அதிமுக கவுன்சிலர் அலப்பறை! வேடிக்கை பார்த்த நகராட்சி தலைவர்! சங்கரன்கோவில் நகராட்சி சலசலப்பு!
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் அதிமுக கவுன்சிலர் ஒருவர் ஆபாச வார்த்தையால் சக கவுன்சிலரை கூட்ட அரங்கில் வைத்து திட்டியது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகராட்சிக் கூட்டத்தின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் பெண் கவுன்சிலர்கள் இருக்கிறார்கள் என்பதை கூட பொருட்படுத்தாமல் அதிமுக கவுன்சிலர் நடந்து கொண்ட விதம் மாவட்ட நிர்வாகம் வரை பஞ்சாயத்துக்கு சென்றுள்ளது.
15 நாட்களில் முடிக்க வேண்டிய பெயர் மாற்ற விவகாரத்தை 75 நாட்கள் வரை நகராட்சி பெண் அதிகாரி இழுத்தடித்த காரணத்தால் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

சங்கரன் கோவில் நகராட்சி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சரவணக்குமார். இவர் தனது வார்டுகுட்பட்ட ஒருவர் தன்னிடம் வழங்கிய பெயர் மாற்றம் தொடர்பான கோரிக்கை மனுவை நகராட்சி பெண் அதிகாரி மாரியம்மாளிடம் வழங்கியிருக்கிறார். பெயர் மாற்ற விவகாரத்தை பொறுத்தவரை 15 நாட்களில் முடிக்க வேண்டிய பணி என்றாலும் கூட நகராட்சி பெண் அதிகாரி மாரியம்மாள் 75 நாட்கள் வரை இழுத்தடித்துள்ளார்.

ஆபாச வார்த்தை
இது குறித்து நகர்மன்றக் கவுன்சில் கூட்டத்தின் போது 8வது வார்டு திமுக கவுன்சிலர் சரவணக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது அந்த அதிகாரி உரிய பதிலளிக்காததால் அங்கு கடும் அமளி ஏற்பட்டிருக்கிறது. சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்த 2வது வார்டு அதிமுக கவுன்சிலர் ராமர், பெண் கவுன்சிலர்கள் இருக்கிறார்கள் என்பதை கூட பொருட்படுத்தாமல் ஆபாச வார்த்தைகளால் அங்கு திமுக கவுன்சிலரை திட்டியிருக்கிறார்.

மாவட்ட நிர்வாகம்
நகர்மன்றக் கூட்டத்தின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் அதிமுக கவுன்சிலர் நடந்துகொண்ட விவகாரத்தை திமுகவினர் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருக்கின்றனர். பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்ட நகராட்சி பெண் அதிகாரி மாரியம்மாளை நகராட்சி ஆணையரோ, தலைவரோ அழைத்து விசாரிப்பார்கள் எனப் பார்த்தால் அவர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிகழ்வு நடந்துள்ளது.

ஒரே நாளில்
இதையடுத்து அடுத்த சில மணி நேரங்களில் பெயர் மாற்றத்தை கிளீயர் செய்து அனுப்பினார் மாரியம்மாள். இதனை உரிய காலத்தில் செய்திருந்தால் பிரச்சனைக்கே வேலையிருந்திருக்காது. இதனிடையே திமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பெண் அதிகாரி செயல்பட்டதாகவும் அவரை மாற்ற வேண்டும் எனவும் திமுக தரப்பில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications