9-ம் வகுப்பிலேயே நீட் கிளாஸ்-'கொள்ளை' கும்பல்களுடன் சிபிஎஸ்இ பள்ளிகள்.. எத்தனை உயிர்கள்தான் வேணுமோ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு என்பது 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்குதான் நடத்தப்படுவது என்பது உண்மை.. ஆனால் நீட் தேர்வுக்கு இப்போதே தயாராகிவிடுங்கள் என 9-ம் வகுப்பில் இருந்தே பள்ளிக்கூடங்கள் சிறப்பு வகுப்புகளை பெற்றோர்கள் மீது 'திணிக்கிற' கொடூரம் இப்போது பட்டி தொட்டி எங்கும் தலைவிரித்தாட தொடங்கிவிட்டது.

மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் இருந்தாலே போதும்; அதனடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. இதனால் கிராமப்புறத்தில் அல்லும் பகலும் படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்த ஏழை வீட்டு பிள்ளைகளும் மருத்துவராக முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. இதற்காகவே அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏராளமான உதவிகளை தமிழ்நாட்டு அரசுகளும் வாரி வழங்கின.

நீட் தற்கொலைகள்

ஆனால் அத்தனையிலும் இழவு விழுந்துவிட்டதுதான்.. நீட் என்ற கொடூரத்தைத் திணித்து ஒட்டுமொத்த அடித்தட்டு ஏழை வீட்டு மாணவர்களின் மருத்துவ படிப்புக்கு ஒரேயடியாக கொள்ளி வைத்துவிட்டனர். இப்போது நீட் தேர்வு என்ற பெயரில் கல்வி கொள்ளை கும்பல் கொழுத்து திரிய, நீட் தேர்வில் மதிப்பெண்கள் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற அச்சத்திலும் நீட் தேர்வில் வெற்றி பெறவில்லையே என்ற விரக்தியிலும் பிஞ்சு பிள்ளைகள் தூக்கில் தொங்குகிற பேரிடியைத்தான் சுமக்க வேண்டியது உள்ளது.

9-ம் வகுப்பிலேயே நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள்

நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழானவைதான். இதனால்தான் இன்றைக்கும் மாநில பாடத்திட்டங்களில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் என்பது எட்டாகனியாகவே இருந்து வருகிறது.

நீட் தேர்வு என்பது தமிழ்ச் சமூகத்தில் மற்றொரு பேரவலத்தையும் திணித்துக் கொண்டிருக்கிறது. சிபிஎஸ்இ பள்ளிகள் இப்போது 6,9-ம் வகுப்புகளுக்கு அட்மிஷன் போடும்போதே, எங்களது பள்ளியில் ஜேஇஇ, நீட் தேர்வுகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று சொல்லி அத்றகு தனியே பெருந்தொகையை வசூலித்து விடுகின்றன.

கல்லாவை நிரப்பும் கல்வி கொள்ளை கும்பல்கள்

நீட் தேர்வு என்பதே 12-ம் வகுப்புக்கு பின்னர்தானே.. ஆனாலும் 9-ம் வகுப்பில் இருந்தே உங்கள் பிள்ளைகளை நாங்கள் தயார் செய்கிறோம் என்று பிரசங்கம் செய்து உலகத்திலேயே நீட் தேர்வு மட்டுமே உயர்வானது என்பதாக கற்பித்து, தங்களது கல்லா பெட்டிகளை நிரப்புவதற்காக கல்வி கொள்ளை கும்பலுடன் சிபிஎஸ்இ பள்ளிகள் இணைந்து கை கோர்த்து பெற்றோர்களை சூறையாடிக் கொண்டிருக்கின்றன. சிபிஎஸ்இ-ல் இப்படி 6, 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எல்லா ஜேஇஇ, நீட் தேர்வுகளுக்கு 10-ம் வகுப்பை தொடுவதற்கு முன்னரே ஆலாய் பறக்க வேண்டும் என்று திணிக்கிறது சிபிஎஸ்இ மற்றும் கல்வி கொள்ளை கும்பல்கள்.

