For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உங்களுக்கு எதுக்கு செல்லம் "டென்ஷன்".. பேசாம ஒதுங்கிக்கங்க.. பிரகாஷ் ராஜுக்கு ஒரு மகளின் திறந்த மடல்

Google Oneindia Tamil News

சென்னை: அன்புள்ள பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு.... தமிழகத்தில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான மகள்களின் சார்பாக நான் எழுதுகின்ற கடிதம் இது. அபியும், நானும் என்கின்ற பெண் குழந்தைக்கும், அப்பாவிற்கும் இடையிலான அழகான உறவினை எடுத்துரைக்கும் அற்புதமான படத்தில் நடித்தவர் நீங்கள். உங்களின் அந்த இயல்பான தந்தையின் துடிப்பினை கண்டு நான் பலமுறை கண்ணீர் சிந்தியிருக்கின்றேன்.

கண்டிப்பான தந்தையாக இருந்தாலும், கடைசியாக மகனுக்காக எல்லாவற்றையும் உதறித் தள்ளும் "சந்தோஷ் சுப்ரமணியம்" தந்தை கதாப்பாத்திரத்தில் வாழ்ந்து காட்டியவர் நீங்கள்.

Prakash raj hurts girl's heart by his new ad...

ஆனால், இன்று நீங்கள் நடித்து வெளியாகி இருக்கின்ற ஒரு விளம்பரம் என்னைப் போன்ற எத்தனையோ இளம் பெண்களின் மனதினை நோகடித்துள்ளது என்பது பாவம் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான். "இது என் முதலாவது டென்ஷன், இது என் இரண்டாவது டென்ஷன்" என்று மகள்களை அறிமுகப்படுத்தும் பெற்றோருக்கு "வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தாலே டென்ஷன் தானே?" என்று நீங்கள் சொல்வது எங்கள் மனதினை அறுத்துக் கூறு போடுகின்றது.

ஒரு காலத்தில் பெண்களுக்கு படிப்பறிவு அதிகம் கிடையாது. அவர்களைப் பொறுத்த வரையில் வீடும், தாய், தந்தையும்தான் உலகம். அப்படிப்பட்ட பெண்களை தங்களுக்கு பிறகு பத்திரமாக பேணிப் பாதுகாக்கவே திருமணம் என்ற பந்தத்தினை பெற்றோரும், முன்னோரும் உருவாக்கி வைத்திருந்தார்கள். அதனால்தான் அதற்கு பெயரே "கன்னிகாதானம்". நான் வளர்த்த என் அன்பு மகளை என்னுடைய இடத்தில் இருந்து நீ பார்த்துக் கொள்ள வேண்டும் என்றுதான் திருமணமே செய்து கொடுத்தனர் தந்தையர்.

ஆனால், இன்றைய நிலை அப்படிக் கிடையாது. படிப்பும், குடும்பப் பொறுப்பும், அலுவலகப் பொறுப்பும் என்று பெண்களான நாங்கள் ஆண்களுக்கு நிகராக, ஏன் அவர்களை விட அதிகமாகவே சுழன்று சாதிக்கின்றோம். உண்மையில் அப்பா, அண்ணன், தங்கை, அம்மா என்று குடும்பப் பொறுப்புகளை தலையில் சுமந்து இந்தக் காலத்தில் டென்ஷனின் பிடியில் மாட்டித் தவிப்பது நாங்கள்தான். எங்களையே டென்ஷன் என்று கூறும் விளம்பரத்திற்கு நீங்கள் எப்படித் துணை போகலாம்?

தந்தையில்லாத குடும்பத்திற்காகவும், ஆண் பிள்ளை இல்லாத பெற்றோருக்காகவும் எங்கள் ஆசைகளைக் கூட துறந்து சென்னை போன்ற பெருநகரங்களில் தனிமையின் பிடியில், நாங்களே சமைத்து சாப்பிட்டு, ஒரு உடல்நலக் குறைவு என்றால் ரசம் வைத்து கொடுக்கக் கூட ஆளில்லாமல் எத்தனைப் பெண்கள் மாசச் சம்பளத்திற்காக அல்லாடுகின்றோம் தெரியுமா?

திருமணம் முடிந்த பத்து மாதத்தில் குழந்தை... அப்படி குழந்தை பிறக்காவிட்டாலும் பெண் தான் காரணம்... ஒரு சிறிய தவறு என்றாலும் அது பெண்கள் மீது இல்லாவிட்டாலும், எளிதாக பெண்களை தூக்கி வீச ஆண்கள் தவறுவதே இல்லை. என்றைக்கும் ஆண்களின் சூழ்நிலைகளை நாங்கள் புரிந்து கொண்டு செல்ல வேண்டும். ஆனால், ஆண்களுக்கோ அதெல்லாம் தேவையில்லை. அவர்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதே வேதவாக்கு.. எனினும், நல்ல ஆண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆனால்,அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு.

பந்தம், பாசம், திருமணம் போன்ற இந்த உடைக்கமுடியாத வலைகளில் இன்னும் எத்தனை நாட்கள் எங்களைக் கட்டிப் போட உத்தேசம்? திருமணம் என்பது ஆண்களைப் போலவே எங்களுக்கும் தனிப்பட்ட விருப்பம். இலக்கை நோக்கி பயணிப்பதே முக்கியமே தவிர அந்தப் பயணம் துணையுடனா, தனியாகவா என்பதை நாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதில் முடிவெடுக்க பெற்றோருக்கு கூட அதிகாரம் கிடையாது.

ஒட்டுமொத்தமாக பெண்களைக் கேவலப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த விளம்பரத்தில் இருந்து, ஒரு நல்ல அப்பாவாக, பெண்களைப் புரிந்து கொண்ட ஒரு நல்ல ஆண்மகனாக நீங்கள் விலகி விடுவீர்கள் என்பதை உங்கள் மகள் போன்ற அனைத்து இளம்பெண்களும் நம்புகின்றோம்... எங்கள் உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுங்கள் பிளீஸ்!

English summary
Actor Prakash raj recently done an ad which was hurted lot of girl's heart.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X