ஐபிஎல் பார்க்க வரும் ரசிகர்களை கண்காணிக்க ரகசிய கேமிரா... சென்னை ஸ்டேடியத்தில் சிறப்பு ஏற்பாடு!
சென்னையில் நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டிகைளை காண வரும் ரசிகர்களின் உடை மற்றும் கொண்டு வரும் பதாகைகளை கண்காணிப்பதற்காக சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை : சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் விதமாக சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கருப்பு உடை அணிந்து கொண்டு ரசிகர்கள் யாரேனும் ஸ்டேடியத்திற்குள் புகுந்துவிடாமல் தடுக்க இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நாளை சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையில் நடக்கும் போட்டியில் எந்த அணி வெற்றி பெறப்போகிறது, போட்டி எப்படி இருக்கும் என்பதைத் தாண்டி நாளை சென்னையில் நடைபெறும் போட்டியால் என்ன பிரச்னை நடைபெறப் போகிறது என்ற பீதி தான் அதிக அளவில் இருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தங்களது உரிமைகளை மீட்டெடுப்பதற்காக இளைஞர்கள் போராட்ட களமிறங்கியுள்ளனர் இந்த நேரத்தில் ஐபிஎல் போட்டி நடந்தால் கவனம் திசை திரும்பி விடும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், அமமுக துணைபொதுச்செயலாளர் தினகரன், தமிழ் திரைப்பட இயக்குநர்கள் என ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட் வாரியம் உறுதி
தமிழகம் இப்போது இருக்கும் நிலையில் சென்னையில் ஐபிஎல் விளையாட்டு தேவைதானா என்பதை பார்க்க வேண்டும் என்று இதர அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர். ஆனால் திட்டமிட்டபடி சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது.

ரஜினியின் யோசனை
ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் மைதானத்தை முற்றுகையிடுவோம், வீரர்களை சிறைபிடிப்போம் என்று தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கூறியுள்ளார். ஐபிஎல் போட்டி நடக்கவில்லை என்றால் நல்லது, அப்படி நடக்கும் பட்சத்தில் கிரிக்கெட் வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும் என்றும் தமிழக ரசிகர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு கிரிக்கெட் பார்க்கச் சென்று தேசிய கவனத்தை ஈர்க்கலாம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு
எதிர்ப்புகள் பல இருந்தாலும் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்களை நடத்த சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிரிக்கெட் வீரர்கள் தங்கி இருக்கும் ஓட்டல் மற்றும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் என மொத்தம் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ரகசிய கண்காணிப்பு கேமராக்கள்
இதனிடையே மைதானத்திற்கு கிரிக்கெட் பார்க்க வரும் ரசிகர்களை கண்காணிக்க நுழைவுவாயில்களில் ரகசிய கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் கருப்பு சட்டை அணிந்து வருகின்றனரா, கருப்பு பேட்ஜ் அணிந்திருக்கின்றனரா, கையில் என்னென்ன பொருட்கள் எடுத்து வருகின்றனர் என்பதை கண்காணிப்பதற்காக இந்த ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications