For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பவானிசிங்கை தமிழக அரசு நியமிப்பது நீதிப் படுகொலை.. டாக்டர் ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமீன் வழக்கில், அரசு வழக்கறிஞரை தமிழக அரசே நியமிப்பது என்பது நீதிப்படுகொலையாகும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து பெங்களூர் தனி நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து அவர்கள் அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் பிணை வேண்டி அவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் நாளை மறுநாள் பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.

Ramadoss opposes DVAC's appointment of Bhavani Singh as SPP in Jaya appeal case

உயர்நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கும் பிணை மனு மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையின்போது அரசுத் தரப்பில் வாதிடுவதற்கான சிறப்பு வழக்கறிஞராக பவானி சிங்கை தமிழக அரசு நியமித்ததில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் மீறப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூருக்கு மாற்றப்பட்ட போது, அவ்வழக்கின் அரசுத்தரப்பு வழக்கறிஞரை கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்தி கர்நாடக மாநில அரசு நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

அதன்படி, அரசு வழக்கறிஞராக முதலில் ஆச்சாரியாவும், பின்னர் பவானி சிங்கும் நியமிக்கப்பட்டு, வழக்கு விசாரித்து முடிக்கப்பட்டு விட்டது. இப்போது இத்தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக வாதாடுவது யார்? என்ற வினா எழுந்தது.

இவ்வழக்கை நடத்தும் வழக்கறிஞரை கர்நாடக அரசு தான் நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு, இவ்வழக்கில் இறுதி மேல்முறையீடு முடிவடையும் வரை பொருந்தும். ஆனால், தெளிவான வழிகாட்டுதல் இல்லாமல் அரசு வழக்கறிஞரை நியமிப்பது எப்படி? என கர்நாடக அரசு தயங்கிக் கொண்டிருந்த நிலையில், அந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இவ்வழக்கை நடத்துவதற்கான அரசு வழக்கறிஞராக தமிழக அரசின் கையூட்டு ஒழிப்புத்துறை நியமித்திருக்கிறது.

இதையடுத்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் போது ஜெயலலிதாவுக்கு எதிர்த்தரப்பு வழக்கறிஞராக பவானிசிங் வாதாடுவது உறுதியாகிவிட்டது. பவானிசிங்கின் கடந்த கால செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும்போது அவரது நியமனம் இவ்வழக்கின் விசாரணை நியாயமாக நடப்பதை சீர்குலைத்து விடும்.

இவ்வழக்கின் அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கும், கர்நாடக மாநில அரசுக்கும் தான் உள்ளதே தவிர, தமிழக அரசுக்கோ அல்லது இவ்வழக்கில் புலன்விசாரணை மேற்கொண்ட தமிழக கையூட்டு ஒழிப்புத்துறைக்கோ இல்லை. தமிழக முதலமைச்சர் பதவியிலிருந்து ஜெயலலிதா நீக்கப்பட்டு விட்ட போதிலும், அவரால் நியமிக்கப்பட்ட பொம்மைகள் தான் தமிழகத்தை ஆட்சி செய்து வருகின்றனர்.

ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கைத் தொடர்ந்த தமிழக கையூட்டு ஒழிப்புத்துறை அலுவலத்தில் இன்னமும் ஜெயலலிதாவின் உருவப்படம் தான் அலங்காரமாக மாட்டப்பட்டிருக்கிறது. ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட பிறகும் ஊழல் குற்றவாளியான அவரது படத்தைத் தான் முதலமைச்சர் முதல் கையூட்டு ஒழிப்புத்துறை அதிகாரிகள் வரை அனைவரும் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் ஆதிக்கம் இந்த அளவுக்கு தலைவிரித்தாடும் ஒரு துறையின் சார்பில் நியமிக்கப்படும் வழக்கறிஞர் அவருக்கு எதிராக வாதிடுவார் என்று எதிர்பார்ப்பது மூடநம்பிக்கையின் உச்சமாகும்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி, அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருந்தபோதே ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பவானிசிங் செயல்பட்டார். வழக்கை இழுத்தடிக்க ஜெயலலிதாவுக்கு துணை போனதற்காக நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டதுடன் அபராதத்துக்கும் ஆளானார். மேலும் தமக்கு எதிராக பவானிசிங் தான் வாதாட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடரும் அளவுக்கு ஜெயலலிதா தரப்புக்கு ஆதரவாக பவானிசிங் இருந்து வருகிறார். இப்படிப்பட்டவர் இவ்வழக்கில் அரசு வழக்கறிஞராக வாதிட்டால், அது நீதியை படுகொலை செய்யும் செயல் ஆகும்.

இன்றைய நிலையில் நீதி படுகொலை செய்யப்படுவதை தடுப்பது கர்நாடக அரசு அல்லது இந்த வழக்கு பெங்களூருக்கு மாற்றப்படுவதற்கு காரணமான தி.மு.க. பொதுச்செயலாளர் க. அன்பழகன் அவர்களால் மட்டுமே சாத்தியமாகும். ஆனால்,‘‘சொத்துக்குவிப்பு வழக்கின் உயர்நீதிமன்ற மேல்முறையீட்டில் கர்நாடகஅரசு வாதியோ அல்லது பிரதிவாதியோ இல்லை. எனவே, அரசு வழக்கறிஞரை நியமிப்பதில் நாங்களாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதாக இல்லை. அதேநேரத்தில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுக்கு கட்டுப்படுவோம்'' கர்நாடக சட்டத்துறை செயலாளர் செங்கப்பா கூறியுள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவும் நீதிமன்ற உத்தரவுப்படியே செயல்படுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

எனவே, ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதியை நிலைநாட்டும் பொறுப்பு திமுகவுக்கு உள்ளது. 2003 ஆம் ஆண்டில் இந்த வழக்கு கர்நாடக மாநிலத்திற்கு மாற்றப்படுவதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ, அதைவிட அதிக காரணங்கள் பவானிசிங்கை மாற்றுவதற்கு உள்ளன. இதற்கு முன் 2011 ஆம் ஆண்டில் சொத்துக்குவிப்பு வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த அனுமதி கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கையூட்டு ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. அவ்வழக்கில் கையூட்டு ஒழிப்புத்துறையின் சார்பில் வாதிட உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராஜீவ் தவான், கர்நாடக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.டி. நானய்யா ஆகியோர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து அப்போது அன்பழகன் தான் வழக்குத் தொடர்ந்தார். அவ்வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வி.ஜெகநாதன், கையூட்டு ஒழிப்புத்துறையின் சார்பில் வழக்கறிஞரை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், உச்சநீதிமன்ற அறிவுரைப்படி கர்நாடக உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞரைத் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் 19.08.2011 அன்று தீர்ப்பளித்தார்.

அப்போது நிலவிய சூழலும், இப்போது நிலவும் சூழலும் ஒரே மாதிரியாக இருப்பதால், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கை நடத்துவதற்கான அரசு வழக்கறிஞராக பவானிசிங்கை கையூட்டு ஒழிப்புத் துறை நியமித்ததை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பேராசிரியர் அன்பழகன் வழக்கு தொடர வேண்டும். இதை செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தி.மு.க. தலைவர் கலைஞர், பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் ஆகியோருக்கு உண்டு. ஊழலுக்கு துணை போன கட்சி என்ற அவப்பெயர் தி.மு.க.வுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் கலைஞர் எப்போதும் உறுதியாக இருப்பவர் என்பதால், ஜெயலலிதா உள்ளிட்டோரின் பிணை மனுக்கள் நாளை மறுநாள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது பவானிசிங் நியமனத்துக்கு பேராசிரியர் க. அன்பழகன் மூலம் எதிர்ப்பு தெரிவிக்க வைப்பார் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

English summary
PMK founder Dr Ramadoss has opposed the DVAC's appointment of Bhavani Singh as SPP in Jaya appeal case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X