For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம் முழுவதும் போலி வாக்காளர்கள்; சேலத்தில் மட்டும் 3 லட்சம் : கருணாநிதி குற்றச்சாட்டு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் வாக்களர் பட்டியலில் மோசடி அடைந்துள்ளதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டத்தில் 3 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் ஆளுங்கட்சியினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது பற்றி நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.

Salem has around 3 lakh fake voters: Karunanidhi

அ.தி.மு.க.வினர் ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்காளர் பட்டியலில் தலையிட்டு ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கிடும் வகையில் மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சேலம் மாவட்டத்தில், ஆண்டு முழுவதும் மூன்று முறை துணை வாக்காளர் பட்டியல்களை வெளியிட்டு, அக்டோபர் நவம்பர் மாதங்களில் சிறப்பு முகாம்களை நடத்தி, புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்குப் பதிலாக; 15.10.2014 முதல் 10.11.2014 வரையில் அதாவது 25 நாட்களுக்குள், தாங்கள் விரும்பியபடி 72,103 புதிய வாக்காளர்களைச் சேர்த்ததாகக் கூறி, பட்டியலை இறுதி செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.

25000 போலி வாக்காளர்கள்

தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட புகாரில் ஒவ்வொரு வாக்குசாவடியிலும் ஒரே வாக்களார் பெயர் 2, 3 இடங்களில் இருப்பது, மரணம் அடைந்தவர்கள், குடியிருக்கும் இடத்தை மாற்றம் செய்தவர்கள் எனக் குறைந்தது 100 வாக்குகள் இருக்கும். அப்படி பார்த்தால் ஒரு தொகுதிக்கு 250 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதனால் 250 வாக்குச் சாவடிக்கு 100 வாக்குகள் வீதம் ஏறத்தாழ 25 ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ளனர்.

3 லட்சம் போலி வாக்காளர்கள்

ஒரு தொகுதிக்கு 25 ஆயிரம் போலி வாக்காளர்கள் இருந்தால் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் குறைந்தது 3 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பார்கள். எனவே இந்தியத் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்குச்சாவடி அலுவலர்களையும் கொண்டு வீடு, வீடாகச் சென்று நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகளின் சார்பில் ஏற்கனவே வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

போலி வாக்காளர்கள்

மாவட்டத் தேர்தல் அதிகாரியும், துணைத் தேர்தல் அதிகாரியும், மண்டலத் தேர்தல் அதிகாரிகளும் களப்பணியில் ஈடுபடாததால் ஆண்டுக்கு ஆண்டு போலி வாக்காளர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றுள்ளது. அதுவும் கடந்த 3 ஆண்டு காலமாக, ஆளுங்கட்சியாக அ.தி.மு.க. பொறுப்பேற்ற பிறகு தான் இந்த நிலை என்பதைப் புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

சேலம் மாவட்டம் முழுவதும் 3 லட்சம் போலி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டது.

சேலத்தைப் போலவே, பொள்ளாச்சியில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலிலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தவர்களின் பெயர்கள் குடும்பம், குடும்பமாக நீக்கப்பட்டுள்ளன. அதுபற்றியும் கழகத்தின் சார்பில் புகார் தரப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பது பற்றி மாவட்ட ஆட்சியர் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலே கழகத்தின் சார்பில் புகார் தரப்பட்டுள்ளது. ஒருசில குறிப்பிட்ட இடங்களை மட்டும் இங்கே நான் குறிப்பிட்ட போதிலும், மாநில அளவில் பரவலாக இதேபோன்ற புகார்கள் பல உள்ளன.

வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்வு

இன்னும் விரிவாகச் சொல்லவேண்டுமென்றால் 2009-ஆம் ஆண்டு தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 4 கோடியே 16 லட்சத்து 20 ஆயிரத்து 460. இந்த எண்ணிக்கை தான் 2014-இல் 5 கோடியே 37 லட்சத்து 52 ஆயிரத்து 682 வாக்காளர்களாக உயர்ந்துள்ளது. அதாவது 2009-ஆம் ஆண்டை விட 29.1 சதவிகிதம் வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்ந்தது.

தமிழகத்தில் மட்டும் இந்தியாவிலேயே மிக அதிகமாக 29.1 சதவிகிதமாக வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது, எந்த அளவுக்கு போலி வாக்காளர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகமாக்கப்பட்டுள்ளது என்பதைத் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தும்.

ஆளுங்கட்சியினர்

உள்கட்சித் தேர்தல் பணிகளிலே திமுகவினர் ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தபோது, ஆளுங்கட்சியினர், அமைச்சர்களின் உதவியோடு, போலி வாக்காளர்களைச் சேர்ப்பது, உண்மையான வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது போன்ற பொய் புனைசுருட்டுப் பணிகளிலே ஒவ்வொரு தொகுதியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த விவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

சட்டரீதியாக சந்தியுங்கள்

இந்த நடவடிக்கைகளைச் சட்ட ரீதியாகச் சந்திக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நமக்குள்ளது என்பதால், புதிதாகப் பொறுப்புக்கு வந்துள்ள நிர்வாகிகள் இறுதி வாக்காளர் பட்டியலை நூறு சதவிகிதம் நேரடியாகச் சரிபார்த்து, முறைகேடுகளையும், மோசடிகளையும் நீக்குவதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உடனடியாக முன் வரவேண்டும்.

முன்வாருங்கள்

சட்டப்பேரவைத் தேர்தலில் நமக்கா வாய்ப்பு கிடைக்கப் போகிறது, வாய்ப்பு கிடைக்கக் கூடியவர்கள் இந்தப் பணியிலே ஈடுபடட்டும் என்று நினைக்காமல், அனைவரும் இந்தப் பணியிலே தங்களுடைய பங்களிப்பினைச் செலுத்திட முன்வர வேண்டும்.

தேர்தல் ஆணையம்

வெற்றி மீது மட்டும் கவனம் இருந்தால் போதாது, அந்த வெற்றிக்கு அடித்தளமான வாக்காளர் பட்டியல் தயாரிப்பிலும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். முக்கியமான இந்தப் புகார் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையமும், மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரியும் முறையாக விசாரித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK chief Karunanidhi claimed that there were around 3 lakh fake voters enlisted in the latest rolls in Salem. Karunanidhi complained to the Election Commission about alleged irregularities in the Tamil Nadu fake voters list.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X