அவன், இவன் என்று அவைக்குள் பேசுகிறார்கள்.. கருணாஸ் ஆவேசம்
Recommended Video

சென்னை: சட்டசபைக்குள் அவன், இவன் என்று பேசுவதாக முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த எம்எல்ஏவான கருணாஸ் தெரிவித்தார்.
இன்று சட்டசபை நிகழ்வுகளை பாதியிலேயே முடித்துக்கொண்டு பிறகு வெளியே வந்த கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடி மக்கள் பிரச்சினை பற்றி பேசியபோது, அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் எள்ளி நகையாடினர். 13 உயிர்களுக்கு இந்த மன்றம் கொடுக்கும் மரியாதை இதுதானா? இதுதானா அம்மா தலைமையில் நடக்கும் ஆட்சி?

முதல்வரிடம் உள்ள துறை
1957ல் 5 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டபோது காவல்துறை அமைச்சராக இருந்த கக்கன் அந்த பொறுப்பில் இருந்து விடுவித்தார். அன்று முதல் முதல்வர்களிடம்தான் காவல்துறை பொறுப்பு உள்ளது. முதல்வரிடம் உள்ள துறையே இப்படி கவனக்குறைவாக செயல்பட்டுள்ளதே என்று சுட்டிக் காட்டினால் அதை எள்ளி நகையாடும் வகையில் அவை உள்ளது.

துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டது யார்
நடக்கும் தவறை சுட்டி காட்ட ஒரு எம்எல்ஏவுக்கு உரிமை இல்லை என்று சபாநாயகர் மறுக்கிறார். அவர்களுக்கு தேவை, அவர்கள் செய்ததை சரி என்று சொல்வது மட்டுமே. துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்பதை கேட்க பதில் சொல்ல அவையில் யாரும் தயாராக இல்லை. இது என்ன ஜனநாயகம், இது என்ன மன்றம்?

அவன், இவன் என்கிறார்கள்
234 அவை உறுப்பினர்களும் லட்சக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் எவ்வளவு கவுரமானவர்களாக உயர்ந்த வார்த்தைகளை பேச வேண்டும். ஆனால், அவன், இவன் என்று அவைக்குள் பேசுகிறார்கள். இதை எப்படி சபாநாயகர் எப்படி அனுமதிக்கிறார். உலகில் போனால் வராதது இரண்டுதான். ஒன்று உயிர், மற்றொன்று மானம். இந்த அவையிலேயே மானம் பறிபோகிறது. இதை சபாநாயகர் கண்டிக்கவில்லை.

காவல்துறை நடுநிலை
பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய எஸ்விசேகர் மீது காவல்துறை இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. நியாயம் என்பது நடுநிலையாக இருக்க வேண்டும். இதையெல்லாம் கண்டித்து இந்த சட்டசபை கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்கிறேன். இவ்வாறு கருணாஸ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications