நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் மருமகனுக்கு போலீசார் சம்மன்! ஆஜராக 10 நாட்கள் டைம் கேட்ட பல்ராம் சிங்
நெல்லை: நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மருமகன் பல்ராம் சிங்குக்கு பாளையங்கோட்டை போலீசார் சம்மன் அனுப்பினர். இந்நிலையில், பல்ராம் சிங் இன்று ஆஜராகவில்லை, அவர் ஆஜராக 10 நாட்கள் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.
தனது கணவர் பல்ராம் சிங் தங்களுக்குச் சொந்தமான பிரபலமான நெல்லை இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்பதாக கனிஷ்கா நெல்லை போலீஸில் புகார் அளித்திருந்தார். தனக்கு பாஜக ஆதரவு உள்ளதாக பல்ராம் சிங் மிரட்டியதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடை உரிமையாளர் கவிதா மகள் கனிஷ்காவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணமாகி சுமார் 40 நாட்களே ஆன நிலையில், கணவர் பல்ராம் சிங்கும் அவரது குடும்பத்தினரும் இருட்டுக்கடை அல்வா கடையை வரதட்சணையாக கேட்பதாக நெல்லை காவல் நிலையத்தில் கனிஷ்கா ஏப்ரல் 16 ஆம் தேதி புகார் அளித்தார்.
"எங்கள் பிசினஸை எழுதிக் கொடுக்கவில்லை என்றால் உங்களை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவேன் என்று தாலி கட்டிய அரை மணி நேரத்தில் எங்கள் உறவினர்கள் முன் வைத்து கடுமையாக பேசினார்கள். காசுக்காக என் மகளை கல்யாணம் செய்திருக்கிறார்கள்" என்று கனிஷ்காவின் தாயார் புகார் கூறியிருந்தார்.
இவர்களது புகார் தொடர்பாக கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து கனிஷ்காவின் கணவரும், மாமனாரும் பேட்டி அளித்தனர். அப்போது, கனிஷ்கா மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.
திருமண சீதனமாக இருட்டுக்கடையை எழுதித்தரவேண்டும் என கணவன் மிரட்டல் விடுத்ததாக இருட்டுக்கடை உரிமையாளர் மகள் கனிஷ்கா புகார் அளித்திருந்த நிலையில், வரதட்சணை புகார் தொடர்பாக கோவையைச் சேர்ந்த கனிஷ்காவின் கணவர் பல்ராம் சிங் இன்று நெல்லை பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.
பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்தாரர் கனிஷ்கா ஆஜராகி விளக்கம் அளித்தார். இன்று 11 மணிக்கு பல்ராம் சிங் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று பல்ராம் சிங் ஆஜராகவில்லை. அவரது சார்பில் அவரது வழக்கறிஞர் ஆஜராகி, பல்ராம் சிங் ஆஜராக 10 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications