"தலை தப்பினால் போதும்னு தப்பி ஓடும்போது.." விஜய் பேச பேச விழுந்து விழுந்து சிரித்த சபாநாயகர்
சென்னை: சபாநாயகரை அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் கையை பிடித்து அழைத்து வந்து ஏன் அமர வைக்கிறார்கள் என்பது குறித்து முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கமளித்தார்.
சட்டசபை சபாநாயகராக ஆயிரம் விளக்கு தொகுதியின் தவெக எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். அது போல் துணைத் தலைவராக ரவிசங்கரும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து இன்று சட்டசபை கூடியதும், இதற்கான அறிவிப்பை தற்காலிக சபாநாயகர் கருப்பையா அறிவித்தார். பின்னர் ஜேசிடி பிரபாகரை அவை முன்னவர் செங்கோட்டையனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் அவரது கைகளை பிடித்து அழைத்து வந்து அமரவைத்தனர்.
இதையடுத்து கட்சியினர் ஒவ்வொருவரும் சபாநாயகரையும் துணை சபாநாயகரையும் வாழ்த்தி பேசினர். பெரும்பாலானோர் எதிர்க்கட்சியினர் பேச வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
அது போல் பலர் 717 மதுக்கடைகள் மூடப்பட்டது குறித்து முதல்வர் விஜய்க்கு வாழ்த்து கூறினர். இதையடுத்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவருக்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசி கலகலப்பாக்கினார். அவர் பேசுகையில் "சபாநாயகர், நான், முதல்வர் ஆகியோர் ஒரே கல்லூரியில் (லயோலா) படித்தவர்கள், ஆனால் அரசியல் என வரும் போது அவர்கள் இருவரைவிட திராவிட கட்சியான நாங்கள்தான் சீனியர்" என உதயநிதி பேசியிருந்தார்
இதைத் தொடர்ந்து, சபாநாயகரை வாழ்த்தி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக விஜய் பேசுகையில், சட்டசபையில் உள்ள அனைவரும் சமம். ஜனநாயகத்தின் முறைபடி பேரவை செயல்படும். பேரவைத் தலைவரை அவை முன்னவரும் எதிர்க்கட்சித் தலைவரும் கையை பிடித்து அழைத்து வருவதன் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது.
இங்கிலாந்தில் மன்னராட்சி இருந்த காலத்திலேயே நாடாளுமன்றம் செயல்பட்டது. மன்னர் ஒரு பணியை செய்ய வேண்டும் என விரும்பினால் அதை நாடாளுமன்றம் நிராகரிக்கும். நாடாளுமன்றம் நிராகரித்ததை மன்னரிடம் சொல்ல வேண்டியவர் சபாநாயகர். அதற்கு துணிவு வேண்டும்.
சில பணிகளை செய்ய நாடாளுமன்றத்தின் அனுமதி வேண்டுமே தவிர, மரண தண்டனை அளிக்கும் முடிவு மன்னருக்கு உண்டு. தான் விரும்பியதை நாடாளுமன்றம் நிராகரித்ததை சொல்லும் சபாநாயகருக்கு, மன்னர் மரண தண்டனை விதிப்பார்.
சபாநாயகரின் தலையை வெட்டி விடுவதால் யாருமே அந்த பதவிக்கு வரமாட்டார்கள். நாடாளுமன்றத்தில் புதிய ஆட்சி அமையும் போது சபாநாயகர் அறிவிக்கப்பட்டால், அவர் தலை தப்பினால் போதும் என ஓட்டம் பிடித்துவிடுவார். அப்போது அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் அவரை தடுத்து நிறுத்தி கையை பிடித்து இழுத்து வந்து அமர வைப்பார்ரகள். இதுதான் அந்த காலத்தில் இருந்த மரபு. ஜனநாயக முறையிலும் அந்த மரபு தொடர்கிறது.
ஜனநாயகத்தின் இதயமாக இந்த பேரவை செயல்பட வேண்டும். மக்களே மக்களுக்காக நடத்தும் ஆட்சி மக்களாட்சி என ஆபிரஹாம் லிங்கன் தெரிவித்துள்ளார். தவெக உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகருக்கு உதவியாக செயல்படுவார்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை செயல்படுத்தும் திட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு பேரவைக்கு உள்ளது. அதிகமான மக்கள் இந்த ஆட்சியில் நன்மை பெற்றுள்ளார்கள் என சொல்லும் வகையில் செயல்பாடு இருக்க வேண்டும். இவ்வாறு விஜய் பேசினார். சபாநாயகருக்கு மரண தண்டனை குறித்து விஜய் பேச பேச, சபாநாயகர் பிரபாகர் விழுந்து விழுந்து சிரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications