குழந்தைகள்… மூதாட்டிகள்… எம்.ஜி.ஆர் ஸ்டைலில் புதுக்கோட்டையில் அசத்திய ஸ்டாலின்
புதுக்கோட்டை: தமிழகத்தில் நடப்பது ஆட்சி அல்ல. வெறும் காட்சி தான், அதுவும் காணொலி காட்சி தான். இங்கு ஆட்சி நடக்கவில்லை, படுத்த நிலையில் உள்ளது. அதையும் தாண்டி கோமா நிலையில் உள்ளது. எனவே தான் தமிழக மக்களை காப்பாற்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன் என்று புதுக்கோட்டை மாவட்ட மக்களிடம் பேசியுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். குழந்தைகள், மூதாட்டிகள், பெண்கள் என வழிநெடுகிலும் தன்னை சந்திக்கும் அனைவரையும் எம்.ஜி.ஆர் ஸ்டைலில் அன்போடு பேசி அசத்தினார் ஸ்டாலின்.
லேசான மழைச் சாரல் தூவ... இதமான குளிர்காற்று வீச... புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 12வது நாள் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தினை உற்சாகமாக தொடங்கினார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மழை தூறினாலும் பரவாயில்லை மு.க. ஸ்டாலின் பயணத்தில் கலந்து கொள்ளவும், அவரை பார்த்து உரையாடவும் இன்று காலையிலேயே அறந்தாங்கி நகரில் மக்கள் திரள தொடங்கினர். இதனால் காலை 7 மணிக்கே நகரம் பரபரப்புடன் காணப்பட்டது.

உற்சாக ஸ்டாலின்
அறந்தாங்கி கட்டுமாவடி முக்கத்தில் தனது நடைபயணத்தை துவக்கிய ஸ்டாலின் பஸ் ஸ்டாண்ட், அரசங்குளம் பஸ் ஸ்டாப், வாகை மரம் பஸ் ஸ்டாப் வழியாக புதுக்கோட்டை மெயின்ரோடு வரை சுமார் 3 கி.மீ தூரம் பொதுமக்களை சந்தித்தபடி நடந்தே வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கைகொடுத்து உற்சாகப்படுத்தினர். நடைபயணத்தின் போது பேருந்தில் ஏறி மக்களின் குறைகளை ஸ்டாலின் கேட்டறிந்தார்.

அண்ணா சிலைக்கு மாலை
வழியில் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வாகைமரம் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள கலைஞர் மன்றத்துக்குள் சென்ற ஸ்டாலின், அங்கிருந்த கட்சி நிர்வாகிகளுடன் பேசினார்.

மாணவிகள் உற்சாகம்
அறந்தாங்கியிலிருந்து மறமடக்கி செல்லும் வழியில் சுனையக்காடு என்ற இடத்தில் அரசமரத்தில் காரை நிறுத்திய ஸ்டாலின், அங்கு காத்திருந்த மக்களை சந்தித்து பேசினார். பள்ளிக்கு செல்ல காத்திருந்த மாணவிகள் அவருக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

மூதாட்டிகள் விசாரணை
அப்போது அங்கு வந்த 3 மூதாட்டிகள் ஸ்டாலினிடம், ‘நல்லா இருக்குறீங்களா தம்பி, அப்பா எப்படி இருக்குறாரு' என வாஞ்சையுடன் நலம் விசாரித்தனர். அதற்கு ஸ்டாலின் எல்லோரும் நலமாக இருப்பதாக கூறினார்.

ஆலமரத்தடியில் சந்திப்பு
ஆலங்குடி சட்டமன்ற தொகுதி மறமடக்கி அருகே ஆலமரத்தடியில் அமர்ந்து அங்கு திரண்டிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பேசிய அவர், தற்போது தமிழகத்தில் நடப்பது ஆட்சி அல்ல. வெறும் காட்சி தான், அதுவும் காணொலி காட்சி தான். இங்கு ஆட்சி நடக்கவில்லை, படுத்த நிலையில் உள்ளது. அதையும் தாண்டி கோமா நிலையில் உள்ளது. எனவே தான் தமிழக மக்களை காப்பாற்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன் என்றார்.

திமுக ஆட்சிக்கு வரும்
3 கட்ட பயணத்தில் முதல் கட்டத்தில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் வந்துள்ளேன். பயணம் தொடங்கிய நாள் முதல் காலை 8 மணி முதல் இரவு வரை மக்களை சந்தித்து வருகிறேன். அறந்தாங்கியில் இன்று காலை சுற்றுப்பயணத்தை தொடங்கியது முதல் அனைத்து தரப்பினரும் பல்வேறு குறைகளை தெரிவித்து வருகின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அவர்களின் குறைகள் போக்கப்படும் என்றார்.

திருமயத்தில் பேச்சு
தொடர்ந்து ஸ்டாலின் வேனில் புறப்பட்டு திருமயம் வந்தார். அங்கு பஸ் நிலையம் அருகே வேனில் இருந்தவாறு பேசினார். அவரது பேச்சை கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

மகளிர் சுய உதவிக்குவினர்
மதியம் 1 மணி அளவில் புதுக்கோட்டை கிரீன்பேலஸ் மண்டபத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினரை சந்தித்து உரையாடினார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தற்போது மகளிர் சுயஉதவிக்குழு நலிவடைந்த நிலையில் உள்ளதை சுட்டிக்காட்டினர்.












Click it and Unblock the Notifications