ஒதுக்கப்படும் மாநில பாட திட்ட மாணவர்கள்

இன்னொரு பக்கம் 10-ம் வகுப்பை முதலில் படித்து முடிப்போம்; 12-ம் வகுப்பை நன்றாக படிப்போம் என 10-ம் வகுப்புக்கு முன்னரே ஜேஇஇ, நீட் தேர்வுக்கு தயாராகும் உலகில் இருந்து அன்னியப்படுத்தப்படுத்த "வேற்றுகிரக வாசிகளை" போல மாநிலப் பாடத்திட்டத்தைச் சேர்ந்த மானவர்கள் ஒதுக்கித் தள்ளப்படுகிற பேரவலத்தை யார் புரிய வைப்பது? என் வீடு இருக்கிறது.. என் வீட்டில் என் மகனை சிபிஎஸ்இ பள்ளியில் படிக்க வைத்து அவனை 9-ம் வகுப்பிலேயே நீட் நுழைவுத் தேர்வு வகுப்பில் சேர்க்கிறேன். என் வீட்டுக்கு அருகே இருக்கும் பெற்றோர், மகனை மாநில பாடத்திட்டத்தில் படிக்க வைக்கின்ற போது, அவங்க பிள்ளை எல்லாம் இப்ப இருந்தே நீட் தேர்வுக்கு படிக்குதே.. என்ற ஏக்கம்,. அந்த பெற்றொருக்கும் மாணவருக்கும் இயல்பானதாக தொற்றிவிடுமே.. இந்த வலிந்து திணிப்பை நெருக்கடியை, சாமானிய பெற்றோரின் குரல்வளையை நெருக்குவதே சிபிஎஸ்இ மற்றும் ஜேஇஇ-நீட் தேர்வுக்கு உங்கள் பிள்ளைகளை நாங்கள் தயார்படுத்துகிறோம் என்கிற கல்வி கொள்ளை கும்பல் பயிற்சி நிறுவனங்களும்தான்.

பிஞ்சு மாணவர்கள் மீது 'கல்வி' வன்முறை

தமிழ்நாட்டின் சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஜேஇஇ-நீட் நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்பிலும் சேருகிறான்.. 9-ம் வகுப்பு படிக்கும் போதே 10-வது பாடங்களையும் படித்தாக வேண்டிய கட்டாயம்.. இந்த பிள்ளைகள், பிஞ்சு குழந்தைகள் இல்லையா? பாவம் இல்லையா? எத்தனை பாடங்களைத்தான் மனதில் சுமக்கும்? இந்த பிஞ்சு குழந்தைகளுக்கு படிப்பு தவிர வேறு உலகமே தெரிந்துவிடவே கூடாதா? எவ்வளவு பெரிய வன்கொடுமை தெரியுமா?

பிஞ்சு பிள்ளைகள் என்பதால் பெற்றோர்கள் திணிக்கும் வன்கொடுமை- பள்ளி நிர்வாகம் என்ற பெயரில் அவர்களது வன்கொடுமை.. இத்தனையையும் தாங்கும் இந்த பிள்ளைகளால் எத்தகைய ஆரோக்கியமான மனிதவளமுள்ள சமூகம்தான் உருவாகிவிட முடியும்?

நீட் தேர்வுகள் எந்த எழவைத்தான் சாதித்தன?

எதற்காக இந்த ஜேஇஇ, நீட் எனும் கொடூரங்கள்.. 12-ம் வகுப்பு வரை அவர்களை அவர்களது மொழியில் அவர்களது மாநில திட்டத்தில் படிக்கத்தான் அனுமதித்து தொலையலாமே.. 12-ம் வகுப்பு பின்னர் அவர்களது மதிப்பெண் அடிப்படையில் எதிர்கால கல்வியைத் தீர்மானித்துவிட்டு போவதில் யாருக்குதான் என்ன கேடு வந்துவிடப் போகிறது? இத்தனை ஆண்டுகளாய் இருந்து வந்த இந்த நடைமுறையை மாற்றி தூரப் போட்டுவிட்டு செக்கு மாடுகளாய் பெற்றோரையும் பிஞ்சு மாணவர்களையும் ஜேஇஇ -நீட் எனும் தேர்வுகளின் பின்னால் தெருத்தெருவாய் அலையவிட்டு அவர்களது சொத்துகளையும் பணத்தையும் சூறையாடிக் கொழுத்து திரிவதைவிட, ஏழை எளிய சாமானிய மக்களின் கல்வி கனவுகளை காவு கொண்டு கும்மாளம் போட்டு திரிவதைவிட உங்களால் எந்த எழவைத்தான் சாதிக்க முடிந்தது?

