தினகரனை 'நல்லா' விசாரித்தால் பல பயங்கர முறைகேடுகள் அம்பலமாகும்: போட்டு தாக்கும் பொன்.ராதா
தினகரன் கைதை தொடர்ந்து மேலும் பல பெரிய தவறுகள் வெளிவரும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாகர்கோவில்: டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரைத் தொடர்ந்து மேலும் பெரிய தவறுகள் வெளிவரும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழ்நாட்டு அரசியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே தீர்மானித்து கருத்துகளை வெளியிடுவதாக தமிழக பாஜகவினர் மீது எதிர்க் கட்சிகள் கூறும் குற்றச்சாட்டு. ஆனால் அதை பாஜகவினர் மறுத்து வந்தாலும் அவர்களின் கருத்து சில நேரங்களில் நிதர்சனமாகி விடுகிறது.

இந்த நிலையில், டிடிவி தினகரன் டெல்லியில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் பெரிய தவறுகள் வெளிவரும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொன்.ராதாகிருஷ்ணன் மேலும் கூறுகையில், டி.டி.வி. தினகரன் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லியில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அது தான் உச்சம் என்று சொல்ல முடியாது. மேலும் இது பற்றி விசாரித்தால் பெரிய தவறுகள் வெளிவரும். குற்றம் செய்தவர்கள் தவறுக்குரிய தண்டனையை கண்டிப்பாக அனுபவிக்க வேண்டும்.
அதிகாரிகளை நாங்கள் தூண்டி விடுவதாக பிரசாரம் செய்கிறார்கள். பாஜகவுக்கு அப்படி எந்த அவசியமும் இல்லை. அதே சமயம் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கத்தான் வேண்டும். எந்த கட்சியையும் பிளவு படுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications