அதிமுக ஒரு "கபட நாடகக் கம்பெனி" என்பதை நிரூபிக்கிறது நாடாளுமன்றக் காட்சிகள்... ஸ்டாலின்
சென்னை: டெல்லி நாடாளுமன்றத்தில் நடைபெறும் காட்சிகளைப் பார்த்தால், அதிமுக ஒரு கபட நாடக கம்பெனி என்பதையே வெளிப்படுத்துவதாக உள்ளது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஏர்செல் மேக்ஸிஸ் விவகாரத்தை வைத்து நாடாளுமன்றத்தை 2 நாட்களாக ஸ்தம்பிக்க வைத்து வருகிறது அதிமுக. இதற்கு பாஜகதான் பின்னணியில் இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரைக் குறி வைத்து தொடர்ந்து நாடாளுமன்றத்தை உலுக்கி வருகிறது அதிமுக. இந்த நிலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஒரு பதிவை தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ளார். அது...

விந்தையிலும் விந்தை
அதிமுக எம்.பி.க்கள் 49 பேரும் லோக்சபாவையும், ராஜ்யசபாவையும் நடக்க விடாமல் முடக்கியிருப்பது விந்தையிலும் விந்தையாக இருக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சிகளை பேச விட மாட்டார்கள். "அம்மா புராணம்" தவிர வேறு விவாதங்களுக்கு சட்டமன்றத்தில் இடமிருந்தது இல்லை. 110 விதியின் கீழான அறிவிப்புகளின் போது கூட அம்மா புராணம் பாடவும், ஆளுங்கட்சிக்கு துதி பாடவும் மட்டுமே சட்டமன்றத்தில் கருத்துச் சுதந்திரம் அனுமதிக்கப்பட்டது.

முடக்கியது எதற்காக?
மக்கள் பிரச்சினைகள் பற்றியோ, ஆக்கபூர்வமான மக்கள் நலத் திட்டங்கள் பற்றியோ பேச எழுந்தாலே உறுப்பினர்களை "குண்டுக் கட்டாகத் தூக்கி" வெளியில் போடும் கலாச்சாரத்தை கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் கடந்த ஐந்து வருடத்தில் புகுத்திய கட்சி அதிமுக. அந்தக் கட்சி இப்போது பாராளுமன்றத்தை முடக்கியது எதற்காக?

அதற்காக போராடவில்லை
தமிழகத்திற்கு தேவையான பல்வேறு திட்டங்கள் இன்னும் மத்திய அரசிடமிருந்து கிடைக்கவில்லை. அதற்காக போராடவில்லை. குடிநீர் தேவைக்காக உருவாக்கப்பட்ட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. கொங்கு மண்டல மக்களின் நீர் ஆதாரத்திற்கும், பாசனத்திற்கும் தேவைப்படும் அவினாசி அத்திக்கடவு திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. இதற்காக எல்லாம் போராடவில்லை. தமிழகத்திற்கு தேவையான ரயில்வே திட்டங்கள் ஏதும் கிடைக்கவில்லை. இந்த நிதி நிலை அறிக்கையில் கூட தமிழகத்திற்கு சிறப்பு நிதி ஏதும் ஒதுக்கவில்லை.

மழை வெள்ள நிதிக்காகப் போராடவில்லை
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்வாதாரத்தையும், விவசாயத்தையும் இழந்து நிற்கும் மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் கேட்கப்பட்ட 25000 கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கவில்லை. அதற்காக போராடவில்லை. தென் மாவட்ட மக்களின் உணர்வுடன் ஒன்றிவிட்ட ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ஜெயலலிதா வைத்த கோரிக்கை நிறைவேறவில்லை.

மீனவர்களுக்காகப் போராடவில்லை
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது நிரந்தரமாகி விட்டது. அதை மத்திய அரசு முற்றிலும் தடுத்து நிறுத்தவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட மீனவர்களின் படகுகளை கூட இலங்கை அரசிடமிருந்து இதுவரை மீட்க முடியவில்லை. காவிரி டெல்டா விவசாயிகளுக்குரிய பாசன நீர் கிடைப்பதற்கு வசதியாக காவிரி இறுதி தீர்ப்பின் படி "காவிரி மேலாண்மை வாரியம்" இதுவரை மத்திய அரசு அமைக்கவில்லை. இந்த பிரச்சினைகள் எல்லாம் தமிழகத்தின்- தமிழக மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள்! இவற்றுக்காக எல்லாம் போராடவில்லை. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுகவின் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பேசவும் இல்லை. இப்போது அவைகளை முடக்கவது போன்ற செயல்களில் ஈடுபடவும் இல்லை.

சுயநலத்துக்காக
தன் சுய நலத்திற்காக தன் 48 எம்.பி.க்களை முதல்வர் ஜெயலலிதா அடகு வைத்து விட்டார் என்று கடலூரில் நடைபெற்ற "நீதி கேட்கும் பேரணியில்" பேசினேன். அதன் பிறகு "சுயநலத்திற்காக தமிழக நலன்களை விட்டுக் கொடுத்து விட்டார் ஜெயலலிதா" என்று நான் தொடர்ந்து பேசி வருகிறேன். "நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய 37 எம்.பி.க்களும், ராஜ்ய சபை எம்.பி.க்களும் டெல்லியில் என்ன செய்கிறார்கள்" என்று தமிழக மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டார்கள். தமிழக நலன்களில் அக்கறை செலுத்தாமல், தமிழகத்தின் வளர்ச்சித் திட்டத்திற்கு மத்திய அரசிடமிருந்து ஒரு துரும்பைக் கூட பெற முடியாத நிலையில் அதிமுக எம்.பி.க்கள் "டெல்லி சுற்றுலா" மட்டும் சென்று திரும்புகிறார்கள் என்று தமிழகத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களும் எண்ணுகிறார்கள்.

தோல்வியை மறைக்கவே
அதிமுகவின் இந்த மிகப்பெரிய தோல்வியை மறைக்கவே இப்படி திடீரென்று ஆட்சியிலிருந்து வெளியேறுகின்ற நேரத்தில் பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கியிருக்கிறார்கள் அதிமுக எம்.பி.க்கள். ஏதோ தாங்கள் செயல்படுகிறோம் என்று மக்களுக்கு காட்டி விடலாம் என்று அதிமுக எம்.பி.க்களும், முதலமைச்சர் ஜெயலலிதாவும் "ஆகாயக் கோட்டை" கட்டுகிறார்கள்.

நாடக கம்பெனியா இது!
ஆனால் 37 எம்.பி.க்களையும் முதலமைச்சர் ஜெயலலிதா தன் சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்துகிறார் இந்த பாராளுமன்ற முடக்கம் மூலம் இப்போது வெளிவந்து விட்டது. மாநிலத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பேசாத அதிமுகவிற்கு மக்கள் அடுத்த பாராளுமன்றத் தேர்தல் வரும் வரை காத்திருக்கப் போவதில்லை. வரப் போகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலிலேயே அதிமுகவுக்கு தக்க பதிலடி கொடுக்க மக்கள் காத்திருக்கிறார்கள். ஆட்சி போகும் நேரத்தில் இப்படி மக்களுக்காக பாடுபடுவது போல் செயின்சார்ஜ் கோட்டையிலும், டெல்லி பாராளுமன்றத்திலும் நடத்தும் காட்சிகள் "அதிமுகவே ஒரு கபட நாடக கம்பெனி" என்பதைத் தான் வெளிப்படுத்துகிறது என்பதை முதல்வர் ஜெயலலிதா புரிந்து கொள்வார் என்று எண்ணுகிறேன் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications