For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓசியில கொடுத்தா கூட வேண்டாம் சாமி... வெள்ளம் பாதித்த பகுதிகளில் வீடு, அபார்மெண்ட் நிலைமை!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கனமழை பெய்து தேங்கிய வெள்ளநீர் வாரக்கணக்கில் வடியாத காரணத்தால் சென்னை புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் கிடைத்த விலைக்கு வீடுகளை விற்கும் நிலைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்டி முடிக்கப்பட்ட பெரும்பாலான வீடுகள், வீட்டு மனைகளும் இனி விற்குமோ, விற்காதோ என்று அஞ்சத் தொடங்கியுள்ளனர் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள்.

கம்மி விலை... காற்றோட்டமான வசதி... தனி வீடு... தாம்பரத்தில இருந்து அரை மணிநேரந்தான் என்றெல்லாம் சொல்லி டிவி சேனல்களில் கூவி கூவி வீடு, ப்ளாட், மனைகள் விற்றவர்கள் யாரையும் இன்றைக்கு காணோம். ஆனால் அவர்கள் சொன்னதை நம்பி வீடு வாங்கியவர்களின் கதியோ பரிதாபமாக இருக்கிறது.லேக் வியூ அபார்ட்மென்ட் என்று ஆசைப்பட்டு வாங்கியவர்கள் எல்லாம் மழை பெய்தால் ஏரியே வீட்டிற்குள் வரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

சொந்த வீட்டில் வசிக்கவேண்டும் என்பது அனைவருக்கும் கனவு. நல்ல வேலையும், கை நிறைய சம்பளமும் கிடைத்தால் லோன் போட்டு வீடு வாங்கத்தான் முயற்சி செய்வார்கள். வெளிநாட்டுவாழ் தமிழர்களோ சம்பாதித்த பணத்தை சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பாக வாங்கி போடுவார்கள். இவர்களின் ஆசையை உணர்ந்த ரியல் எஸ்டேட் முதலைகள் ஏரி, குளங்களை ஆக்கிமிரமிப்பு செய்து இவர்களின் தலையில் கட்டிவிட்டு இப்போது நடப்பதை வேடிக்கை பார்க்கின்றனர்.

ரியல் எஸ்டேட் விளம்பரங்கள்

ரியல் எஸ்டேட் விளம்பரங்கள்

சினிமா நட்சத்திரங்களான மாதவன், வடிவுக்கரசி முதல் சின்னத்திரையில் பிரபலமாக நடித்து வரும் அபிதா, ரஞ்சித், தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் என ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் தலைகாட்டாத நடிகர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு காலையில் டிவியை ஆன் செய்தாலே ரியல் எஸ்டேட் விளம்பரங்கள்தான் வரிசை கட்டி நிற்கும். அதேபோல சனிக்கிழமை வந்தாலே பிரபல நாளிதழ்களில் ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் குவிந்திருக்கும். கடந்த 2 வாரங்களாக இந்த விளம்பரங்கள் எதையும் பார்க்க முடியவில்லை. காரணம் மழை செய்த மாயம்தான்.

மனதை மாற்றிய மழை

மனதை மாற்றிய மழை

தீபாவளிக்கு முன்புவரை சென்னையின் வேளச்சேரி, தாம்பரம் போன்ற ஏரியாக்களில் வீடுவாங்க வேண்டும் நினைத்துக்கொண்டிருந்தவர்கள் பலரும், மழையால் குடியிருப்பு பகுதிகள் ஏரி, குளங்களாக மாறவே, மனதை மாற்றிக்கொண்டு அதிக வாடகை என்றாலும் நகருக்கு உள்ளேயே இருந்து விடலாம் என்று எண்ணத் தொடங்கிவிட்டனர்.

வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகள்

வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகள்

கடந்த 9ம் தேதி பெய்த பேய்மழை... தொடர்ந்து 15, 23ம் தேதிகளில் விடாமல் கொட்டிய கனமழை சென்னை புறநகரில் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியவர்களின் மனதை அசைத்துதான் பார்த்திருக்கிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் தரை தளம், கார் பார்க்கிங் பகுதி மூழ்கி, முதல் மாடி மூழ்கும் அளவுக்கு பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆசை ஆசையாய் வாங்கிய கார் வெள்ளத்தில் சிக்கி இப்படி துருப்பிடித்து கிடக்கிறதோ என்றும் வீடுகளில் பாம்பும், விச ஜந்துகளும் குடியேறிவிட்டதே என்றும் கவலைப்படுகின்றனர்.

முடக்கிப் போட்ட மழை

முடக்கிப் போட்ட மழை

மழையால் சாலைகளில் இரண்டு ஆள் உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றதால் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேற முடியாதவர்கள் படகுகளில் ஏறி தப்பி பிழைத்து வந்து உறவினர்களின் வீடுகளிலும், ஹோட்டல்களிலும் தஞ்சம் புகுந்தனர்.

ஹோட்டல்களில் குடியேற்றம்

ஹோட்டல்களில் குடியேற்றம்

வசதிபடைத்தவர்கள் வாரக் கணக்காக ஹோட்டல்களில் அறை எடுத்து தங்கி இருக்கிறார்கள். அங்கிருந்தபடிவே அவர்கள் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். ஏழைகள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைய நடுத்தர மக்களின் பாடுதான் படு திண்டாட்டமாகிவிட்டது.

மன உளைச்சலுக்கு ஆளான மக்கள்

மன உளைச்சலுக்கு ஆளான மக்கள்

கடந்த இரு தினங்களாக மழை நின்றுள்ளதால் வெள்ளநீர் சில இடங்களில் வடிய ஆரம்பித்திருக்கிறது. ஆனாலும் ஏரிகள், குளங்களில் இருந்து வெளியேறும் உபரிநீரினால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடியவில்லை. இது அந்த பகுதிகளில் வீடுகளை வாங்கியவர்களுக்கு மன உளைச்சலை அதிகரித்துள்ளது.

புறநகரில் பாதிப்பு

புறநகரில் பாதிப்பு

மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை வசதி கள் இல்லாத விரிவாக்க பகுதி மண்டலங்கள், சென்னை மாநகராட்சி எல்லையை ஒட்டியுள்ள புறநகர் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில், நிலைமை படுமோசமாக உள்ளது. இந்த பகுதிகளில், கடந்த 20 நாட்களுக்கு மேலாக, வெள்ளம் வீடுகளை சூழ்ந்துள்ளது.

வீடுகளை விற்க முடிவு

வீடுகளை விற்க முடிவு

தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வார கணக்கில் தேங்கியதால், மழை தண்ணீர் தேங்கும் பகுதிகளில் ரியல் எஸ்டேட் மிகவும் மந்தமாகும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. தாம்பரம் முடிச்சூர் சாலையில் கிருஷ்ணா நகர், சக்தி நகர் போன்ற பகுதிகளில் வீடுகளில் சுமார் 3 அடி உயரத்துக்கு மழைத் தண்ணீர் தேங்கி நின்றது. மொட்டை மாடியில் வாழ்ந்த நாட்கள் மனதில் வந்து போவதால் பலரும் வீட்டை விற்று விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எங்கெங்கு பாதிப்பு

எங்கெங்கு பாதிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொரட்டூர், வளசரவாக்கம், முகலிவாக்கம், மவுலிவாக்கம், தாம்பரம் சி.டி.ஓ., காலனி, முடிச்சூர் வரதராஜபுரம், பி.டி.சி., குவாட்டர்ஸ் உள்ளிட்ட பல பகுதி மக்கள், இந்த முடிவுக்கு தான், தற்போது வந்துள்ளனர். தற்போதைய வெள்ளத்திற்கே இந்த நிலை என்றால், எதிர்காலத்தில் மழை வெள்ளம் இன்னும் தீவிரமாக இருந்தால், தங்கள் நிலை என்னவாகுமோ என்ற கவலை, இப்பகுதிவாசிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

அடிமாட்டு விலைக்கு போகும்

அடிமாட்டு விலைக்கு போகும்

குடியிருப்பு பகுதிகளில் இருந்து மழைநீர் வெளியேற, வடிகால் வசதியில்லை. கழிவுநீர் பாதுகாப்பாக வெளியேற, பாதாள சாக்கடை வசதிகள் இல்லை. தற்போது மழைநீரில், கழிவுநீர் கலந்து, தொற்றுநோய் அபாயத்தில் புறநகர் பகுதிகள் உள்ளன. வெள்ளம் இன்று வடியும், நாளை வடியும் என, காத்திருந்த புறநகர் பகுதிவாசிகள், இந்த மழையை ஒரு பாடமாக எடுத்து, தங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறவும், வெள்ள பாதிப்பு இல்லாத பகுதிகளில் வீடு வாங்கவும் முடிவு செய்துள்ளனர். இப்போது உள்ள சூழ்நிலையில் வீடுகளை விற்றாலும் அடிமாட்டு விலைக்குத்தான் போகும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

சரிவு நிலையை நோக்கி

சரிவு நிலையை நோக்கி

இது ஒருபுறம் இருக்க கோடிக்கணக்கில் செலவு செய்து வீடுகளை கட்டி வைத்துள்ள ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் தங்களின் நிலை என்னவாகுமோ என்று தவித்து வருகின்றனர். மழை வெள்ளத்தால் மனை விலையும், அடுக்குமாடி குடியிருப்புகளின் விலையும் மடமடவென சரிந்து வருகிறது என்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்

English summary
The heavy rain which lashed the city has make the real estate business further worried in Chennai suburbs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X