25 ஆண்டுகளுக்குப் பிறகு.. முதல் முறையாக "வெளிக்காற்றை" சுவாசித்த நளினி!
சென்னை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி 25 ஆண்டுகாலத்துக்குப் பின்னர் தந்தையின் இறுதி சடங்குக்காக முதல் முறையாக பரோலில் வெளியே வந்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி 1991ஆம் ஆண்டு மே 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டோரில் நளினியும் முருகனும் தம்பதிகள்.

நளினி கைது செய்யப்பட்ட போது 2 மாத கர்ப்பிணியாக இருந்தார். சென்னை ராயப்பட்டையைச் சேர்ந்தவர் நளினி. அவரது கணவர் முருகன், இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பின்னர் இந்த வழக்கில் நளினியின் தாயார் நர்ஸ் பத்மா, சகோதரர் பாக்கியநாதன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோர் பெரும் சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டதாக பல புத்தகங்கள் வெளியாகி உள்ளன. அதில் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்களில் நளினியும் ஒருவர். இவ்வழக்கு சென்னை தடா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 1998ஆம் ஆண்டு ஜனவரி 28-ந் தேதியன்று நளினி, அவரது தாய் பத்மா, சகோதரர் பாக்கியநாதன் உட்பட மொத்தம் 26 பேருக்கும் தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது நாட்டை அதிர வைத்தது.
இந்த சிறைவாச காலத்திலேயே நளினி அரித்ரா என்ற பெண் குழந்தையையும் பெற்றார். அவர் தற்போது பாட்டியின் அரவணைப்பில் வெளிநாட்டில் வசித்து வருகிறார். பின்னர் 26 பேரின் தூக்கு தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட நளினியின் தாய் பத்மா, சகோதரர் பாக்கியநாதன் உள்ளிட்ட 19 பேர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் நளினி உட்பட 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் ராஜிவ் காந்தியின் மனைவியும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி வேண்டுகோளை ஏற்று நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

நளினி தன் தந்தையைப் பார்க்க பரோல் கேட்டு பல முறை விண்ணப்பித்தும் சிறை நிர்வாகம் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் நீதிமன்றத்தில் நளினி முறையிட்டிருந்தார். இந்நிலையில்தான் அவரது தந்தை சங்கரநாராயணன் நெல்லையில் நேற்று காலமானார்.
இதனைத் தொடர்ந்து சென்னைக்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டது. நளினியும் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள 12 மணிநேர பரோல் கொடுக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகள் சிறைவாசத்தில் முதல் முறையாக பரோலில் வெளியே வந்துள்ளார் நளினி.












Click it and Unblock the Notifications