வெளியேறிய வைகோ, ராமதாஸ்- டாட்டா காட்டிய கேப்டன்.. போயஸ் தோட்டத்துக்கு பா.ஜ.க. வலை
சென்னை: தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் செல்ல இருப்பது சட்டசபை தேர்தலில் அண்ணா தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா இடையேயான கூட்டணிக்கு முதல் அடித்தளமாகவே அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் எப்படியும் ஆட்சியைப் பிடித்தாக வேண்டும் என்பதில் தி.மு.க கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது.
இதற்காக மெகா கூட்டணியை உருவாக்க பகீர பிரயத்தனங்களை தி.மு.க. மேற்கொண்டு வருகிறது. ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை நிச்சயம் தி.மு.க. அணியில் இடம்பெறும் என்றே கூறப்பட்டு வருகிறது.. இந்த இரு கட்சிகளும் இரட்டை குழல் துப்பாக்கிகளாக அ.தி.மு.க.வை எதிர்த்து தீவிரமாக களமாடி வருகின்றன.

இடதுசாரிகள், மதிமுக, விசி
அதேபோல் இடதுசாரிகளை எப்படியாவது இம்முறை 'வளைத்துவிட' வேண்டும் என்பதிலும் தி.மு.க. மும்முரம் காட்டி வருகிறது. இதன் முதல் கட்டமாகத்தான் ம.தி.மு.க,- விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுடன் இணைந்து 'மக்கள் நலனுக்காக கூட்டியக்கத்தில்' இடதுசாரிகள் கைகோர்த்துள்ளன. அண்மைக் காலமாக இடதுசாரிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை 'ஒற்றை குரலாக'வே ஒலிப்பது தி.மு.க.வை மகிழ்ச்சியில் திளைக்க வைத்திருக்கலாம்..

தேமுதிக- காங்கிரஸ்நெருக்கம்
எப்படியும் நம்மோடுதான் அணிசேரும் என்று காங்கிரஸ் மீது அபரித நம்பிக்கையை கொண்டிருக்கிறது தி.மு.க. இதனிடையே கடந்த சில நாட்களாக காங்கிரஸோடு மிக நெருக்கம் காட்டி வருகிறார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். இதன் உச்சமாக, நீங்கள் பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறீர்களே.. காங்கிரஸ் தலைவரை சந்திக்கிறீர்களே என்று செய்தியாளர்கள் கேட்டபோது, நான் எந்த கூட்டணியிலும் இல்லை என ஒரே போடாகப் போட்டு பாரதிய ஜனதா கூட்டணிக்கு டாட்டாவும் காட்டிவிட்டார் கேப்டன் விஜயகாந்த்.
ம.தி.மு.க.- விடுதலைச் சிறுத்தைகள் எப்படி இடதுசாரிகளை தி.மு.க. அணிக்கு கொண்டு வருமோ அதேபோல் தே.மு.தி.க.வை காங்கிரஸ் கொண்டு வந்துவிடும் என்ற நம்பிக்கை அண்ணா அறிவாலயத்தில் வேர்பிடித்துக் காத்திருக்கிறது. தி.மு.க.வின் இந்த அட்டகாச வியூகத்தால் அதிர்ந்து போய் நிற்கிறது பாரதிய ஜனதா கட்சி.

கழற்றிவிட்ட கட்சிகள்..
மத்தியில் நாம் தானே ஆளுகிறோம்.. எப்படியும் தமிழக எதிர்க்கட்சிகள் நம்மோடுதான் கைகோர்க்கும்.. வழக்கம் போல ஒரு மெகா கூட்டணி அமைத்தால் கூட்டத்தோடு கூட்டமாக 4 அல்லது 5 தொகுதிகள் போணியாகிவிடும் என்பது பா.ஜ.க.வின் கணக்கு. ஆனால் முதல் ஆளாக ம.தி.மு.க. கூட்டணியைவிட்டு விலகியது; பின்னர் "அடைந்தால் முதல்வர் பதவி" என்ற இலக்கோடு தனிவாத்தியம் வாசித்து வருகிறது பா.ம.க.; தற்போது அந்த கட்சி பெரிதும் நம்பிக்கை வைத்திருந்த விஜயகாந்தும், டாட்டா காட்டி விட்டார்.. இதனால் கைபிசைந்து நிற்கிறது பாரதிய ஜனதா கட்சி.

ஆயுதமும் ஆதாயமும்..
அண்ணா தி.மு.க.வைப் பொறுத்தவரையில் வழக்கம் போல சிறுகட்சிகளை வைத்து தனித்தே 'களமாடிவிடுவது' என்பதில் உறுதியாகத்தான் இருக்கிறது.. ஆனாலும் ஜெயலலிதாவின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக இருக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு எனும் ஆயுதம்தான் ஒட்டுமொத்த தமிழக அரசியல் நிலைமையை மாற்றி போடக் கூடியதாக இருக்கும் என்கிறது டெல்லி தகவல்கள்..
பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரையில் ராஜ்யசபாவில் அண்ணா தி.மு.க.வின் ஆதரவு தேவை என்கிற நிலையில் இருக்கிறது; அண்ணா தி.மு.கவைப் பொறுத்தவரையில் வழக்கு விவகாரங்களில் பா.ஜ.க.வின் ஆதரவு தேவை என்கிற நிலையில் இருக்கிறது.
இந்த பரஸ்பர தேவைகள் இரு கட்சிகளையும் நெருங்கி வரச் செய்து சட்டசபை தேர்தலில் "கூட்டணியாக" உருவெடுக்க இருக்கிறது... அத்தனை கட்சிகளும் நட்டாற்றில்விட்டுவிட்டாலும் அண்ணா தி.மு.க. எனும் ஆலமரத்தைப் பற்றிக் கொண்டு ஆல்போல் வேர்பிடித்துவிடலாம் என கனவு காண்கிறது பா.ஜ.க.; இருக்கிற சிறு கட்சிகளில் 'பெரிய கட்சியாக' பா.ஜ.க.வை அரவணைத்துக் கொள்வோம் என கணக்குப் போடுகிறது அ.தி.மு.க..

கூடுதல் தொகுதிகள்?
ஆனால் 'ஆதாயங்களை' சுட்டிக் காட்டி கணிசமான தொகுதிகளைப் பெற்றுவிடுவது என்பதில் பாரதிய ஜனதா உறுதியாக இருக்கிறது.
டெல்லிக்கும் போயஸ் தோட்டத்துக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் இந்த திரைமறைவு பேச்சுவார்த்தைகளில் முக்கிய திருப்பமாகத்தான் பிரதமர் மோடியின் தமிழக பயணம் அமைகிறது. உடல்நலக் குறைவால் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத முதல்வர் ஜெயலலிதா இன்று விமான நிலையம் போய் பிரதமர் மோடியை வரவேற்றார்; பிரதமர் மோடியும் 'உடல்நல'க் குறைவால் அவதிப்படும் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட மாளிகையில் 'விருந்து சாப்பிட'ப் போகிறார்...

உதயமாகும் அணி சேர்க்கை?
இந்த விருந்துதான் பாரதிய ஜனதா மற்றும் அண்ணா தி.மு.க. இடையேயான கூட்டணிக்கான அதிகாரப்பூர்வமான முதல் படியாக அமையும் என்றும் கூறப்படுகிறது. அப்படி பாரதிய ஜனதா- அ.தி.மு.க. இடையேயான கூட்டணி உறுதியாகும் நிலையில் தி.மு.க.விடம் இருந்து சற்றே எட்டி நிற்கும் இடதுசாரிகள், தேமுதிக, அறிவாலயத்துக்குள் அடி எடுத்து வைக்கும்; தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைவது தவிர்க்க முடியாத ஒன்றாகும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications