For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து விசாரணைக் கமிஷன்.... மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தல்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையை மூழ்கடிக்க காரணமாக இருந்த செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்று மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான வைகோ, ராமகிருஷ்ணன், திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணி தலைவர் வைகோ இன்று வெளியிட்ட கூட்டறிக்கை:

PWF leaders demand enquiry commission for delayed Breach of Chembarambakkam lake

சென்னை மாநகரத்தை நிலைகுலையச் செய்த மழை வெள்ளத்தால் ஏற்பட்ட கடும் பாதிப்புகளில் இருந்து மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதாக அரசுத் தரப்பில் வெளியிடப்படும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை ஆகும். சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் நானும், ஜி.இராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் உள்ளிட்டோரும் சென்று வெள்ள நிவாரண உதவிகளை கடந்த ஒருவார காலமாக வழங்கி வருகிறோம்.

மழை வெள்ளத்தால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற துயரங்களை வார்த்தைகளில் வடித்துவிட முடியாது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முன் அறிவிப்பின்றி சுமார் ஒரு இலட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டதால்தான், சென்னை மாநகரம் வெள்ளத்தில் மூழ்கி சின்னாபின்னமானதற்கு காரணம் என்று இப்போது பல்வேறு ஆதாரப்பூர்வமான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு உண்மைகள் தெரியவந்தால்தான், எதிர்காலத்தில் இதைப்போன்ற பேரிடர் குறித்த எச்சரிக்கையுடன் அரசு நிர்வாகம் இயங்க முடியும்.

எனவே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டது குறித்து பதவியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும். இதில் குற்றச்சாட்டு முதலமைச்சரின் நிர்வாகத்தின் மீது படிந்திருப்பதால் விசாரணைக் கமிஷன் மிக மிக அவசியமாகும்.

அக்டோபர் முதல் தேதியில் இருந்து தீவிரமடைந்த வடகிழக்கு பருவ மழையில் தமிழ்நாடு முழுவதும் உயிரிழந்தோர் குறித்து தமிழக அரசு வருவாய்த்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்களில் உயிரிழப்புகள் குறைத்து காட்டப்படுகின்றன. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரும், பெருமழையும் சென்னையில் உள்ள குடியிருப்புகளில் முதல் தளம் வரை மூழ்கிவிட்டன. நள்ளிரவில் திடீரென்று புகுந்த நீரால் நிலைமையை உணர முடியாமல் நீரில் மூழ்கி உறக்கத்திலேயே இறந்துபோனவர்கள் குறித்து உண்மைகளை அரசு மறைப்பது ஏன்?கடலூர் மாவட்டத்தில் மட்டும் மழை வெள்ளத்தில் சிக்கி 100 பேர் பலியாகி உள்ளனர்.

ஆனால் வருவாய்த்துறை கணக்கெடுப்பில் இதுவரை மொத்தம் சென்னை உட்பட 347 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது உண்மையான புள்ளி விபரம் அல்ல. எனவே தமிழக அரசு சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் மழை வெள்ளத்தில் உயிரிழந்தோர் பற்றிய முறையான கணக்கெடுப்பு நடத்தி அறிவிப்பதுடன், பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள (D.L.F) டி.எல்.எப். தகவல் தொழில்நுட்ப நிறுவன் கட்டடத்தில் வெள்ள நீர் புகுந்ததால் பூமிக்கடியில் உள்ள மூன்று தளங்களும், தரைத்தளமும் மூழ்கிவிட்டன. நவம்பர் 30 ஆம் தேதி இரவுப் பணிக்கு சென்ற ஊழியர்கள் எண்ணிக்கை 600 பேருக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. டி.எல்.எப். நிறுவனம் அதன் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும், உயிரிழப்பு எதுவும் இல்லை என்று மறுத்து வருகிறது. ஆனால் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த ஊழியர்களின் சடலங்களை அவசர அவசரமாக டி.எல்.எப். நிறுவனம் அகற்றியதாக செய்திகள் வருகின்றன.

உண்மை நிலவரத்தை அறிய சென்ற பத்திரிகையாளர்களும், ஊடகவியலாளர்களும் டி.எல்.எப். நிறுவனத்திற்குள் சென்று பார்க்க முடியாமல் நுழைவாயில் பூட்டப்பட்டு இருப்பதால் பெருத்த ஐயப்பாடு எழுகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக நந்தம்பாக்கம் டி.எல்.எப். தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் உயிரிழப்பு குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு வைகோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
People Welfare Front leaders Vaiko, Mutharasan, Thirumavalavan, Ramakrishnan had demanded that to set up the enquiry commission for delayed Breach of Chembarambakkam lake.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X