அறிவு இருக்கா உனக்கு? .... பணம் எடுக்க போனவரிடம் பாய்ந்த நாட்றம்பள்ளி எஸ்.பி.ஐ வங்கி மேனேஜர்
வேலூர் அருகே நாட்றம்பள்ளியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளர்களை கீழ்த்தரமான வார்த்தைகளில் வங்கி மேனேஜர் திட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்: வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் வங்கியில் பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர்களை வங்கி அதிகாரி ஒருவர் அவமரியாதையாகத் திட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை அடுத்து தங்களிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றவும், குடும்ப செலவிற்காக பணத்தை பெறவும் பொதுமக்கள் வங்கிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். வரிசையில் நின்ற 50க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர்.

வங்கியில் கூட்டம் அலைமோதுவதால் வங்கி ஊழியர்கள் திணறி வருகின்றனர். விடுமுறையில்லாமல் பணியாற்றிய பலர் மாரடைப்பில் மரணமடைந்துள்ளனர். இதனால் ஞாயிறு விடுமுறை விடப்பட்டது. திங்கட்கிழமையன்று வங்கி திறந்த உடன் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்றனர். பல வங்கிகளில் பணமில்லை என்று கூறவே மோதல் ஏற்பட்டது. வாடிக்கையாளர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கிகளில் போதிய பணம் இல்லாததால் வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே மோதல்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளர்களை அங்குள்ள வங்கி அதிகாரிகள் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளில் திட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இது பொதுமக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கியில் பணம் பெற காத்திருந்த பொதுமக்களை அந்த வங்கி மேனேஜர் அநாகரீகமாக திட்டுகிறார். கையை கையை நீட்டி அசிங்கமான சைகை காட்டி தகாத வார்த்தைகளில் திட்டுகிறார். ஆனாலும் பொதுமக்கள் ஆத்திரப்படாமல் பதில் பேசுகின்றனர்.
வங்கி ஊழியர்களுக்கு நிச்சயம் வேலை பழு தற்போது அதிகம்தான். ஆனாலும் வாடிக்கையாளர்களிடம் அசிங்கமாக பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்று பலர் கேள்வி எழுப்பினர். எங்கு வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள் என்றும் சீறும் வங்கி மேனேஜரின் வீடியோ இப்போது ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த இரு தினங்களாக சென்னையிலும் பல வங்கிகளில் வரிசைகளில் காத்திருப்பவர்களைப் பார்த்து நாய்கள் போல காத்திருப்பதாக கூறி திட்டுவதாகவும் வாடிக்கையாளர்கள் பலரும் புகார் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications