For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மொபைல், டிவியை தூக்கிப் போடுங்க.. வெளில வாங்க.. பொங்கலை சந்தோஷமா கொண்டாடுங்க!

Google Oneindia Tamil News

சென்னை: உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப உழவுக்கும் உழவர்களுக்கும் பெருமை சேர்க்கும் திருநாளாகப் பொங்கல் திருநாளைக் கொண்டாடுகிறோம். உலகத் தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் பண்டிகை பொங்கல் பண்டிகை.

அன்றையக் காலத்தில் கிராமத்தில் சூரிய பகவானுக்குப் பானையில் பொங்கல் வைத்துக் கொண்டாடுவோம். ஆனால் இன்றோ நாகரிகம் என்ற பெயரில் வீட்டிலேயே சூரிய பகவானை வரைந்து பொங்கல் வைத்துக் கொண்டாடுகிறோம். உறவுகளோடும் உணர்வுகளோடும் கலந்த பொங்கல் பண்டிகையை இன்றையக் காலக்கட்டத்தில் தனிக் குடும்பங்களாகக் கொண்டாடுகிறோம்.

ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். ஆடி மாதம் தேடித் தேடி விதைத்த பயிர்களை அறுவடை செய்யும் மாதம் தை மாதம். பொங்கல் பண்டிகையன்று அதிகாலையில் எழுந்து வீட்டு முற்றத்தைச் சுத்தம் செய்து வண்ணக் கோலமிட வேண்டும். பின் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் கோலமிட்ட இடத்தில் சிறு பலகை வைத்து அதன் மீது திருவிளக்கை வைத்து பூச்சூட்டுங்கள்.

நிறைவிளக்கு

நிறைவிளக்கு

திருவிளக்கு நிறைவிளக்காக இருக்க வேண்டும். பின் வாழை இலையில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து பக்கத்தில் மஞ்சளையும் அட்சதையும் பிடித்து வைத்து அதை அம்பிகையாக நினைத்து புதுப்பானையை அலங்கரித்து அதன் கழுத்துப் பகுதியில் மஞ்சள் கொத்தும் மாவிலையும் கட்டிச் சிறிது பாலை விட்டு சூடம் ஏற்றி அடுப்பைப் பற்ற வைத்து அதில் அரிசி களைந்த நீரை விடுங்கள்.

சூரிய பகவானுக்கு

சூரிய பகவானுக்கு

வாழை இலையில் வெற்றிலை,பாக்கு, வாழைப்பழம், கிழங்கு வகைகள், காய்கறி வைக்க வேண்டும். அந்த பானையிலிருந்து நீர் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என்றுக் கூறி அதில் அறுவடை செய்த புத்தரிசியும் வெல்லமும் சேர்த்து பொங்கலைத் தயார் செய்து அதை சூரிய பகவானுக்கு நைவேத்யம் செய்து தீபாராதனை செய்து வழிபடுவர்.

டிவிக்கு ஓடாதீங்க

டிவிக்கு ஓடாதீங்க

உழைக்கும் மக்கள் தன் உழைப்பிற்கும் தன் உழவிற்கும் மெருகூட்டும் வகையில் உதவி செய்த இயற்கைக்கும் தன்னோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாகக் கொண்டாடும் திருநாளே பொங்கல் திருநாளாகும். ஆனால் இன்று நகரங்களில் காலையில் வாசலில் கோலமிட்டு குக்கரில் மாவிலையைக் கட்டி அதில் அரிசியும் நீரும் விட்டுப் பொங்கல் செய்து இறைவனிடம் படைத்து வணங்கி விட்டு டிவி பார்க்கத் தொடங்கி விடுகின்றனர்.

உறவுகளுடன்

உறவுகளுடன்

வெளியூரிலிருந்து பொங்கல் பண்டிகைக்காக பேருந்துக் கிடைக்காமல் கூட்டநெரிசலில் சிக்கி பேருந்தில் இடம்பிடித்து சொந்த ஊர் செல்லும் பல பேர் இன்றும் இருக்கிறார்கள். ஆனால் சொந்த ஊர் சென்று பண்டிகையன்று காலையில் குளித்து வி்ட்டு வீட்டிலிருக்கும் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அண்ணன், தம்பி, தங்கை, மாமா, மாமி, அத்தை, சித்தி போன்ற உறவுகளோடு நேரம் செலவிடாமல் எல்லோரும் சேர்ந்துத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க ஆஜராகி விடுகிறோம்.

குக்கருக்கு மாறியாச்சு

குக்கருக்கு மாறியாச்சு

வெளியூரிலிருந்து வந்த உறவுகளோடு நேரமா செலவிடாமல் செல்போனிலும் தொலைக்காட்சியிலும் நேரத்தைச் செலவிடுகிறோம். இது தான் இன்றுக் கொண்டாடும் பொங்கல். தைப்பொங்கலும் பொங்கலும் பாலும் பொங்குது பார்த்துச் சொல்லடியோய் என்ற காலம் மாறி தைப் பொங்கலும் பொங்கலும் குக்கரில் இருக்குப் பார்த்துச் சொல்லடி என்ற காலத்தில் தான் இருக்கிறோம்.

எங்கே போச்சு பாரம்பரியம்

எங்கே போச்சு பாரம்பரியம்

பாரம்பரியமான முறைகளால் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை நாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துக் கொண்டிருக்கிறோம். இப்படியே போனால் எதிர்காலத்தில் நம் சந்ததியினருக்குப் பொங்கல் என்றால் வீட்டில் வைக்கும் சாதாரண சக்கரைப் பொங்கலாகி விடும். கூட்டுக் குடும்பமாக பண்டிகை நாளில் எல்லோரும் சேர்ந்துப் பாரம்பரியப் முறையில் பொங்கலிட்டு நம் தமிழரின் பழக்கத்தை நம் எதிர்காலத் தலைமுறையினருக்குச் சொல்லிக் கொடுப்போம்.

உழவின் பெருமையை இந்தப் பண்டிகையின் மூலம் உலகறியச் செய்வோம். கும்மியடி கும்மியடி பெண்ணே கும்மியடி என்றுப் பாடிக் கொண்டு பொங்கல் வைத்து சூரிய பகவானை வணங்கி எல்லா வளமும் இந்த நன்னாளில் பெற்று வாழ வாழ்த்துக்கள்.

- ஜி. உமா மகேஸ்வரி

English summary
In Cities the people celebrate Pongal festival with modern developments and retire with TV and Mobile on this day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X