விவாதத்திற்கு ஸ்டாலின் ரெடி, ஜெயலலிதா ரெடியா?: நடிகை குஷ்பு
சென்னை: திமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள் குறித்து விவாதிக்க மு.க. ஸ்டாலின் தயாராக உள்ளார். ஆனால் அதிமுக ஆட்சியின் சாதனைகள் குறித்து விவாதிக்க தயாராக உள்ளார்களா? என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் தமிழகத்தை மின் தடை இல்லா மாநிலமாக்குவோம் என்று ஜெயலலிதா எந்த தைரியத்தில் கூறினார் என்று அவர் மேலும் கேட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுகவுக்காக நடிகை குஷ்பு தீயாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மக்களிடையே வாக்கு சேகரித்தார்.
தாம்பரம் சண்முகம் சாலையில் பேசிய அவர் கூறுகையில்,

திட்டங்கள்
தமிழக மக்களுக்காக அதிமுக அரசு எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. மாறாக அதிமுக அரசு செய்த ஒரே வேலை திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தியது தான்.

கூட்டம்
அதிமுகவின் பிரச்சாரத்திற்கு வரும் கூட்டம் அவர்களால் கூட்டப்படுகிறது. ஆனால் திமுக பிரச்சாரங்களில் கருணாநிதி மற்றும் ஸ்டாலினுக்காக கூட்டம் கூடுகிறது.

விவாதம்
திமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள் குறித்து விவாதிக்க மு.க. ஸ்டாலின் தயாராக உள்ளார். ஆனால் அதிமுக ஆட்சியின் சாதனைகள் குறித்து விவாதிக்க தயாராக உள்ளார்களா?. ரூ. 46 ஆயிரம் கோடிக்கு தொழிற்சாலைகளை தமிழகத்திற்கு கொண்டு வந்தது திமுக ஆட்சியில் தான். ஐ.டி. நிறுவனங்கள் தமிழகத்திற்கு வர கருணாநிதி தான் காரணம்.

கொலை, கொள்ளை
தமிழகத்தில் கொலை, கொள்ளைகள், கற்பழிப்பு தான் நடக்கிறது. மக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்ல அஞ்சுகிறார்கள். வெளியே சென்றால் யார் வந்து கொள்ளையடிப்பார்களோ என்ற பயம் அவர்களுக்கு. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது.

மின்வெட்டு
ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் தமிழகத்தை மின் தடை இல்லா மாநிலமாக்குவோம் என்று ஜெயலலிதா எந்த தைரியத்தில் கூறினார். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மின்திட்டங்களை செயல்படுத்தினாலே மின்தட்டுப்பாடு இருக்காது.

தண்ணீர்
தண்ணீர் இல்லை என்று கூறி அதை ரூ.10க்கு பாட்டிலில் விற்கிறார்கள். அந்த தண்ணீரை இலவசமாக கொடுக்கலாமே. தண்ணீரில் கூட லாபம் பார்க்கிறீர்கள்.

விலைவாசி
திமுக ஆட்சியில் ரூ.3 ஆயிரம் மாத செலவில் குடும்பம் நடத்தினார்கள். தற்போது அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்வால் ரூ.6 ஆயிரம் இருந்தாலும் குடும்பம் நடத்த முடியவில்லை.

தேர்தல்
அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம். சட்டசபை தேர்தலில் ஏமாந்தது போன்று நாடாளுமன்ற தேர்தலில் ஏமாந்து விடாதீர்கள் என்றார் குஷ்பு.












Click it and Unblock the Notifications