பெண்கள் காப்பகம், விடுதிகளுக்கு 37 புதிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள்... தமிழக அரசு அதிரடி
சென்னை: தமிழகத்தில் பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், பணிபுரியும் மகளிர் ஆகியோர்களின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் வகையில் விடுதிகள் மறறும் காப்பகங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
சர்வதேச அளவில், இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு என்பது விமர்சனத்துக்குரிய ஒன்றாக உள்ளது. அதற்குத் தகுந்தாற்போல், சமீபகாலமாக இந்தியாவில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. பாலியல் குற்றவாளிகளுக்கான தண்டனைகளை மத்திய அரசு அதிகரித்துள்ள போதும், குற்றங்கள் தொடரவே செய்கின்றன.
இத்தகைய குற்றங்களுக்கான முக்கியக் காரணம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாதது தான் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் கூட தமிழக விடுதி ஒன்றில் சிறுமிகள் இருவர் கோடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டனர்.
எனவே, பெண்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கும் விடுதிகள் மற்றும் காப்பகங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது தமிழக அரசு.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆலோசனை:
பொள்ளாச்சியில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடனும், அரசு உயர் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினேன்.

இழப்பீடு...
இழப்பீடு...
எனது தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், விடுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த வழிகாட்டி நெறிகளை வகுக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டதோடு, பாதிக்கப்பட்ட மாணவியருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறும்; சிகிச்சைக்குப் பின் அவர்களை அரசு இல்லத்தில் சேர்க்குமாறும்; பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டுத் திட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட இரு மாணவிகளுக்கு தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டேன்.

ஆய்வுக் கூட்டம்...
இதனைத் தொடர்ந்து, எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் இது குறித்து இன்று (26.6.2014) மீண்டும் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் விடுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த வழிகாட்டி நெறிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

பாதுகாப்பு...
இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான விவாதத்திற்குப் பின், வீட்டை விட்டு வெளியில் தங்கியுள்ள மாணவிகள், பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், பணிபுரியும் மகளிர் ஆகியோர்களின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் வகையில், கீழ்க்காணும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.

பாதுகாப்பு நடைமுறைகள்...
பொதுவாக, வீட்டை விட்டு வெளியே தங்கும் பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்கள், சிறார் இல்லங்கள், மாணவியர் விடுதிகள், பணிபுரியும் பெண்கள் விடுதிகள் ஆகியவற்றில் தங்குகின்றனர். மேற்கண்ட அமைப்புகள் பொதுவாக அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சங்கங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள், நிறுவனங்கள் / தொழிற்சாலைகள் தனியார் மற்றும் தனி நபர் ஆகியோரால் நடத்தப்பட்டு வருகின்றன. பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்கள் விடுதி/இல்லங்களை நடத்தும் நிறுவனங்கள் கீழ்க்காணும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உடனடியாக உட்படுத்தப்படும்.

உள்கட்டமைப்பு வசதிகள்...
1. கட்டடங்களுக்கான அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து உரிய அதிகாரியால் ஒப்பளிக்கப்பட்ட கட்டடங்களில் மட்டுமே விடுதி / காப்பகம் / அமைவிடம் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் விடுதி / காப்பகம் / அமைவிடம் போதிய பாதுகாப்பு மற்றும் உரிய தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடியதாக இருக்க வேண்டும்.

தனித்தனிக் கட்டிடங்கள்...
2. ஆண் / பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் அமைவிடமாக இருப்பின் மாணவர்களுக்கு என தனியாகவும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு என தனியாகவும் கட்டடங்கள் அமையப் பெற வேண்டும்.

தனித்தனி அறைகள்...
3. ஆண்/ பெண் குழந்தைகள் தங்கும் அமைவிடமாக இருப்பின் மாணவர்களுக்கு என தனியாகவும் பெண் குழந்தைகளுக்கு என தனியாகவும் கட்டடங்கள் அமையப் பெற வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களினால் மாணவர் மற்றும் மாணவியர் ஒரே கட்டடத்தில் தங்க நேரிடின், தனித்தனியான அறைகளில் தங்க வைக்கப்படவேண்டும்.

விடுதி காப்பாளர்...
4. வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்களுக்கான விடுதி / காப்பகம் / அமைவிடங்களில் விடுதிக் காப்பாளர் / பொறுப்பாளர்களாக பெண்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.
5. 50 குழந்தைகளுக்கு ஒரு விடுதிக் காப்பாளர் இருக்க வேண்டும்.

பாதுகாவலர்கள்...
6. விடுதிகளில் தங்கும் நபர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி தேவைக்கேற்ப 24 மணி நேரமும் பணியில் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
7. ஒன்றுக்கு மேற்பட்ட வாயில்கள் இருந்தால் அனைத்து வாயில்களிலும் பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
8. 50க்கு மேற்பட்டோர் இருக்கும் இல்லங்களில் / தங்குமிடங்களின் வாயில்களில் சுழலும் கேமரா, டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் பொருத்தப்படவேண்டும்.

