மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா விடுதலைக்குத் துணைநிற்போம்… சீமான் உறுதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக பணம் பெற்றார் என குற்றம்சாட்டி, சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லாவிற்கு ஆதரவாக துணை நிற்போம் என சீமான் உறுதி கூறியுள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்துத்துவா வெறியர்களால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கோவை கலவரத்தில் பாதிப்புக்குள்ளான மண்ணின் மக்களுக்காக 1997ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் நிதி திரட்டியபோது சட்டவிதிமுறைகளை மீறி வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவஹிருல்லா அவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனையை அறிவித்திருப்பது பெரும் வருத்தத்தைத் தருகிறது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று இந்தியாவின் அரசியலமைப்புச் சாசனம் கொள்கை வகுத்திருந்தாலும் சட்டமும், நீதியும் எளியவர்களுக்கும், ஏழை மக்களுக்கும் எதிராகவே இருந்து வருவதை அண்மைக்கால நிகழ்வுகளில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடியும். மெரீனாவில் அறவழியில் போராடிய இளையோர் கூட்டத்தைச் சமூக விரோதிகளாகவும், தேசத்துரோகிகளாகவும் சித்தரிக்க முடிந்த ஆட்சியாளர்களுக்கு ஹாவாலா மோசடி வழக்கில் அண்ணன் ஜவஹிருல்லாவைச் சிக்க வைக்க முடியாதா? பின்லேடன் படம் இருந்தது என்ற ஒற்றைக் காரணத்தைக் காட்டியே ஒட்டுமொத்தக் கூட்டத்தையும் பிரிவினைவாதிகள் எனப் பழிசுமத்த முடிந்த ஆளும் வர்க்கத்துக்கு வெளிநாட்டிலிருந்து முறைகேடாகப் பணம் பெற்றதாகக் கூறி ஓர் இயக்கத்தையே முடக்க முடியாதா?

சிக்கித் தவிக்கும் நீதி

சிக்கித் தவிக்கும் நீதி

கூடங்குளத்திலும், கதிராமங்கலத்திலும், நெடுவாசலிலும் போராடிக் கொண்டிருக்கிற மக்களின் போராட்டத்தினை அந்நிய சக்திகள் பணம் கொடுத்துத் தூண்டிவிடுகிறது எனவும், அவர்கள் தேசத்தின் நலனுக்கும், வளர்ச்சிக்கும் எதிரானவர்கள் எனவும் நிலைநிறுத்த முனையும் அரசுகளுக்கு இவ்வழக்கின் போக்கை மாற்றி ஜவஹிருல்லா அந்நிய சக்திகளிடம் பணம் வாங்கிக் கொண்டு செயல்படுகிறார் எனச் சிக்க வைத்து குற்றவாளிகளாகச் சித்தரிக்க முடியாதா? என எழும் கேள்விகளெல்லாம் ஆட்சியாளர்களின் பிடியில் எந்தளவுக்கு நீதியும், நிர்வாகமும் சிக்கிக் கொண்டு தவிக்கிறது என்பதை விளக்குகிறது.

பாஜகவின் கைங்கரியம்

பாஜகவின் கைங்கரியம்

அண்ணன் ஜவஹிருல்லா அவர்களைத் தனிப்பட்ட முறையில் நான் நன்றாய் அறிவேன். மனிதத்தை வலியுறுத்தும் மார்க்கமான இசுலாத்தை முழுமையாகத் தன்னுள் உள்வாங்கிக் கொண்டு ஒரு தலைசிறந்த மானுடச் செயற்பாட்டளராக விளங்கும் அண்ணன் ஜவஹிருல்லா அவர்கள் ஒருபோதும் இந்நாட்டின் சட்டவிதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு, தேசத்தின் நலனுக்கு எதிராகச் செயல்பட மாட்டார் என நான் உறுதியாக நம்புகிறேன். அவர் மீது 2011ல் வழக்கு தொடுக்கப்பட்டு மேல்முறையீடு செய்யப்பட்ட இவ்வழக்கில் தற்போது தண்டனையை உறுதி செய்திருப்பது மத்தியில் ஆளும் பாஜக அரசின் கைங்கரியமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

சதி வலை

சதி வலை

மாற்றுக்கருத்தையும், விமர்சனத்தையும் ஏற்கிற சகிப்புத்தன்மையற்ற பாஜகவானது தனக்கு எதிரானவர்களை ஆட்சி அதிகாரத்தின் மூலம் அடக்கி ஒடுக்கி வருவதை நாடறிந்தது. அந்தவகையில், பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கினை எதிர்த்து தொடர்ந்து கருத்துப்பரப்புரை செய்து பாஜகவின் போலி தேசப்பற்றினைத் தோலுரித்து வரும் அண்ணன் ஜவஹிருல்லாவையும், அவரது இயக்கத்தையும் முடக்கத் திட்டமிட்டு இவ்வழக்கின் மூலம் சதிவலைப் பின்னப்பட்டிருக்கிறது.

உறுதிதுணையாய்..

உறுதிதுணையாய்..

இந்நேரத்தில் அவருக்கு உறுதுணையாய் நின்று அவர் பக்கமுள்ள நீதியை நிலைநாட்டவும் விடுதலை பெற்று வெளியே வரவும் துணைநிற்க வேண்டியது முற்போக்கு சக்திகளின் முழுமுதற் கடமையாகும். ஆகையினால், அண்ணன் ஜவஹிருல்லாவின் விடுதலைக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாய் நிற்கும் என உறுதி கூறுகிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Naam Thamizhar leader Seeman has extended his support to M. H. Jawahirullah, who was sentenced in FCRA violation case.
Please Wait while comments are loading...