சபாஷ் கமிஷனர்... செயின் திருடனை விரட்டி பிடித்த சூர்யாவுக்கு வேலை வாங்கி கொடுத்தார்!

சென்னை: செயினை பறித்து கொண்டு ஓடிய திருடனை விரட்டி பிடித்த சிறுவன் சூர்யாவை மறக்காத மாநகர கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் டிவிஎஸ் நிறுவனத்தில் வேலையை வாங்கி கொடுத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 17-ம் தேதி இரவு, அண்ணாநகர் பகுதியில் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் அமுதாவிடம் வந்த ஒரு நோயாளி அவரது கழுத்தில் கிடந்த 10 சவரன் நகையை பறித்து கொண்டு ஒடினான். இதனால் அமுதா அதிர்ச்சியில் சத்தம் போடவும், அவ்வழியாக வந்த சிறுவன் சூர்யா தனியொருவனாக விரட்டி சென்று அந்த நபரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தான்.

இதனால் சூர்யாவின் தைரியத்தை கண்ட கமிஷனர் ஏ.கே.விசுவநாதன், சூர்யாவை நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது, தனக்கு தனியார் நிறுவனத்தில் ஒரு வேலை வேண்டும் என்று சூர்யா ஆணையரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தான். அப்போது சூரியாவுக்கு 17 வயது என்பதால், எங்குமே வேலை வாங்கி தரமுடியாது என கமிஷனர் நினைத்தார்.
ஆனாலும் சூர்யா கேட்ட உதவியை மறக்காத மாநகர கமிஷனர், தற்போது சூர்யா 18 வயதை கடந்தவுடன், டிவிஎஸ் நிறுவனத்தில் சிபாரிசு செய்து ஏசி மெக்கானிக் வேலைக்கு ஏற்பாடு செய்து தந்துள்ளார். அந்த பணி நியமன ஆணையும் இன்று சூர்யாவுக்கு வழங்கப்பட்டது. காவல் ஆணையரின் அலுவலகத்தில், அவரது முன்னிலையிலேயே டிவிஎஸ் நிறுவன நிர்வாகிகள் சூர்யாவுக்கு இந்த பணி நியமன ஆணையை வழங்கினர்.
அப்பாயின்மென்ட் ஆர்டர் வாங்க வரும்போதே சூர்யா, டிவிஎஸ் நிறுவன சீருடையுடன் வந்திருந்தார். தான் கேட்ட உதவியை இவ்வளவு காலம் மறக்காமல் நினைவில் வைத்து வேலை வாங்கி கொடுத்த மாநகர கமிஷனரை நினைத்து மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்துள்ளார் "இளைஞர்" சூர்யா.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!