24 மணி நேர பாதுகாப்பு...
9. விடுதிக் காப்பாளர் / பாதுகாவலர், முன் அனுமதி பெறாமலோ மாற்று ஏற்பாடு செய்யாமலோ பணிக்கு வராமல் இருக்கக் கூடாது. இவர்கள் பணிக்கு வராத நேரத்தில் உரிய பொறுப்புள்ள ஆட்களை நியமிப்பதை சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். விடுதி காப்பாளர் அல்லது துணை விடுதி காப்பாளர் எந்த ஒரு நேரத்திலும் விடுதியில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

நுழைவாயின் அருகே...
10. மேற்கண்ட அமைவிடங்களில் உள்ள பாதுகாவலர்கள் அவசர காரணமேதுமின்றி குழந்தைகள், வளர் இளம் பெண்கள், பெண்கள் தங்கியுள்ள விடுதி கட்டடங்களுக்குள் அனுமதிக்கப்படக் கூடாது. நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள அவர்களுக்கென அமைக்கப்பட்ட அறைகளில் மட்டுமே இருக்க வேண்டும்.

தினசரி வருகைப் பதிவேடு...
11. அமைவிடங்கள் நான்குபுற சுற்றுச் சுவர்களுக்குட்பட்டு இருக்க வேண்டும். மேலும் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வாயில்களில் தாழ்ப்பாளுடன் கூடிய கதவுகள் அமைக்கப்பட வேண்டும்.
12. விடுதியில் தங்கியிருப்பவர்கள், அவர்கள் விடுதியை விட்டு வெளியில் செல்லும் நேரம், விடுதிக்கு திரும்பும் நேரம் ஆகியவற்றை தினசரி வருகைப் பதிவேட்டில் விடுதி காப்பாளர் பதிவு செய்ய வேண்டும். மேலும் விடுதியில் தங்கியிருப்பவர்கள் அவர்கள் தூங்கச் செல்வதற்கு முன்பு கணக்கெடுக்கப்பட வேண்டும்.

பார்வையாளர்கள்...
13. தங்கியிருப்பவர்களைச் சந்திக்க பார்வையாளர்களாக அவர்களுடைய பெற்றோர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
14. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வரவேற்பறையில் மட்டுமே பார்வையாளர்களை பாதுகாப்பாளர்களின் கண்காணிப்பில் அனுமதிக்க வேண்டும்.
15. வெளி நபர்கள் கட்டடத்தினுள் நுழைவது முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும்.
16. இளம் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களை காண வரும் பார்வையாளர்களின் சந்திப்பு கண்டிப்பாக விடுதிக் காப்பாளர் கண்காணிப்பிற்குட்பட்டு நடைபெற வேண்டும்.

விடுமுறை...
17. சிறு வயதுடைய ஆண் மற்றும் பெண் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்கள் ஆகியோரை விடுமுறை நாட்களில் வீட்டிற்கு அனுப்பும் போது, அவர்களுடைய பெற்றோர் / பாதுகாப்பாளரிடம் அந்த விடுதி காப்பாளர் ஒப்படைக்க வேண்டும். எந்த ஒரு நேரத்திலும் தனியாகவோ வெளியாட்களுடனோ அனுப்பக் கூடாது.
18. விடுதிக் காப்பாளர் / பாதுகாவலர் பார்வையாளர்களை விடுதிக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது.
19. பார்வையாளர் புத்தகம் விடுதிக் காப்பாளரால் பராமரிக்கப்பட வேண்டும்.
20. பார்வையாளர் புத்தகத்தில் பெயர், முகவரி, உறவு முறை மற்றும் சந்திப்பிற்கான நோக்கம் ஆகியவை பதிவு செய்யப்பட்டு பார்வையாளரால் கையொப்பம் இடப்பட வேண்டும். அங்கு பணிபுரியும் பணியாளர் ஒருவரால் மேலொப்பம் இடப்படவேண்டும்.

அடையாள அட்டை...
21. விடுதிக் காப்பாளர் மற்றும் பாதுகாவலர் ஆகியோருக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.
22. பெற்றோர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பபட வேண்டும்.
23. விடுதிக் காப்பாளர் மற்றும் பாதுகாவலர்களது தொலைபேசி எண் மற்றும் முகவரி ஆகியவை காப்பகத்தின் முன்வாயிலில் எளிதில் காணக் கூடிய வகையில் பார்வையில் வைக்கப்பட வேண்டும்.

நன்னடத்தை சான்றிதழ்...
24. விடுதிக் காப்பாளர் மற்றும் பாதுகாவலர்களாக முன்னாள் குற்றவாளிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமானவர்கள் நியமிக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டு, நியமிக்கப்பட உள்ளவர்களின் முந்தைய நன்னடத்தை பற்றிய சான்றிதழ்களை உள்ளூர் காவல் துறையிடமிருந்து பெற்று, முழுமையான பரிசீலனைக்குப் பின்னரே அவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.

ஆரோக்கியம்...
25. தொற்று நோய் உள்ளவர்கள் நியமிக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டு, நியமிக்கப்பட உள்ளவர்களின் மருத்துவ ஆவணங்கள் உள்ளூர் அரசு மருத்துவமனையால் சான்றளிக்கப்பட வேண்டும். அவர்களின் மன நிலை மற்றும் மன உறுதியினை மதிப்பீடு செய்ய வேண்டும்.

ஊதியம்...
26. அரசு அல்லாத நிறுவனங்களால் நடத்தப்படும் காப்பகங்களில் நியமிக்கப்படும் விடுதிக் காப்பாளர் மற்றும் பாதுகாவலர்களுக்கு போதுமான அளவு ஊதியம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் ஊதியம் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரால் அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
27. சிறு வயதுடைய ஆண் மற்றும் பெண் குழந்தைகள், வளரிளம் பெண்கள் மற்றும் மகளிர் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்து விடுதி / இல்லம் / அமைவிடங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்வதை உறுதி செய்திட மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

காவல்துறையின் பங்கு...
28. பதிவு செய்யப்பட்ட விடுதிகள் / இல்லங்கள் / அமைவிடங்கள் குறித்த பட்டியல் முறையான ஆய்வு மற்றும் கண்காணிப்பிற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். காவல் துறையினரால் மேற்கொள்ளப்படும் ரோந்து பணியில் இத்தகைய அமைப்புகளை, குறிப்பாக இரவு நேரங்களில் கண்காணிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஏற்பாடு செய்ய வேண்டும். மாதத்திற்கு ஒரு முறையேனும் ரோந்துப் பணி பதிவேடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
29. மாவட்ட ஆட்சியர்கள் தங்களது மாதாந்திர சட்டம் மற்றும் ஒழுங்கு கூட்டத்தில் இத்தகைய விடுதிகள் / இல்லங்கள் / அமைவிடங்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

கண்காணிப்பு...
30. மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் வருவாய், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், தொழிலாளர் நலன், சமூக நலம், பள்ளிக் கல்வி, உயர்கல்வி மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் ஆகிய துறைகளைச் சார்ந்த அலுவலர்களை உள்ளடக்கிய அனைத்து மாவட்ட நிர்வாக அமைப்புகள் கண்காணிப்பு நடவடிக்ககைளில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
31. விடுதிகள் / காப்பகங்கள் / அமைவிடங்களின் உரிமையாளர்களுக்கு பாதுகாவலர் நியமனத்தில் உதவிடும் வகையில், மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் ஊர்க்காவல் படையினர்களது பட்டியலை காவல் துறை தயாரிக்க வேண்டும்.

ஆய்வு...
32. அரசால் வகுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கண்ட இல்லங்கள் பின்பற்றுகின்றனவா என்பதை குழந்தைகள் நலக் குழு அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
33. விடுதிகள் / இல்லங்கள் / அமைவிடங்களில் தங்கியிருப்பவர்கள் உடல் ரீதியாகவோ மற்றும் உள ரீதியாகவோ பாதிக்கப்படுவதை தடுப்பது கண்காணிப்பு அதிகாரிகளால் உறுதி செய்யப்ட வேண்டும்.
34. பாதிப்பிற்குள்ளாகக் கூடிய நிலையினை கருத்திற் கொண்டு, மாவட்ட ஆட்சியரால் இவ்வில்லங்கள் வகைப்படுத்தப்பட்டு தேவையான கண்காணிப்பு இயக்கமுறை வடிவமைக்கப்பட வேண்டும்.
35. இத்தகைய அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்திடம் உடனடியாக பதிவு செய்வதை உறுதி செய்திட உள்ளுர் ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளின் வாயிலாக நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

அவசர உதவி எண்...
36. தற்போதுள்ள குழந்தைகள் உதவி எண் 1098-ஐ பயன்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த விளம்பரம் செய்ய வேண்டும்.
37. பாதுகாவலர் மற்றும் விடுதிக் காப்பாளரின் தொலைபேசி எண்ணுடன் கூடிய இவ்வமைப்புகளின் பட்டியல் பொதுமக்களின் தகவலுக்காக மாவட்ட வலைதளத்தில் ஏற்றப்பட வேண்டும். இது, தகுந்த பதிவு செய்யப்படாமல் இயங்கும் அமைப்புகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிப்பதற்கு மக்களை ஊக்கப்படுத்தும்.
பாலியல் வன்முறையை முற்றிலும் தடுக்கக்கூடிய இந்த வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்த விடுதிகளின் உரிமையாளர்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications