போலீஸ் அடித்ததால் இளைஞர் தீக்குளிப்பு.. பொதுமக்கள் சாலை மறியல்.. ஸ்தம்பித்தது ஓஎம்ஆர் சாலை!

சென்னை: இளைஞர் தீக்குளிப்புக்கு காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஓஎம்ஆர் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த சேர்ந்த 22 வயதான இளைஞர் மணிகண்டன். சென்னை தாம்பரத்தில் தங்கியுள்ள இவர் வாடகை கார் ஓட்டி வருகிறார்.
சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள எஸ்ஆர்பி டூல்ஸ் சிக்னல் அருகே அவரது வாடகை காரை போலீஸார் வழிமறித்துள்ளனர்.

தாக்கிய போலீசார்
இதைத்தொடர்ந்து சீட் பெல்ட் அணியவில்லை எனக்கூறி அந்த இளைஞரை போலீஸார் 4 பேர் சரமாரியாக தாக்கியுள்ளனர். பொதுமக்கள் முன்னிலையில் தாக்கப்பட்டதால் மனமுடைந்த அந்த இளைஞர் வண்டியில் இருந்த டீசலை எடுத்து போலீசார் முன்னிலையிலேயே தீக்குளித்தார்.

தீயை அணைத்த பொதுமக்கள்
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயை அணைத்து இளைஞரை மீட்டனர். உடல்கருகிய நிலையில் படுகாயமடைந்த அந்த இளைஞர் ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தப்பியோடிய போலீசார்
இளைஞர் தீக்குளிப்புக்கு காரணமான போலீசார் தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இளைஞர் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஓஎம்ஆர் சாலையில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்து முடக்கம்
இதனால் சாஃப்ட்வேர் நிறுவனங்கள் நிறைந்த ஓஎம்ஆர் சாலையில் பெரும் நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து முடங்கியுள்ளது. பொதுமக்களின் போராட்டத்தால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!