For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேவை மதுவிற்கு எதிரான மாணவப் போர்!

Google Oneindia Tamil News

-ஆர் அபுல் ஹசன்

சம்பவம் 1:

இடம் - கோவை பேருந்து நிலையம். உடைகள் களைந்த நிலையில் நீண்ட நேரமாக மயங்கிக் கிடந்த ஒருவரை அங்கிருந்தவர்கள் அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் சேர்க்கின்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அதீத குடிப்பழக்கத்தால் அவர் மரணமடைந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு வயது 28.

சம்பவம் 2:

இடம் - சென்னை கூவம் குடியிருப்பு. நள்ளிரவில் திடீரென்று ஒரு இளைஞர் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து கூவத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கண்களில் கண்ணீருடனும், கைகளில் இரண்டு குழந்தைகளுடனும் நிற்கும் அவரது 21 வயது மனைவி தொடர்ச்சியான குடிப்பழக்கத்தால் தனது கணவர் ஒருவித மனநோய்க்கு ஆளாகி விட்டதாக தெரிவித்தார்.

சம்பவம் 3:

இடம் - மேடவாக்கம். ஒரு டாஸ்மாக் வாசலில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரை இரண்டு புறமும் இரண்டு பெண்கள், ஒரு பெண்ணிற்கு 18 வயதிருக்கும், இன்னொரு பெண்ணிற்கு 10 வயதிருக்கும். சிறு வயதில் தங்களை தோள்களில் சுமந்ததற்கு நன்றிக்கடனாக தற்போது அவரை தங்கள் தோள்களில் சுமந்து சென்றனர்.

தமிழகம் முழுவதும் தினம் தினம் அரங்கேறும் காட்சிகளில் இவை சிறிய உதாரணங்களே! காலை 10 மணிக்கு டாஸ்மாக் திறக்கப்பட்டதிலிருந்து இர்வு 10 மணி வரை அடைக்கப்படும் வரை வருமானம் இழக்கும், மானம் இழக்கும், உயிரை இழக்கும் குடிமகன்கள் லட்சோப லட்சம்..ஆனால் அரசுக்கோ வருமானம் கோடிகளில்!

15 வயது முதல் 80 வயது வரை

15 வயது முதல் 80 வயது வரை

15 வயது சிறுவன் முதல் 80 வயது இளைஞர்கள் வரை, கல்லூரிப் பெண்கள் வரை இந்த மது அரக்கனிற்கு அடிமையாகி வாழ்வை சீரழித்து வரும் இதே தமிழகத்தில் தான் விழாக்காலங்களில் மது விற்பனைக்க் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வரும் அசுரத்தனமும் அரங்கேறி வருகின்றது. குடி குடியைக் கெடுக்கும் என்று சின்னதாய் போட்டுவிட்டு, தடுக்கி விழுந்தால் தட்டுப்படும் டாஸ்மாக் மதுக்கடைகளால் விளையும் கேடுகள் எத்தனை எத்தனை?

தன்னிலை மறந்து.. மனிதம் இறந்து

தன்னிலை மறந்து.. மனிதம் இறந்து

மது போதை தலைக்கேறிவிட்டால் தன்னிலை மறந்து, தன்மானம் பறந்து, மனிதம் இறந்து போகின்றது. தாயோ, தமக்கையோ தன் காமத்தாகம் தீர்க்கும் தடாகமாகவே பார்க்க வைக்கின்றது. உடுக்கை இழந்தாலும் அதனை தடுக்க இயலாமல் போகின்றது. குடிநீரும், சிறுநீரும் சுவை ஒன்றாகத் தெரிகின்றது. பெற்றெடுத்த பிள்ளையையும் விற்றுக் குடிக்க மனம் துணிந்து விடுகின்றது.

மதுக் கொடூரம்

மதுக் கொடூரம்

தமிழகத்தில் நிகழும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மது அருந்திவிட்டுதான் அக்கொடூர செயல்களில் ஈடுபடுகின்றனர். விபத்தினால் ஏற்படும் மரணங்களில் பெரும்பாலானவை குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால்தான் நடைபெறுகின்றன. மேலும் சாலைகளில் உடைகள் களைந்த நிலையில் நினைவின்றி கிடப்பது, மனநிலை பாதிக்கப்படுவது, மன அழுத்தம், உடல் ஊனம் அடைவது, தினம் தினம் வீடுகளில் மனைவி, மக்களை துன்புறுத்துவது என்று மரணத்தை விட கொடிய பாதிப்புகள் இந்த பாழாய்ப் போன மதுவால் எங்கும் வியாபித்திருக்கின்றது.

பள்ளிகள், கோவில்களுக்கு அருகே பார்கள்

பள்ளிகள், கோவில்களுக்கு அருகே பார்கள்

"ஆயிரம் கோயில்களைக் கட்டுவதை விட சிறந்தது ஓர் பள்ளிக்கூடம் அமைப்பது" என்றார் பாரதியார். ஆனால் கோயில்கள், பள்ளிக்கூடங்களுக்கு அருகாமையில் மதுக்கடைகளை அமைத்திருக்கின்றது அரசு. டாஸ்மாக் இருக்கும் இடங்களைச் சுற்றிலும் பார்க்க சகிக்காத காட்சிகள். அந்த வழியாக நடக்க முடியாதபடி மது வாசனை காற்றில் கலந்து, வயிற்றைக் குடைந்து கொண்டு வருவதும், கை அனிச்சையாக மூக்கைப் பிடிப்பதும், வாயிலிருந்து வரும் வார்த்தைகள் அரசையும், அவர்களையும் திட்டுவதும் வாடிக்கையாகிப் போய்விட்ட ஒன்று. நீங்கள் வேண்டுமானால் பார்க் ரயில் நிலையம் வெளியில், ரிப்பன் மாளிகைக்கு எதிரில் சென்று பாருங்கள். உங்களால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

குடித்துக் கெடுக்கும் நாயகர்கள்

குடித்துக் கெடுக்கும் நாயகர்கள்

சமூகத் தீமைகளை சுட்டிக் காட்ட வேண்டிய திரைப்படங்களிலோ கதாநாயகர்களே மது குடிக்கும் அவல, அரங்கேறுகிறது. "வானம், பூமி சிறிசு..பாருதாண்டா பெரிசு" என்று கதாநாயகன் பாடுவது போல காட்சி வைக்கப்படுகின்றது. டாஸ்மாக் காட்சிகள் இடம்பெறாத திரைப்படங்களே இல்லை என்கிற நிலைதான் உள்ளது. விமர்சிக்கும் ஒரு சில காட்சிகளும் கூட குடித்துவிட்டு உளருவதாகவே உள்ளது.

50 மீட்டருக்கு ஒரு டாஸ்மாக்

50 மீட்டருக்கு ஒரு டாஸ்மாக்

"கோயம்பேட்டுல வந்து இறங்குனா மூத்தரம் போறதுக்கு இடம் இல்ல..ஆனா 50 மீட்டருக்கு ஒரு டாஸ்மாக்" போன்ற சில விமர்சனங்கள் ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும் இவை போதாது. மதுவிலக்கு வேண்டி தன் பனைமரத்தோப்பையே வெட்டி வீழ்த்தியவர் தந்தை பெரியார். ஆனால் அவரது பேரைச் சொல்லி ஆட்சி செய்து வருபவர்கள் தாலிக்கு தங்கம் கொடுத்து, மதுக்கடைகள் மூலம் பல இளம்பெண்களின் தாலி அறுக்கும் செயலில் ஈடுபடுவது வேதனைக்குரிய முரண்பாடாகும்.

மதுக் கோப்பைகளை ஏந்தும் சிறார்கள்

மதுக் கோப்பைகளை ஏந்தும் சிறார்கள்

காந்தியின் தேசத்தில் மதுக் கோப்பைகளை கையில் ஏந்தும் பள்ளிச் சிறார்கள். பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இன்று மதுக்கடை வரிசைகளில். வாழ்வை மறந்து சாவை நோக்கி செல்லும் குடிமக்கள்.தடுக்க வேண்டிய அரசோ தாராளமாய் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

மதுவுக்கு எதிராக தேவை ஒரு போர்

மதுவுக்கு எதிராக தேவை ஒரு போர்

இன்றைய சூழலில் மதுவிற்கு எதிரான ஒரு போர் தேவைப்படுகின்றது. ஆனால் அது சசிபெருமாளிடமிருந்தோ, தமிழருவி மணியனிடமிருந்தோ அல்ல. அது ஊற்றெடுக்க வேண்டிய இடம் பள்ளிகள். (போர்க்)களங்களாக அமைய வேண்டிய இடம் கல்லூரிகள். பள்ளி, கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் களத்தில் புகுந்ததால்தான் இந்திய சுதந்திர போராட்ட களம் சூடுபிடித்தது.மாணவர்கள் இறங்கியதா தான் திராவிடம் அரியணையில் ஏறியது. மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்ததால்தான் ஈழப்படுகொலைகளை உலகம் அங்கீகரித்தது.

மதுவை ஒழிப்போம்.. மாணவர் சக்தி கொண்டு

மதுவை ஒழிப்போம்.. மாணவர் சக்தி கொண்டு

எல்லாத் தீமைகளுக்கும் தாயாக விளங்கும் இந்த கொலைகார மதுவின் தாகம் தணிவதற்கும், பல நூறு குடும்பங்களின் சோகம் முடிவதற்கும், தமிழகத்தை சூழ்ந்திருக்கும் இருள் விடிவதற்கும் ஒரே ஆயுதம் மாணவ சக்திதான். மாணவர்கள் கண் விழித்தால்தான் இந்த மது அரக்கனின் கண்களை நிரந்தரமாக மூட முடியும்!

English summary
Tamil Nadu needs a students war against liquor menace which is eroding the Tamil society.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X