"ஆம்புலன்ஸுக்கு வழிவிட முடியாது".. அரை மணிநேரமாக துடிதுடித்து போன உயிர்.. ச்சே இப்படியும் மனிதர்களா?
சொத்து தகராறு காரணமாக ஆம்புலன்ஸுக்கு வழிவிட மறுத்ததால் நாமக்கல்லில் ஒரு முதியவரின் உயிர் அநியாயமாக பறிபோயுள்ளது.
ராசிபுரம்: தன்னுடைய நிலம் என்பதால் அதை அடைத்து வைத்துவிட்டு ஆம்புலன்ஸுக்கு வழிவிட மறுத்ததால் ஒரு உயிர் பறிபோன சம்பவம் நாமக்கல்லில் அரங்கேறியுள்ளது.
சொத்து தகராறு காரணமாக ஆம்புலன்ஸுக்கு வழிவிட மறுத்த நபர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கண் முன்னே ஒரு உயிர் போய்க் கொண்டிருக்கிறது எனத் தெரிந்திருந்தும் பகையை மனதில் வைத்து பழிவாங்கும் மனிதர்களை என்னவென்று சொல்வது?

சொத்து தகராறு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஓசவுதாபுரத்தைச் சேர்ந்தவர் முத்து (75). இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் ஜெயக்குமார் என்பவருக்கும் கடந்த சில வருடங்களாக சொத்து தகராறு இருந்துள்ளது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்று வருகிறது. இதனால் இரு குடும்பத்தார் இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துள்ளது.

பாதையை அடைத்து அராஜகம்
இந்த சூழலில், முத்துவின் வீட்டுக்கு செல்லும் பாதையின் ஒருபகுதி ஜெயக்குமாருக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் அந்த இடத்தை சிறிய பாறாங்கற்களை போட்டு அண்மையில் அடைத்துள்ளார். இதனால் முத்து வீட்டுக்கு இருசக்கர வாகனங்களில் மட்டுமே செல்ல முடியும். கார் போன்ற வாகனங்கள் செல்ல முடியாது. இதுதொடர்பாகவும் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

ஆம்புலன்ஸுக்கு வழிவிட மறுப்பு
இந்நிலையில், முத்துவுக்கு கடந்த வியாழக்கிழமை மாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டில் தனியாக இருந்த அவரது பேத்தி, ஆம்புலன்ஸுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். ஆனால், பாதையில் கற்கள் இருப்பதால் ஆம்புலன்ஸால் வர முடியவில்லை. இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அந்தக் கற்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயக்குமார் என் நிலத்தில் இருக்கும் கற்களை யாரும் தொடக்கூடாது என மிரட்டினார். இதனால் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும், ஜெயக்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

துடிதுடித்து போன உயிர்
இந்த வாக்குவாதத்தால் அரை மணிநேரம் விரயமாகியுள்ளது. எனினும், கற்களை அப்புறப்படுத்த ஜெயக்குமார் அனுமதிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நடந்து சென்று முத்துவை தூக்கி வர சென்றனர். ஆனால், அதற்குள்ளாக முத்துவின் உயிர் போயிருந்தது. சொத்து தகராறு காரணமாக ஆம்புலன்ஸுக்கு வழிவிட மறுத்த ஜெயக்குமார் மீது முத்து குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications