"நட்பு என்பது பாலின வேறுபாடுகளைக் கடந்ததாக இருக்க வேண்டும்" - பெண் நீதிபதி அறிவுரை
திருச்சி: "பாலின வேறுபாடுகளை கடந்து ஆண் பெண் நட்புறவு இருக்க வேண்டும்'' என ஓய்வுபெற்ற நீதிபதியான பிரபா ஸ்ரீதேவன் கூறினார். திருச்சி தேசிய கல்லூரியின் 95 வது ஆண்டு விழாவில் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார்.
அந்நிகழ்ச்சியில் பேசியபோது," கல்லூரி உள்ளே நுழைந்த பிறகு ஆக்கப்பூர்வ சக்தியுடன் மாணவர்கள் முழு மனிதராக வெளியேற வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.
கல்லூரியில் பயிலும் காலம் விலை மதிக்க முடியாதது. இங்கு கிடைக்கும் நட்பை பாலமாக பயன்படுத்தி உயர்ந்த மனிதராக மாற வேண்டும். நண்பர்களோடு இன்ப துன்பங்களை பரிமாறிக் கொள்ளும் காலம் திரும்ப வராது. நண்பர் என்பவர் இறைவனின் ஏஜன்டாகும்.
பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தவிர்க்க ஆண் பெண் என்ற பாலின வேறுபாடுகளை கடந்த நட்புறவு வேண்டும். ஆண் பெண் நட்பு என்பது போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய விஷயம். இதில் இருபாலருக்கும் பொறுப்பு உள்ளது. பாலினத்தை அடிப்படையாக கொண்டு கல்லூரிகளில் நட்பை வீணாக்கக் கூடாது. சமூகத்தில் நடக்கும் அநீதியை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாமல் மவுனமாக இருந்தால் அந்த அநீதி நமக்கு ஏற்படும் போது மற்றவர்களும் மவுனமாக இருந்துவிடுவார்கள். நாம் மவுனமாக இருப்பதால் தவறு செய்பவர்களுக்கு தைரியம் வருகிறது. ஒரு பொருளை திருடுவது மட்டும் திருட்டல்ல.
குறுக்கு வழியில் மற்றவர்களின் உரிமையை பறிப்பதும் ஒரு விதமான திருட்டு தான்.நாட்டில் உள்ள பசுமை அழிவதால் தான் இயற்கையில் மாற்றம் ஏற்படுகிறது. அதனால் பசுமையை பாதுகாக்க நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும். பழங்குடி இன மக்களிடம் இருக்கும் பகுத்தறிவு நாகரீக மனிதர்களிடம் இல்லை.
போதும் என்ற மனப்பாண்மை குறைவாகவே உள்ளது. ஸ்விஸ் வங்கியில் இருக்கும் பணம் அவரது மறைவுக்கு பிறகு கூட வெளியில் வராமல் போய்விடுகிறது என்பதை உணர வேண்டும்.
நமது பாரம்பரியத்தை மறந்து முன்னேற முடியாது. நம் நாட்டில் உள்ள கலைஞர்கள் அறிஞர்களை முழுமையாக அறிந்த பிறகு பிற நாடுகளில் உள்ளவர்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். சகோதரத்துவம் நம் நாட்டில் இல்லாதது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதை களைய மாணவர்கள் முன்வர வேண்டும்" என்று பேசினார் அவர்.












Click it and Unblock the Notifications