For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேலூரில் கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்த சிறுமியை தேடும் பணி தீவிரம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

வேலூர்: வேலூரில் கழிவுநீர் கால்வாய்க்குள் தவறி விழுந்த 13 வயது சிறுமியை தேடும் பணி 3வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இந்தர்ஜித் முகர்ஜி, வேலூரிலுள்ள தனியார் மருத்துவமனையில், தனது மகள் மேகாவுக்கு சிகிச்சை பெறுவதற்காக குடும்பத்தினருடன் வந்திருந்தார். அவர்கள் பேரிப்பேட்டை சுப்பிரமணியசாமி கோவில் தெருவில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தனர்.

நேற்று முன்தினம் மாலை கடைவீதிக்கு சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு குடும்பத்தினர் திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது. விடுதி அருகே ஒரு இடத்தில் கால்வாயில் ஓடிய தண்ணீர் ரோட்டிலும் நிரம்பி வழிந்து ஓடியது. பெற்றோருடன் நடந்து வந்த இந்தர்ஜித்தின் மற்றொரு மகள் பிரியங்கா (13) அந்த இடத்துக்கு வந்தபோது கால்வாய் இருப்பது தெரியாமல் கால்வாய்க்குள் தவறி விழுந்து விட்டார்.

2 அடி அகலமுள்ள அந்த கால்வாய்க்குள் விழுந்த பிரியங்காவை மேலே தூக்க முயன்றும் முடியவில்லை. கால்வாயில் உள்ள கழிவுநீருடன் சென்ற வெள்ளம் அவரை இழுத்துச் சென்று விட்டது. தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அங்கு வந்து மீட்பு பணியை தொடங்கினர். பொக்லைன் எந்திரமும் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு கலெக்டர் நந்தகோபால், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மேயர் கார்த்தியாயினி ஆகியோர் விரைந்து வந்தனர். அவர்களது மேற்பார்வையில் மீட்பு குழுவினர் கால்வாய் செல்லும் பாதையில் சிறுமியை தேடிச்சென்றனர். மாநகராட்சி துப்புரவு பணியாளர்களும் கால்வாய்க்குள் நடந்து சென்றவாறு தேடினர். ஆனால் சிறுமி பிரியங்கா எந்த பகுதியில் சிக்கினார் என்பது தெரியாததால் மீட்க முடியவில்லை. கால்வாயில் ஆக்கிரமிப்புகள் இருந்த இடம் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டு தேடுதல் பணி நடந்தது.

சிறுமி, தண்ணீருக்குள் இழுத்துச்செல்லப்பட்டு பல மணி நேரம் ஆகிவிட்டதால் அவள் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் கூறினர். நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு தொடங்கிய பணி இன்று காலையிலும் தொடர்ந்து பலமணி நேரத்துக்கு பின்னரும் சிறுமியை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.நேற்று முன்தினம் பிரியங்காவிற்கு பிறந்தநாள். மருத்துவமனையில் உள்ள தேவாலயத்திற்கு சென்று திரும்பியபோதுதான் அவள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டாள். சிகிச்சைக்கு வந்த இடத்தில் மகளை தவற விட்டுவிட்டோமே என அவர்கள் கதறி அழுதபடி உள்ளனர்.

வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் சிறுமி என்ன ஆனாள் என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை. மாநகராட்சி மற்றும் தீயணைப்பு துறை ஊழியர்கள் தொடர்ந்து நம்பிக்கையோடு தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

English summary
The searching operation continues to find the girl who washed away by the sewage water in a rain related incident at Vellore in the state of Tamilnadu, for the 3rd consecutive day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X