For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக விவசாயிகளின் இலவச மின்சாரத்திற்கு மறைமுகமான ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.. ராமதாஸ் எச்சரிக்கை

தமிழக விவசாயிகள் பெறும் இலவச மின்சாரத்திற்கு மறைமுகமான ஆபத்து ஏற்பட்டிருப்பதாக ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: வேளாண் மின் இணைப்புகளுக்கு இப்போதுள்ள மோட்டார்களுக்கு மாற்றாக, திறன்மிகு மோட்டார்களை பொருத்தும் திட்டத்தை தமிழக அரசும், மின்வாரியமும் கைவிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழக விவசாயிகள் பெறும் இலவச மின்சாரத்திற்கு மறைமுகமான ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்...

தமிழ்நாட்டில் இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளில் 10 விழுக்காட்டினருக்கு திறன்மிகு மின்சார மோட்டார்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது இனிக்க இனிக்க பேசி உழவர்கள் அனுபவித்து வரும் இலவச மின்சாரம் சம்பந்தப்பட்ட உரிமைகளை பறிக்கும் திட்டமாகும்.

உதய் திட்டத்தை ஜெ.ஒப்புக்கொள்ளவில்லை

உதய் திட்டத்தை ஜெ.ஒப்புக்கொள்ளவில்லை

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன்களை மாநில அரசே ஏற்றுக் கொள்வதற்கான உதய் திட்டம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனுபவித்து வரும் சலுகைகள் மற்றும் உரிமைகளை மறைமுகமாக பறிக்கும் திட்டம் என்றும், இத்திட்டத்தில் தமிழகம் ஒருபோதும் இணையக்கூடாது என்றும் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டபோதே வலியுறுத்தியிருந்தேன். இத்திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்த ஜெயலலிதா, தாம் முதலமைச்சராக இருந்தவரை உதய் திட்டத்தை செயல்படுத்த ஒப்புகொள்ளவில்லை.

இலவச மின்சாரத்திற்கு மறைமுகமான ஆபத்து

இலவச மின்சாரத்திற்கு மறைமுகமான ஆபத்து

ஆனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில வாரங்களிலேயே தில்லி சென்ற தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, உதய் திட்டத்தில் தமிழகத்தைச் சேர்ப்பதற்கான அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டு விட்டு வந்ததன் விளைவாகத் தான் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் அனுபவித்து வரும் இலவச மின்சாரத்திற்கு மறைமுகமான ஆபத்து ஏற்பட்டிருகிறது. இது கண்டிக்கத்தக்கதாகும். உதய் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று மின்சாரத்தை மிச்சப்படுத்தும் நோக்குடன் திறன் மிகு மின்கருவிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதாகும்.

உழவர்களை பாதிக்கக்கூடியது

உழவர்களை பாதிக்கக்கூடியது

அதன்படி தமிழகத்தில் உள்ள 20.62 லட்சம் வேளாண் மின் இணைப்புகளில் 10% இணைப்புகளை, அதாவது 2.06 லட்சம் இணைப்புகளில் உள்ள மின்சார பம்ப் செட்டுகளை அகற்றிவிட்டு அவற்றுக்குப் பதிலாக திறன்மிகு மின்மோட்டார்களை பொருத்தப்போவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மின்வாரியம் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2019-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் இத்திட்டத்தை செயல்படுத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இது நல்ல திட்டம் போன்று தோன்றினாலும், உழவர்களின் நலன்களை கடுமையாக பாதிக்கக்கூடியதாகும்.

குறைந்த நிலத்தடி நீர்

குறைந்த நிலத்தடி நீர்

வேளாண்மைக்கு இலவச மின்சாரம் பெறுவதற்கான விதிமுறைகளின்படி, 5 குதிரைத்திறனுக்கும் குறைவான சக்தி கொண்ட மின்மோட்டார்களை மட்டும் தான் பயன்படுத்த முடியும். ஆனால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 800 அடிக்கும் கீழ் சென்று விட்டது. பல மாவட்டங்களில் ஆயிரம் அடிக்கும் கீழ் தான் நிலத்தடி நீர் கிடைக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் கூட 500 அடி ஆழத்திலிருந்து தான் நிலத்தடி நீரை எடுக்க முடியும்.

தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை

தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை

இவ்வளவு ஆழத்திலிருந்து தண்ணீரை இறைக்க வேண்டுமானால் குறைந்தது 7.5 குதிரைசக்தி முதல் 10 குதிரைசக்தி வரை திறன் கொண்ட மின்சார மோட்டார் தேவை. இலவச மின்சாரத்திற்கான விதிகளின்படி 5 குதிரைத்திறன் கொண்ட மோட்டார்களை மட்டும் தான் பயன்படுத்த முடியும் என்ற போதிலும், விவசாயிகள் அதிக சக்தி கொண்ட மோட்டார்களை பயன்படுத்தத் தொடங்கினர். இது தவிர்க்கமுடியாது என்பதால் தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை.

திறன்மிகு மோட்டார்களக மாற்றப்படும்

திறன்மிகு மோட்டார்களக மாற்றப்படும்

ஆனால், உதய் திட்டத்தின்படி பொருத்தப்படவுள்ள திறன்மிகு மின்மோட்டார்கள் 5 குதிரைசக்தி மட்டுமே சக்தி கொண்டவை ஆகும். இவை பொருத்தப்பட்டால், அவற்றை மாற்ற முடியாது; அதுமட்டுமின்றி திறன்மிகு மோட்டார்களைக் கொண்டு 800 அடிக்கும் கீழ் உள்ள நிலத்தடி நீரை இறைக்க முடியாது. இனி ஒவ்வொரு ஆண்டும் 10% மோட்டார்கள் திறன்மிக்கவையாக மாற்றப்படும் என்பதால் அடுத்த 10 ஆண்டுகளில் அனைத்து மோட்டார்களும் திறன்மிகு மோட்டார்களாக மாற்றப்படும்.
அப்போது நிலத்தடி நீர் மட்டம் மேலும் குறைந்திருக்கும் என்பதால், 5 குதிரைசக்தி திறன் கொண்ட திறன்மிகு மோட்டார்களைக் கொண்டு ஒரு சொட்டு நிலத்தடி நீரைக்கூட எடுக்க முடியாது.

தமிழக அரசுக்கு தோல்விதான் கிடைக்கும்

தமிழக அரசுக்கு தோல்விதான் கிடைக்கும்

இதனால் மின்திட்டத்தால் எந்த பயனும் இல்லாமல் போய்விடும். இது இலவச மின்சாரத்தை பறிப்பதற்கு சமமான செயல் ஆகும். முந்தைய திமுக ஆட்சியின் போது 2010-ஆம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து மின்சார மோட்டார்களையும் அகற்றி விட்டு, திறன்மிகு மோட்டார்களை பொருத்தும் திட்டத்தை அறிமுகம் செய்தது. ஆனால், அப்போது உழவர்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்ததால், இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 15 லட்சம் இனைப்புகளுக்கு பதிலாக வெறும் 200 மோட்டார்களை மட்டுமே பொருத்த முடிந்தது. இப்போதும் அதேபோன்ற எதிர்ப்பையும், தோல்வியையும் தான் தமிழக அரசு எதிர்கொள்ள நேரிடும்.

மிகக்கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்

மிகக்கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்

உதய் திட்டத்தின் தீய விளைவுகள் இத்துடன் நின்று விடப் போவதில்லை. இலவச மின் இணைப்புகள் மற்றும் குடிசைகளுக்கான இலவச மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்துதல், 3 மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணத்தை உயர்த்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொள்ள உள்ளது. இது தமிழக மக்களுக்கு மிகக்கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

உதய் திட்டத்திலிருந்து விலக வேண்டும்

உதய் திட்டத்திலிருந்து விலக வேண்டும்

எனவே, வேளாண் மின் இணைப்புகளுக்கு இப்போதுள்ள மோட்டார்களுக்கு மாற்றாக, திறன்மிகு மோட்டார்களை பொருத்தும் திட்டத்தை தமிழக அரசும், மின்வாரியமும் கைவிட வேண்டும். அத்துடன் தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் உதய் திட்டத்திலிருந்து தமிழக அரசு உடனடியாக விலக வேண்டும். இவ்வாறு தனது அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
PMK founder Ramadoss warns that Tamil nadu farmers will lose the free electricity. He urges Tamil Nadu government and electricity board to drop the project of the high power motor in contrast of existing agriculture motor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X