தமிழ்நாட்டில் மீண்டும் 10 மணி நேர மின்வெட்டு: திருப்பூர், கோவையில் சிறு தொழில்கள் பாதிப்பு
சென்னை: சென்னை தவிர தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. 8 முதல் 10 மணிநேர மின்வெட்டு நீடிப்பதால் திருப்பூர், கோவை, கரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மின் வெட்டு நிலவியது. கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவ மழை காரணமாக காற்றாலைகளில் அதிக அளவு மின் உற்பத்தி கிடைத்தது. இதனால் மின்வெட்டு பிரச்னைக்கு சற்று தீர்வு கிடைத்தது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மின்வெட்டு மீண்டும் தலைதூக்கியுள்ளது. தினமும் ஒரு மணி நேரம் என்று இருந்த மின்வெட்டு தற்போது படிப்படியாக உயர்ந்துள்ளது. திருப்பூர், கோவை, கரூர், மதுரை உள்ளிட்ட நகர பகுதியில் தினமும் 6 மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. மேலும் கிராம புறங்களில் தினமும் 8 மணி முதல் 10 மணி நேர மின்வெட்டு அமல்டுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

சிறுதொழில்கள் பாதிப்பு
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மின்சாரத்தை நம்பி தான் தொழில் செய்கின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள 6 மணி நேர மின்வெட்டால் அப்பகுதியை சேர்ந்த பல்வேறு தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பின்னாலாடை உற்பத்தியாளர்களும், சிறுதொழில் நிறுவனங்களும் மின்வெட்டினால் பாதிக்கப்பட்டுள்ளன.

நெசவுத் தொழில் பாதிப்பு
காஞ்சிபுரத்தில் முன்பு இருந்த ஒரு மணி நேர மின்வெட்டு தற்போது 5 மணி நேரமாக அதிகரித்துள்ளது, இதனால் மின்சாரத்தை நம்பியுள்ள நெசவாளர்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரப்பகுதிகளில் 8 மணிநேர மின் தட்டுப்பாட்டினால் நெசவுத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

நோயாளிகள் பாதிப்பு
தொடர் மின்வெட்டால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மின்வெட்டு காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் பல அறுவை சிகிச்சைகள் நிறுத்தி வைக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இரவு நேரம் ஏற்படும் மின்வெட்டால் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் மின்வெட்டால் மாணவர்கள் படிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

கொலை, கொள்ளை அதிகம்
தூத்துக்குடி, மற்றும் திருநெல்வேலி, மாவட்டங்களிலும் 6 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. கன்னியாகுமரியில் 7 மணி நேரம் மின்வெட்டு உள்ளது. இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதால் தமிழகம் முழுவதும் சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளது. மின்சாரம் இல்லாத சமயத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மின் உற்பத்தி பாதிப்பு
‘தமிழகத்தில் தற்போது காற்றாலைகளில் மின் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. பராமரிப்பு காரணமாக சில அனல் மின் நிலையங்களிலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்வெட்டு சற்று அதி கரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி கிடைத்தால் மின் பற்றாக்குறைக்கு சற்று தீர்வு காணப்படும்' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications