ஒரே நாளில் எத்தனை அடி.. மக்கள் பாவம் இல்லையா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டு மக்கள் அனைவருக்கும் இன்று நேரம் சரியில்லை. ஜிஎஸ்டி காரணமாக மக்களின் சட்டைப் பாக்கெட்டுகள் கிழிந்து தொங்கிக்கொண்டுள்ள நிலையில், இன்று, வெளியான மேலும் பல அறிவிப்புகள் அவர்கள் சட்டையையும் கிழித்து தொங்கவிடும் வகையில் இருப்பது பெரும் சோகம்.

அதிலும் இன்று தமிழக மக்களுக்குதான் கூடுதல் அடி. தமிழக மாநில பாடத்திட்ட மருத்துவ மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு அறிவிப்பு செல்லாது என்று, ஹைகோர்ட் உத்தரவிட்டது.

மாநில அரசு, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதில் தோற்றதன் எதிரொலிதான் இந்த உத்தரவு. இது மாணவர்களுக்கு விழுந்த பெரிய அடி.

மருத்துவர் கனவு

மருத்துவர் கனவு

தமிழக பாடத் திட்டத்தில் கல்வி பயின்ற, மாணவர்களின் மருத்துவர் கனவு சம்மட்டியால் அடித்து கலைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு பெறுவதுதான் ஒரே தீர்வாக இருந்திருக்க முடியும். அதில் கோட்டைவிட்ட பிறகு, இந்த விவகாரத்தில் சட்டத்தின் லாபத்தை பெற முடியாது என்பது சட்ட வல்லுநர்களுக்கு ஏற்கனவே தெரிந்ததுதான்.

ஆதார் இல்லாதோர் நிலை?

ஆதார் இல்லாதோர் நிலை?

மற்றொரு அறிவிப்பு, பான்கார்டு ரத்து தொடர்பானது. ஆதார் எண்ணை, பான்கார்டுடன் இணைக்காவிட்டால் பான்கார்டு ரத்து செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இன்றே இதற்கு கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக ஒரு மாதம் மட்டுமே அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இன்னும் பலருக்கு ஆதார் எண் கிடைக்காத நிலையில், பான்கார்டை இழக்கும் அபாயத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனனர்.

சமையலில் அடி

சமையலில் அடி

அடுத்த பெரும் அடி சிலிண்டர் மானியம் ரத்து தொடர்பானது. அடுத்த ஆண்டுக்குள் சிலிண்டர் மானியத்தை ரத்து செய்யப்போகிறது மத்திய அரசு. ஏற்கனவே பல லட்சம் மக்கள், மானியத்தை விட்டுக்கொடுத்துவிட்டபோதிலும், மத்திய அரசின் ஆசை தீரவில்லை. சிலிண்டருக்கான மானியத்தை வங்கியில் செலுத்திவிடுகிறோம் என கூறி கையிலிருந்து முழு பணத்தையும் எடுத்து கொடுக்க பழக்கியது மத்திய அரசு. மக்கள் பழக்கப்பட்டுவிட்டதால் இப்போது வங்கியில் மானிய தொகையை போடுவதை ரத்து செய்ய முடிவு செய்துவிட்டது. வங்கியில் பணம் செலுத்துகிறோம் என மத்திய அரசு தலையை சுற்றி மூக்கை தொடும் வகையில் அறிவிப்பை வெளியிட்டபோதே, இப்படித்தான் கடைசியில் மானியத்தில் கை வைப்பார்கள் என எதிர்க்கட்சிகள் கூறியிருந்தன. அது உண்மையாகிவிட்டது.

வயிற்றில் அடி

வயிற்றில் அடி

எல்லாவற்றுக்கும் மேலாக பெரிய அடி, தமிழகத்தில் பல லட்சம் பேருக்கு ரேஷன் கார்டு கட்டாகும் என்று கிளம்பிய பீதிதான். இப்படி பீதி கிளம்ப காரணம், மாநில அரசுதான். அரசு வெளியிட்ட அரசிதழில், மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்திலுள்ள விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன. அதன்படி, பிரிட்ஜ் வைத்திருந்தால், கார் வைத்திருந்தால் ரேஷன்கார்டு ரத்தாகுமாம். அவ்வளவு ஏன்? குடும்பத்தில் யாராவது ஒருவர் வருமான வரியை செலுத்துபவராக இருந்தாலும் ரேஷன் கார்டு ரத்துதானாம். இந்த அறிவிப்பு மக்களை கொந்தளிக்க வைத்துவிட்டது. அவசரமாக நிருபர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், அது மத்திய அரசின் விதிமுறைதான் என்றும், தமிழகம் இதில் விலக்கு பெற்றுவிட்டதாகவும் கூறி சமாளித்துள்ளார். ஆனால் அரசிதழில் வெளியாகிவிட்டதையே காரணமாக வைத்து எடப்பாடி அரசு விரைவில் ரேஷன் கார்டுகளை ரத்து செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் எடப்பாடியின் லகான் எங்கேயுள்ளது என்பது மக்களுக்கு தெரியாதா என்ன?

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian people face many struggle in terms of Union and State government series of anti people announcement on today.
Please Wait while comments are loading...