For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'புரட்சி புயல்' வைகோ அவர்களே.. உங்களுக்கு வந்தால் ரத்தம்; மற்றவர்களுக்கு எனில் தக்காளி சட்னியா?

By Mathi
Google Oneindia Tamil News

வணக்கம்.

நான் ஒரு பத்திரிகையாளனாக உங்களிடம் அறிமுகம் ஆகும் முன்னரே கொளுத்தும் வெயிலில் கோவை மாநாட்டில் திமுகவின் இடிமுழக்கமாக 'பந்தலுக்கு தீ வைக்கும் தருக்கர்களே! இது மேனிக்கு தீவைக்கும் கூட்டமடா' "அடல்பிகாரி வாஜ்பாய்களே! லால்கிஷன் அத்வானிகளே உங்கள் பூர்வோத்திரம் என்ன? நீங்கள் கைபர் போலன் கணவாய் வழிவந்தவர்கள்தானே! யூ கேம் த்ரூ கைபர் போலன் பாஸ்" என கர்ஜித்த காலம்தொட்டே உங்களை நிழலாக தொடர்கிறவன் என்கிற உரிமையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன்...

தமிழக அரசியலில் மிகவும் நாகரீகமான தலைவர்... பத்திரிகையாளர்களுடன் நேசமாக பழகக் கூடிய தலைவர் என்ற இமேஜ் எப்போதும் உங்களுக்கு உண்டு...

சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே நீங்கள் பொதுக்கூட்ட மேடையில் அமர்ந்திருக்கிறீர்கள்.. நான் நாளேடு ஒன்றின் செய்தியாளராக மேடைக்கு எதிரே கூட்டத்தோடு கூட்டமாக நிற்கிறேன்.. என்னை அடையாளம் கண்டு முன்வரிசையில் உட்கார்ந்து எழுதுவதற்கு ஏற்ப இருக்கை போட சைகையிலேயே உத்தரவு போட்டவர் என்பதை நான் இன்றளவும் மறக்கவில்லை...

Open letter to Vaiko

மிகவும் மதிப்பிற்குரிய தலைவராக இருந்து வரும் உங்களுக்கு என்னதான் ஆச்சு? ஏன் வைகோ இப்படி செய்கிறார்? என்ற கேள்வி எனக்கு அண்மைக்காலமாக இருந்து வருகிறது. அதன் வெளிப்பாடுதான் இந்த கடிதம்

"போர்வாள் அட்டைக்கத்தி" ஆனது என நண்பர் திருமாவேலன் ஆனந்த விகடனில் எழுதியது குறித்து டிவி ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போது வழக்கம் போலவே உணர்ச்சிப் பிழம்பாக வெடித்தீர்கள்... திருமாவேலன், சயனைட் அருந்துவதற்கு சமம் என எழுதியது "நீங்கள் கூட்டணி குறித்து எடுத்த முடிவு தற்கொலைக்கு சமம்" என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது என்பதை நீங்கள் அறியாதவர் ஒன்றும் அல்ல...

ஆனால் என்னை அந்த கட்டுரையில் சாகடித்துவிட்டார் என கொந்தளித்தீர்கள்... மதிமுகவின் இன்றைய தொண்டர்கள் அறிந்திருக்காத அன்றைய "போர்வாள்" இதழ் காலத்தில் உங்களுக்காக எழுதியவர் யார் என்பதை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்தானே...

கடந்த சில மாதங்களாக குறிப்பாக மக்கள் நலக் கூட்டியக்கத்தை மக்கள் நலக் கூட்டணியாக மாற்றும் முயற்சியில் தொடங்கி இதுவரை நீங்கள் நிறையவே தடுமாறிக் கொண்டே இருக்கிறீர்கள்... பல நேரங்களில் பதற்றத்தோடு நிதானத்தை இழந்துவிடுகிறீர்கள்

மக்கள் நலக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இணையுமா? என்ற கேள்விக்குறி எழுந்த காலத்திலேயே திருவாரூரிலே கூட்டணியை அறிவிக்கப் போகிறோம் என காஞ்சிபுரத்தில் பிரகடனம் செய்தீர்கள்.. ஆனால் திருவாரூரில் அப்படி எதுவும் நடக்கவில்லை.. பின்னர்தான் நடந்தது... அப்போது கூட செய்தியாளர்கள் உங்களிடம் மென்மையாகத்தான் கேள்வி எழுப்பினர்.

கலிங்கப்பட்டியில் மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின் போது திருமாவளவனை ஒருமையில் ஓபன் மைக்கில் திட்டியதை கேட்ட பிறகும் அவர் உங்களோடுதான் கரம் கோர்த்து வருகிறார்... ஏனெனில் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டாரே அண்ணன் என்கிற திருமாவளவனின் பெருந்தன்மைதான் காரணம்...

மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான பிறகு நீங்கள் மிக அதிகமாகவே உணர்வு வயப்பட்டவராகிவிட்டீர்கள்... திமுக ரூ500 கோடி பேரம் பேசியது என குற்றம்சாட்டுகிறீர்கள்... நீங்கள் அதிமுகவிடம் ரூ1500 கோடி வாங்கிவிட்டதாக வரும் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுங்கள் என பாலிமர் டிவி செய்தியாளர் கேள்வி கேட்டு முடிப்பதற்குள் 'வாக் அவுட்' செய்யும் அளவுக்கு டென்சனாகிப் போனீர்கள்...உங்களுக்கு மட்டும்தான் குற்றம்சாட்டுகிற உரிமை உள்ளதா? மற்றவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்க வேண்டாமா? அந்த பொறுப்புணர்வை எப்படி நீங்கள் மறந்தீர்களோ?

அதன் பின்னர் அண்மையில் ரயில் மறியல் போராட்டத்தின் போதும் நீங்கள் நடந்து கொண்ட விதம் கடும் எரிச்சலையே தந்தது... அந்த அளவுக்கு தன்நிலை மறந்தவராக உச்ச உணர்ச்சிவசப்பட்டவராக இருந்தீர்கள்... நீங்களே அந்த வீடியோ காட்சிகளை ஒருமுறை போட்டு பாருங்கள்..

இதன் உச்சமாக உங்களுக்கு சம்பந்தமே இல்லாமல் தேமுதிகவின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைத்தீர்கள்... தேமுதிகவை திமுக உடைக்க சதி; பணம் கொடுத்துவிட்டார்கள் என்றெல்லாம் பேசிய நீங்கள் ஒருகட்டத்தில் உங்கள் ஆருயிர் அண்ணன், நீங்கள் 30 ஆண்டுகாலம் நெஞ்சிலே பூஜித்த "அண்ணன் கலைஞர்" பற்றி துடுக்குத்தனமாக சொல்லப் போய் இப்போது தாய் மீது சத்தியமாக என மன்னிப்பு கேட்கும்நிலைக்கு தள்ளப்பட்டீர்கள்... எதற்கு இந்த அவமானம்?

மதிமுகவை கைப்பற்ற...தாயகத்தை கைப்பற்ற திமுக சதி செய்தது என்றெல்லாம் நீங்கள் சொல்லுகிற போது திமுகவை கைப்பற்ற வை. கோபால்சாமி முயற்சி; அறிவாலயத்தை கைப்பற்ற வை.கோபால்சாமி திட்டம்; உதயசூரியன் சின்னத்தை முடக்க வை. கோபால்சாமி (அன்று நீங்கள் வைகோ அல்லதானே) திட்டம் என்று அன்றைய நாளேடுகளில் வந்த செய்திகள்தான் நினைவுக்கு வருகின்றன...

இந்த இடத்தில் உங்களுக்கு வந்தால் ரத்தம்; மற்றவர்களுக்கு எனில் தக்காளி சட்னியா? என்ற கேள்வி சிந்திக்காமலேயே வந்துவிடுகிறது...

மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக மட்டும் இருங்கள்... தேமுதிக என்ற கட்சிக்கும் ஒருங்கிணைப்பாளராகி மதிமுக பொதுச்செயலர் என்ற நிலையை விட்டுக் கொடுத்துவிடாதீர்கள்...

20 ஆண்டுகாலமாக தேய்பிறைகளை மட்டுமே பார்த்து வளர்பிறைக்கு பக்கத்தில் கூட போக முடியாத நிலைமைக்கு மதிமுக இருக்கும் நிலையிலும் உங்களை நம்பி லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள்... அவர்களுக்கு நீங்கள் நம்பிக்கை நட்சத்திரமாக மட்டுமே இருங்கள்.. நீங்கள் ஜொலித்தாலும் ஜொலிக்காவிட்டாலும் உங்களை கொண்டாடுகிறவர்கள் அந்த அப்பாவி தொண்டர்கள்...

அவர்கள் தலைகுனியும் அளவுக்கு இனியும் நீங்கள் கீழ்த்தரமாக பேசாதீர்கள்... அது உங்கள் சுய முகமே அல்ல. நேர்மை, நிதானம், தனி வாழ்வில் ஒழுக்கம் என உங்கள் எதிரிகள் கூட மரியாதையுடன் பார்க்கும் ஒரு தலைவர் தான் நீங்கள்... அதை மறந்துவிடாதீர்கள்

அன்புடன்...

English summary
This is a Open letter to MDMK leader Vaiko.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X