனின் கால் மலரில் பத்திரமாக வைப்பதற்கு மரணத்திற்குப் பிறகும் கலைஞர் நடத்திய சட்டப் போராட்டமும் அதில் அவர் பெற்ற வெற்றியும் சரித்திரச் சாதனையாகும். மானம் அவன் கேட்ட தாலாட்டு: மரணம் அவன் ஆடிய விளையாட்டு என்று, தான் எழுதிய கவிதை வரிகளுக்கேற்ப, மரணத்தின் உச்சியில் நின்றும் மானத்துடன் போராடிய மறத்தமிழர் நம் தலைவர். அதனால்தான் அவரிடமிருந்தே எப்போதும் நாம் மன உறுதியினைப் பெறுகிறோம்.

எந்த நிலையிலும் குலையாத எஃகு உள்ளம் கொண்டவர் தலைவர் கலைஞர். நெருக்கடி நிலையா, எதிரிகளின் வசவா, வீண்பழியா, ஆட்சிக் கலைப்பா, தேர்தல் தோல்வியா, தொடர்ந்து துரத்தும் துரோகங்களா, துயரம் தரும் பிரிவுகளா எதுவாக இருந்தாலும் அதனை இயல்பாக எதிர்கொண்டு கழகத்தைக் காத்ததுடன், அந்தக் கழகம் காக்கும் தன் உயிரினும் மேலான உடன்பிறப்புகளையும் கண் போலக் காத்தவர்.

அரை நூற்றாண்டு காலம் கழகத்தின் தலைமைப் பொறுப்பை திறம்பட ஏற்று, கட்டுக்கோப்பு குலையாமல் வைத்திருந்ததுடன், இப்படிப்பட்ட பேரியக்கத்தில் இத்தனை ஜனநாயகமா என இந்தியத் தலைவர்களும் வியக்கும்படி வழிநடத்தியவர். நாம் நடந்து செல்லும் பாதையெல்லாம் அவர் போட்டவையே! நாம் காணுகின்ற திசையெல்லாம் அவர் ஒளியே!

கலைஞர் என்பது வெறும் பெயரல்ல. அது திராவிட இனத்தின் நிரந்தர அடையாளம். தமிழ்க் குலத்தின் பெருமைமிகு வரலாறு. கலைஞர், மரணம் கடந்தவர். அவர் உயிர் பிரியவில்லை. ஒவ்வொரு உடன்பிறப்பின் உணர்விலும் கலந்திருக்கிறது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது கழகத்தையும், அரசையும் தன் இரு தோள்களில் தாங்க வேண்டிய பெரும் பொறுப்பு தலைவர் கலைஞருக்கு இருந்தது. பன்முக ஆற்றல் கொண்ட தலைவர் கலைஞர் அவர்களே அந்தப் பொறுப்புச் சுமையைத் தாங்குவதற்கு எதையும் தாங்கும் தன்மை கொண்ட பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாகக் கேட்டார். நான், கலைஞரல்ல. கலைஞரின் மகன் என்ற பெருமையும், அதைவிட அவரது உடன்பிறப்புகளான உங்களில் ஒருவன் என்கிற உரிமையும், கழகத்தின் தலைமைத் தொண்டனாக இருந்து செயல்பட வைக்கிறது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காகத்தான், ஜூன் 3ஆம் நாள் திருவாரூரில் நடைபெற்ற தலைவர் கலைஞரின் பிறந்தநாள் விழாவில், அவரது ஆற்றலில் பாதியைக் கேட்டேன்.

தலைவர் கலைஞர் நம்மை விட்டுச் சென்றுள்ள நிலையில், அவர் வழங்கிய ஆற்றலைக் கொண்டு, கழகத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பை துணிந்து ஏற்றுள்ளேன். அவரது அன்பு உடன்பிறப்புகள் என்றென்றும் பக்கபலமாக இருப்பார்கள் என்கிற அசையாத நம்பிக்கைதான் இந்தத் துணிவுக்குக் காரணம். வெட்டி வா என்றால் கட்டி வரக் கூடியவர்கள் என் உடன்பிறப்புகள் எனத் தலைவர் கலைஞர் அவர்கள் பெருமிதத்துடன் குறிப்பிடுவார். அத்தகைய உடன்பிறப்புகளின் பெருந்துணை உள்ளவரை எனக்கு கவலையில்லை.

நாம் நிறைவேற்றி முடிக்க வேண்டிய சவாலான பணிகள் நிறைய இருக்கின்றன. கழக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் சிகரமாக உயர்ந்திருந்த தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளியிருக்கிறார்கள் மாநில ஆட்சியாளர்கள். மதவெறியை விதைத்து - மாநில உரிமைகளைப் பறித்துக் கொண்டிருக்கிறார்கள் மத்திய ஆட்சியாளர்கள். தலைவரை இழந்த கழகத்தில் என்ன நடக்கிறது என்பதில் நம்மை விட அக்கறை காட்டுகிறார்கள் அரசியல் எதிரிகள். ஈறைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கலாமா என நப்பாசை கொண்டிருக்கிறார்கள்.

நான் கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டவன். சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன். கழகத்திற்கு உள்ளும் புறமும் உருவாக்கப்படும் சவால்களை வென்றுகாட்டுவேன், கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாம் உங்களின் துணையோடு!

தந்தை பெரியாரின் ஒளியில் - பேறிஞர் அண்ணா காட்டிய நெறியில் -தலைவர் கலைஞர் நடந்த வழியில் தொடர்ந்து நடைபோடுவோம். தொய்வின்றி செயல்படுவோம்.உடன்பிறப்புகளே உங்களை நம்பி உறுதியேற்கிறேன். உங்களின் ஒருவனாகப் பயணிக்கிறேன். கலைஞரின் மகனாக உங்களிடம் நிற்கிறேன். சுயமரியாதை பகுத்தறிவு சமூகநீதி - மதநல்லிணக்கம் காக்கும் கலைஞரின் இலட்சியங்களைத் தொடர்ந்து நிறைவேற்ற சூளுரைப்போம். செயலாற்றுவோம். வெற்றிச் சுடர் ஏந்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.

English summary
MK Stalin sends emotional letter to DMK cadres after the dismissal of DMK leader Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X