பெற்றோரின் பரிதாபம்

இன்னொருபக்கம் ஜேஇஇ, நீட் தேர்வுகளைத்தான் தேர்வு செய்வோம் என பிடிவாதம் பிடிக்கிற பெற்றோர்கள்.. அவர்களை சொல்லியும் குற்றமில்லை.. ஒட்டுமொத்த சமூகமே இயங்குகிற போக்கில்தானே அவர்களும் பயணித்தாக வேண்டும்.. அந்த பெற்றோரின் குமுறலும் வலியும் எப்படியானதாக இருக்கும் என்பதை அனுபவிக்காத கும்பலுக்கு அதைப்பற்றி என்ன கவலை வந்துவிடப் போகிறது?

எதற்குதான் இந்த நீட் தேர்வு?

ஜேஇஇ- நீட் தேர்வுகள்தான் பெரிய தேர்வுகளா? என்பது நமது கேள்வி அல்ல.. இநத ஜேஇஇ, நீட் தேர்வுகள் எல்லாம் கட்டாயம்தானா? இந்த தேர்வுகளை எல்லாம் வைத்துதான் இத்தனை ஆண்டுகள் மருத்துவர்களும் பொறியியல் வல்லுநர்களும் பிறப்பிக்கப்பட்டனரா? எந்த எழவுக்குதான் இத்தகைய நுழைவுத் தேர்வு கொடூரம் என்பதுதான் நமது கேள்வி.

பாழாகும் இந்திய சமூகம்

இத்தகைய நுழைவுத் தேர்வுகள் மூலமாக ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் வாழ்வும் மிக மோசமான பலமுனைத் தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கிறது.. வருங்கால சமூகத்தின் வாழ்க்கை பல்வேறு வகையான சிக்கல்களை எதிர்கொள்கிறது.. இதன் தொடக்கமாகவே நீட் தேர்வு கண்டு அஞ்சி செத்தாவது தொலைவோம் என்கிற பிஞ்சு பிள்ளைகளின் முடிவுகள்!

பாயுமா திராவிட மாடல் அரசு?

சிறிதேனும் மனசாட்சி என்பது ஒன்று இருந்தால் நீட் உள்ளிட்ட மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகள் தடை செய்தாக வேண்டும்; நமக்கும் ஈவிரக்கம் இருக்கிறது; சமூக அக்கறை இருக்கிறது; நம் பிள்ளைகள் மீதும் எதிர்காலத்தின் மீது கரிசனம் இருக்கிறது என்றால் உயிர் பலி கேட்கும் நீட் கொடூரங்களை எதிர்க்கும் குரல்களுடன் இணைந்து நிற்பதுதான் பெற்றோரின் கடமையாகும்! தமிழ்நாடு அரசுக்கும், எங்கள் மாநில பிள்ளைகளுக்கு 6,9-ம் வகுப்பிலேயே ஜேஇஇ, நீட் நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கடமை இருக்கிறது; அப்படி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் கல்வி கொள்ளை நிறுவனங்களுக்கும் கடிவாளம் போட வேண்டியது நீட் தேர்வை முழு மூச்சாக எதிர்க்கும் திராவிட மாடல் அரசின் முதல் கடமையாகவும் இருக்க வேண்டும்!

Take a Poll

வதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வால் தற்கொலை செய்த தமிழக மாணவி

அரியலூர் அனிதா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+