மொத்தமாக இறங்கிய மழை: இதான் அதிகபட்சம்! சிக்கி திணறும் சீர்காழி! சூழ்ந்த தண்ணீர்! விவசாயிகள் கண்ணீர்
மயிலாடுதுறை: கனமழை கொட்டித்தீர்த்ததால் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 29ஆம் தேதி தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளான சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், சட்டநாதபுரம், கொள்ளிடம், திருமுல்லைவாசல், பூம்புகார், திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் பெய்தது.

சீர்காழியில் அதிகபட்ச மழை
தமிழகத்திலேயே அதிகப்படியாக சீர்காழியில் 19 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்ச கனமழை காரணமாக சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் தேங்கியதுடன் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். சீர்காழியில் 20 க்கும் மேற்பட்ட நகர குடியிருப்பு பகுதிகளின் சாலைகளில் மழைநீர் தேங்கி வீடுகளையும் சூழ்ந்துள்ளது.

ஆற்றில் உடைப்பு
தென்னப்பட்டினம் ஊராட்சியில் மணி ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்களில் நான்கு அடி உயரத்திற்கு தண்ணீர் சூழ்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்து இருக்கின்றன. இப்பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது சம்பா தாலடி நடவு செய்யப்பட்டு முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வந்தது.

விவசாயிகள் பாதிப்பு
இந்த நிலையில் கொட்டித்தீர்த்த கனமழையால் பயிர்கள் அழுகி பெரும் பாதிப்பை விவசாயிகள் சந்தித்துள்ளனர். கடன் பெற்று விவசாயம் செய்த விவசாயிகள் மிகந்து மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக வேதனை தெரிவித்தனர். கனமழை காரணமாக பூம்புகாரில் சுனாமி குடியிருப்பு வடக்கு வீதி பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

சாலையில் கழிவுநீருடன் மழைநீர்
அதேபோல் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட புங்கனூர் சாலையில் அதிகளவில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் இந்த சாலையின் வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணித்து வருகின்றனர். மழை நீருடன் கழிவுநீரும் கலந்து இருப்பதால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் என்று மக்கள் அஞ்சுகின்றனர்.

வீடுகளுக்குள் தண்ணீர்
சாலையோரங்களில் இருக்கும் குடியிருப்புகளில் வாகனங்கள் செல்லும் பொழுது தேங்கியுள்ள மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். வீடுகளுக்குள் புகுந்த நீரினை மக்கள் தாங்களே வெளியேற்றி வருகின்றனர். மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

மக்கள் புகார்
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அங்கு உள்ள பண்டம், பாத்திரங்கள் அதில் மிதக்கின்றன. வீடுகளை விட்டு வெளியேறியுள்ள பொதுமக்கள் தங்களுக்கு உதவ அதிகாரிகள் யாரும் வரவில்லை, என்றும் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வானிலை எச்சரிக்கை
இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications