For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர் நியமனம் ரத்து... அதிமுக அரசுக்கு கிடைத்த மரண அடி: ராமதாஸ் !

டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது அ.தி.மு.க. அரசுக்கு கிடைத்த மரண அடி என ராமதாஸ் கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 11 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டது செல்லாது என்று கூறி அவர்களின் நியமனத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது அதிமுக அரசுக்கு கிடைத்த மரண அடி என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 11 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டது செல்லாது என்று கூறி அவர்களின் நியமனத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இதன்மூலம் அதிமுக அரசின் சர்வாதிகார, ஊழல் மற்றும் முறைகேடான போக்குக்கு மரண அடி கிடைத்துள்ளது.

 Ramadoss condemned on state government

அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதில் நடந்த முறைகேடுகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமகவும், மற்றவர்களும் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது.'' தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய உறுப்பினர்கள் எவரும் இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிகளை பின்பற்றி நியமிக்கப்படவில்லை.

இதுதொடர்பாக முறையாக கலந்தாய்வுகள் செய்யப்படவில்லை. உறுப்பினர்களுக்கு முறையான தகுதிகள் இல்லை'' என்று சென்னை உயர்நீதிமன்றம் அதன் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, இராமமூர்த்தி என்ற உறுப்பினரை இந்த பதவிக்கு மீண்டும் பரிசீலிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

நீதிபதிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இராமமூர்த்தி என்பவர் மாவட்ட நீதிபதியாக பணியாற்றியவர். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது, அவர் மீதான குற்றச்சாட்டுக்களைக் கருத்தில் கொண்டு பணி நீட்டிப்பு வழங்க முடியாது என்று உயர்நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு முடிவு செய்தது. அவர் மீது ஊழல் புகார்கள் எழுப்பப்பட்டது தான் இதற்குக் காரணம் என்ற உண்மையை புறந்தள்ளிவிட்டு, அவரை மிக முக்கியமான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக தமிழக அரசு நியமித்தது என்றால், உயர்நீதிமன்ற ஆணைக்கும், சட்டப்பூர்வமான அமைப்புகளுக்கு உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்கள் அப்பழுக்கற்ற கடந்த காலத்திற்கு உரியவர்களாக இருக்க வேண்டும் என்ற மரபுக்கும் தமிழக அரசு எந்த அளவுக்கு அவமரியாதை செய்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பின் மூலம் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மாண்பும், கவுரவமும் காப்பாற்றப்பட்டுள்ளது.

அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு இந்த 11 பேரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட போதே அதற்கு பா.ம.க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக 01.02.2016 அன்று நான் வெளியிட்ட அறிக்கையில்,''தகுதியும் நேர்மையும் இல்லாமல் விசுவாசத்தின் அடிப்படையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதால் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் ஊழல் ஆணையமாக மாறி வருகிறது. லஞ்சம் கொடுத்து பணியில் சேர்பவர்களின் முதன்மை நோக்கம் லஞ்சம் வாங்குவதாகத் தான் இருக்கும் என்பதால் அரசு நிர்வாகத்தில் ஊழல் தலைவிரித்தாடும்.

எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 11 புதிய உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, இப்பதவிக்கு தகுதியான ஆட்களை பரிந்துரை செய்வதற்காக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் அப்பழுக்கற்ற வரலாறு கொண்ட சமூக ஆர்வலர்கள் அடங்கியகுழுவை அமைக்க வேண்டும்'' என்று வலியுறுத்தி இருந்தேன். சென்னை உயர்நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பின் மூலம் உறுப்பினர்கள் நியமனம் குறித்து நான் கூறிய குற்றச்சாற்றுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

எந்த சட்டத்தையும் மதிக்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது போல தான் தோன்றித்தனமாக செயல்பட்டு வரும் தமிழக அரசு இனியாவது திருந்த வேண்டும். ஆளுங்கட்சி வழக்கறிஞர்களையும், ஊழலுக்கு உதவிய அதிகாரிகளையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களாக நியமிக்கும் போக்கை கைவிட்டு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழுவை அமைத்து அதன் பரிந்துரைப்படி உறுப்பினர்களை நியமிக்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
PMK founder Doctor Ramadoss condemned on state government for cancellation of TNPSC members appoinment
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X