பள்ளி மாணவி மரணம்! நாளை உடல் தகனம்! தயாராகும் மயானம்! குவிந்த போலீசார்! என்ன நடக்கிறது கடலூரில்?
சென்னை : கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் ஒப்புக் கொண்ட நிலையில், அவரது உடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கணியமூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாணவிக்கு நீதி கேட்டு கடந்த சில நாட்களாக அவரது பெற்றோர்கள் உறவினர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று திடீரென பள்ளி முன்பு அதிக அளவில் கூட்டம் கூடி போராட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென வன்முறை மூண்டு பள்ளி சூறையாடப்பட்டதோடு வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

மாணவி மர்ம மரணம்
கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சித்த காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது கலவரக்காரர்கள் போலீசாரை அங்கிருந்து அடித்து விரட்டினர். இதில் பல போலீசார் காயமடைந்ததோடு காவல்துறை வாகனங்களும் சேதம் அடைந்தன. இதையடுத்து கடலூர் உள்ளிட்ட அருகாமை மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

சிபிசிஐடி விசாரணை
இந்நிலையில் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பள்ளியின் தாளாளர் முதல்வர் செயலாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதாக தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு கூறினார். இதனையடுத்து கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் இரு நாட்களாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி, ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். மேலும் கலவரக்காரர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

பெற்றோர் ஒப்புதல்
இதனிடையே மாணவி மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது, "நாளை காலை 11 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், மாணவியின் உடலை பெற்றுக்கொள்ளாவிட்டால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மாணவியின் உடலை நாளை பெற்றுக் கொள்வதாக உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் ஒப்புதல் அளித்துள்ளனர்.

ஏற்பாடுகள் தீவிரம்
இதனையடுத்து கடலூரில் மாணவியின் உடலை அடக்கம் செய்வதற்காக அவரது சொந்த ஊரில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாணவியில் உடலானது அவரது ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. மாணவியின் இறுதி சடங்கில் அவரது உறவினர்களும் பொதுமக்களும் அமைதியாக கலந்து கொள்ளலாம் எனவும், தேவையற்ற இடங்களில் கூட்டம் கூட கூடாது. தேவையில்லாத தகவல்களை வதந்தியாக பரப்பக் கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர்.

கண்காணிப்பு
தற்போது மயானத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பெரிய நெசலூர் கிராமத்தை சுற்றி பன்னிரண்டு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அமைதியான முறையில் இறுதி சடங்கு செய்ய அனைத்து விதமான ஏற்பாடுகளையும் பாதுகாப்புகளையும் காவல்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கிராமத்திற்குள் யார் யார் வருகிறார்கள் என்றும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications