ரம்ஜானை அமைதியாகக் கொண்டாடப் போகிறோம்.. சுவாதி நண்பர் பிலால் உறவினர்கள்
சென்னை: சுவாதியுடன் கல்லூரியில் சேர்ந்து படித்து, அவருக்குக் கடைசி வரை நல்ல நண்பராக இருந்து வந்த முகம்மது பிலால் சித்திக், இடையில் ஒய்.ஜி.மகேந்திரன் புண்ணியத்தால் கொலையாளி பட்டத்தை சுமக்க நேரி்ட்டது. தற்போது சுவாதியைக் கொலை செய்த ராம்குமார் பிடிபட்டு விட்டதால் முகம்மது பிலால் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.
இந்த முறை ரம்ஜானை நாங்கள் வழக்கம் போல கொண்டாடாமல் அமைதியான முறையில் கொண்டாடவுள்ளோம். சுவாதி குடும்பத்தினரின் துக்கத்தை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம் என்றும் பிலாலின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

சுவாதியுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர் பிலால். இருவரும் நல்ல நண்பர்களாகப் பழகி வந்தனர். பிலாலை, சுவாதி குடும்பத்தினருக்கும் நன்றாகத் தெரியுமாம். இந்த நிலையில்தான் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். அதேசமயம், பேஸ்புக்கில் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் ஒரு பரபரப்பான பதிவைப் போட்டார். பிலால் மாலிக் என்பவரால் சுவாதி படுகொலை செய்யப்பட்டதாக அதில் கூறியிருந்தார் மகேந்திரன். இது பெரும் புயலைக் கிளப்பியது.
அப்போது யாருக்குமே பிலால் என்ற பெயரில் சுவாதிக்கு நண்பர் இருந்தது தெரியாது. ஆனால் மகேந்திரன் போட்ட பதிவால் பிலால்மாலிக் என்பவர்தான் கொலையாளி போல என்ற கருத்து காட்டுத் தீயாக பரவி விட்டது. போலீஸ் தரப்பிலும் இதுகுறித்து விசாரித்தபோது பிலால் என்ற பெயரில் சுவாதிக்கு நண்பர் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பிலாலை விசாரணைக்குட்படுத்தினர். அவர் மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினரையும் போலீஸார் விசாரித்தனர். பிலால் தனது குடும்பத்துடன் திருவல்லிக்கேணியில் வசித்து வருகிறார்.
சுவாதி படுகொலையால் நிலை குலைந்து போயிருந்த பிலால் அந்த துயரத்திலிருந்து சுதாரித்து போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். தனக்குத் தெரிந்த பல தகவல்களைத் தெரிவித்தார். போலீஸ் விசாரணைக்கும் பிலாலும், அவரது குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். இதனால் போலீஸாருக்கு பிலால் மீது இருந்த சந்தேகப் பார்வை விலகியது. ஒய்.ஜி.மகேந்திரன் போட்ட பதிவு வெறும் வதந்தியே என்றும் போலீஸார் உணர்ந்தனர்.
இந்த நிலையில்தான் ராம்குமார் சிக்கினார். அவர் கைது செய்யப்பட்ட பிறகுதான் பிலால் சற்று நிம்மதி அடைந்தாராம். சுவாதி படுகொலையான நாள் முதல் அவர் பெரும் சோகத்தில் இருந்தார். அவரது வீட்டிலும் ரம்ஜான் களை இழந்து காணப்பட்டது. தற்போது கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பிலால் குடும்பத்தினர் இயல்பு நிலைக்கு வந்துள்ளனர்.
இதுகுறித்து பிலாலின் உறவினர் ஒருவர் கூறுகையில் பிலால் தற்போது இயல்பு நிலைக்கு வந்துள்ளார். அவரும், சுவாதியும் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்ததாக வந்த செய்திகள் வெறும் வதந்தியே. இருவரும் கல்லூரியில் படித்தது முதலே நல்ல நண்பர்கள். இந்த முறை எங்களது வீட்டில் அமைதியான முறையில் ரம்ஜான் கொண்டாடப்படும். சுவாதி குடும்பத்தினின் துக்கத்தை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம் என்றார்.
பிலால் சிவில் என்ஜீனியரிங் படித்துள்ளார். துயரத்திலிருந்து மீண்டு வரும் அவர் விரைவில் தனது துறையில் கவனம் செலுத்துவார் என்று அவரது குடும்பத்தாரும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications