இது தினுசா இருக்கே..வேலூர் கோட்டையில் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுகவினர் எடுத்துக் கொண்ட உறுதி மொழி
சென்னை: அதிமுகவில் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலகக் குரல் எழுப்பி இருக்கும் நிலையில் வேலூரில் அதிமுகவின் இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் முதலாவது மண்டல மாநாட்டை நடத்தி தமக்கான இளைஞர்களின் செல்வாக்கை வெளிப்படுத்தி இருக்கிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. மேலும் அதிமுகவில் இதுவரை இல்லாத வகையில் புதியதாக, இந்த மண்டல மாநாட்டில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் இளைஞர், இளம்பெண்கள் பாசறையினர் ஒரு சேர எழுந்து நின்று உறுதி மொழியும் ஏற்றது பேசு பொருளாகி இருக்கிறது.
2026 சட்டசபை தேர்தலை ஒருங்கிணைந்த அதிமுகவாக எதிர்கொள்ள வேண்டும் என்பது பாஜக மட்டுமல்ல அதிமுகவின் பல்வேறு மூத்த தலைவர்களின் கருத்துமாக உள்ளது. இதனையே அண்மையில் கலகக் குரல் எழுப்பிய மூத்த அதிமுக தலைவர் செங்கோட்டையனும் வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் உட்பட உட்கட்சி விவகாரங்களை இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியாகவும் உருவெடுத்தது.
இந்த கலகக் குரல், நெருக்கடிகளுக்கு மத்தியில் வேலூரில் 10 மாவட்ட அதிமுக இளைஞர், இளம்பேண்கள் பாசறையின் முதலாவது மண்டல மாநாடு நேற்று நடைபெற்றது. அதிமுகவின் மாநில மாநாட்டைப் போல பிரம்மாண்டமாக இந்நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வடதமிழகத்தில் காஞ்சிபுரம் தொடங்கி திருப்பத்தூர் வரையிலான அனைத்து மாவட்ட அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறையினர் தனியாக வடிவமைக்கப்பட்ட டி சர்ட் அணிந்து இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
வேலூர் கோட்டையில் நடைபெற்ற இந்த மாநாட்டின் மேடையில் வடதமிழக அதிமுக சீனியர்கள் அனைவரும் ஒருசேர உட்கார வைக்கப்பட்டிருந்தது, எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவை வெளிப்படுத்துவதாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. இம்மாநாட்டில் அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் கொள்கை விளக்கப்பாடல் குறுந்தகடும் வெளியிடப்பட்டது.
மேலும் அதிமுகவில் இதுவரை இல்லாத வகையில் இந்த மாநாட்டில் புதியதாக உறுதி மொழி ஏற்கப்பட்டது. இம்மாநாட்டுக்கு தலைமை வகித்த அதிமுகவின் இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் மாநில செயலாளர் டாக்டர் விபிபி பரமசிவம் உறுதிமொழியை வாசிக்கும் முன்னர் அனைவரையும் எழுந்து நிற்க சொல்லி இதயத்தின் மீது வலது கரத்தை வைத்தபடி இந்த உறுதிமொழியை ஏற்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அதிமுகவின் இளைஞர், இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல... மேடையில் அமர்ந்திருந்த எடப்பாடி பழனிசாமி, மூத்த தலைவர் தம்பிதுரை உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று டாக்டர் விபிபி பரமசிவம் உறுதி மொழியை வாசிக்க அனைவரும் ஒருசேர உறுதி மொழி ஏற்றனர்.
வேலூர் அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை மண்டல மாநாட்டில் ஏற்கப்பட்ட உறுதி மொழி: தமிழ்நாட்டில் அணுதினமும் பெண் குழந்தைகளுக்கும், மாணவிகளுக்கும், பெண்களுக்கும் எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கும் பெண்களை பாதுகாப்பதற்கும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் தமிழ்நாட்டில் இன்றைக்கு போதை கலாசாரத்தை கட்டவிழ்த்துவிட்டு இளைஞர்களை, இளம்பெண்களை போதை கலாசாரத்துக்குள் தள்ளிகொண்டிருக்கிற ஸ்டாலின் தலைமையிலான காட்டாட்சி தர்பாருக்கு முடிவு கட்டி மக்கள் நலத்தைப் பேணுகற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அமைப்பதற்கு எல்லா தளங்களிலும் எல்லா வழிகளிலும் நம்முடைய முழுமையாக உழைப்பைக் கொடுப்போம். இவ்வாறு உறுதி மொழி ஏற்கப்பட்டது.












Click it and Unblock the Notifications